No icon

அன்பியக்கூட்டம்-143 மையப் பொருள்: சேர்க்க வேண்டிய செல்வம்!

தொடக்கப் பாடல்: வழிகாட்டும் என் தெய்வமே (அ) பொருத்தமான பாடல்

தொடக்க இறை வேண்டல்: எமக்கு எது தேவையெனத் தெரிந்து வழங்கிவரும் விண்ணகத் தந்தையே, உமக்கு எமது நன்றியோடு கூடிய புகழ்ச்சியைச் சமர்ப்பிக்கின்றோம். எம் வாழ்நாள் மாதிரியாக விளங்கும் ஆண்டவர் இயேசுவேஒளியும் வழியுமாயிருந்து எம்மை ஒவ்வொருநாளும் நிறை உண்மையில் நடத்தும் தூய ஆவியாரே உமக்கு எமது நன்றியோடு கூடிய புகழ்ச்சியைச் சமர்ப்பிக்கின்றோம். இன்று உமது பேரருளால் உம் திருமுன் எம் (அன்பியப் பெயர்) அன்பியக் கூட்டத்தை இணைந்து நடத்தக் கூடி வந்திருக்கும் எங்களுக்கு உமது நிறைவான ஆசிகளை அளித்தருளும். எங்கள் வாழ்வில் நாங்கள் எதைச் சேர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப்பற்றி, இன்றையக் கூட்டத்தில் சிந்திக்க இருக்கின்றோம். இன்றைய உலகின் பல்வேறு தாக்கங்களால் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாத சூழலில் சிக்கித் தவிக்கும் எமக்கு, இந்த அன்பியக் கூட்டத்தின் வழியாக சிறந்த வழியினைக் காட்டியருளும். தேவையற்ற வீண் பொருள்குவிப்புக்கு முதலிடம் கொடுப்பதைவிட, உண்மையான, நன்மையான தேவை என்ன என்பதை உணர்ந்து வாழ, இன்றைய எமது அன்பியக் கூட்டம் வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்!

நற்செய்தி வாசகம் : லூக்  12: 13-21

சிந்தனை:

* தேவைகள் ஓய்வதில்லை; அவை தினந்தோறும் மாறுபடுகின்றன.

* நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் உலகில் எல்லாப் பொருள்களுமே முக்கியம் என்ற பார்வை தலைதூக்கி நின்றுள்ளது.

* மனித வாழ்வு இவ்வுலகத்தோடு நின்றுவிடுவதில்லை; அது நிலை வாழ்வு பெற்று, விண்ணுலகில் வீற்றிருக்க வேண்டியதுமாகும். திருவள்ளுவர் கூறுகிறார்:

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (குறள் 247)

* அருளை நமக்குக் கொண்டுவரும் செயல்களாற்றும் பொருள்களே நாம் சேர்த்து வைக்கத்தக்க செல்வம்.

* அழியும் செல்வம், அழியாச் செல்வம் எவை என நமக்குப் பிறர் கூறத் தேவையில்லை. அவற்றை நமது மனச்சான்றே பட்டியலிடுகிறது.

* பொருள்கள் எதுவுமே தன்னிலேயே அருளுள்ளவை அல்ல; ஆனால், சிலுவை, தீர்த்தம், திருநீறு போன்றவை அருட்கருவிகள் மட்டுமே.

* நற்கருணையை நாம் பொருளாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அது  இயேசுவின் உடனிருப்பு என்பதே நமது நம்பிக்கை.

* முன்மதிச் செயல்பாடு எதுவெனில், நாம் நலமாகவும் பிறர் நலத்தோடு, வளமாகவும் இருக்க - அதுவும் தேவையினுள்ளோருக்கு உதவுவது ஆகும்.

* மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

நற்செய்திப் பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு:

அவன் பேரரசன். அவனுக்கு ஒரே மகன். தனக்குப்பின் பரந்து விரிந்த இந்நாட்டை ஆள அவனுக்குச் சிறப்புத்தகுதியை உருவாக்க எண்ணினான். அவன் தம் மகனை அழைத்து, “இந்த நகரின் தென்கோடியில் ஒரு மலை இருப்பது உனக்குத் தெரியும். அதன் அடிவாரத்தில் ஒரு முனிவர் இருக்கிறார். அவரிடம் போய் ஒரு மாதம் தங்கி பயிற்சி பெற்று வாஎன்றார். மகன் அன்று மாலையே அங்கு சென்றுவிட்டான்.

அந்த முனிவர் வாழ்க்கைக்குத் தேவையான அருங்கலைப் பயிற்சிகள் அனைத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார். அது இறுதி நாள், அவன் முனிவரிடம்என் தந்தை, என்னிடம் நீ என்ன கற்று வந்தாய் எனக் கேட்டால், ஒற்றைச் சொல் பதிலாக நான் என்ன சொல்ல வேண்டும்? என்றான். அதற்கு முனிவர்: “இந்தக் கட்டிடத்தின் பின்புற வாசல் தொடங்கும் இடத்தில் ஓர் அறையில் பல்லாயிரக்கணக்கில் படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்து வாஎன்றார். அவன் உடனடியாகச் சென்று, எல்லாப் படங்களையும் புரட்டிப் பார்த்து, ஒரு படத்தை எடுத்து வந்து, முனிவரிடம் காட்டினான். முனிவர் அதிர்ந்துபோனார். ஏனெனில், அது ஒரு பிச்சைக்காரனுக்கு வயதான பெண்மணி உணவுப் பிச்சைபோடும் படம். இதை எதற்காக எடுத்தாயோ அந்தக் காரணத்தையே உம் தந்தையிடம் சொல் என்றார் முனிவர். தந்தை தன்னைப் பாராட்டுவார் என மனதில் எண்ணியபடியே அரண்மனைக்கு வந்தான் மகன். தந்தை அழைத்தார். என்ன கற்று வந்தாய்? என்றார். தான் எழுதி எடுத்து வந்தஅருள்என்ற வார்த்தையைக் காட்டினான். அதைப்பார்த்த பேரரசன் அதிர்ச்சியில் இறந்துபோனான். அரியணை ஏறிய மகன் தந்தை செய்த எந்த தவற்றையும் செய்யாமல், சிறப்பாக ஆட்சி செய்தான்.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்:

1. அனைவரும் தாங்கள் அருள்பெறும் வழிமுறைகளைக்  கையாள வேண்டு மென்று...

2. உலகில் நுகர்வுக் கலாச்சாரத்தால் தீமைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென்று...

3. எதற்கு முன்னுரிமை  கொடுக்க வேண்டும் என உய்த்துணரும் ஆற்றல் பெற்று இல்லம் நிறுவனங்களை வழி நடத்தும் அருள் பெற...

4. மனச்சான்றின் நற்குரலுக்கு அனைவரும் செவிசாய்த்து, வாழ வேண்டுமென்று...

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்:

1. பங்கிலுள்ள வட்டம், மறைமாவட்டத்திலுள்ள அன்பியங்கள் பங்குபெறக்கூடிய சமூக நல மேம்பாட்டுக் கருத்தரங்குகள் நடத்துதல், (.கா.) இரத்தம், உடலுறுப்புகள் தானம், மறுவாழ்வு இல்லங்கள் நடத்த விழிப்புணர்வு அளித்தல்.

2. அன்பியமாக இணைந்து முதியோர் இல்லம், மருத்துவமனையில் நோயுற்றோர் சந்திப்பு, வசதி இருப்பின் நல வாழ்வு மையங்கள் சந்திப்பு.

நிறைவு வேண்டல்:

அருளின் ஊற்றே அன்பு இறைவா! நாங்கள் இன்றைய அன்பியக் கூட்டத்தில் இறையருள் பெறும் இனிய வழிமுறைகள் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். எனவே, உமக்கு நன்றி கூறுகின்றோம். இக் கூட்டத்தில் நாங்கள் மேற்கொள்ளக் குறித்திருக்கும் செயல் திட்டங்களை நிறைவேற்ற உமது அருளைப் பொழிந்தருளும். ஆமென்.

(அன்பியப் பாடல்)

Comment