No icon

அன்பியக்கூட்டம்-151

மையப்பொருள் : அபூர்வ சந்திப்புகள்

தொடக்கப்பாடல் : உன்னில் நான் ஒன்றாக () வேறுபாடல்

தொடக்க இறைவேண்டல்: அபூர்வ சந்திப்புகளால் எங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் அன்புமிக்க வானகத் தந்தையே! உமது அருள் வளத்தால் எம்மை ஆண்டு நடத்தும்! அபூர்வ சந்திப்புகளால் எமக்கு ஆற்றல் அளிக்கும் இனிய இயேசுவே! எம்மை வளம் பெறச்செய்யும்! அபூர்வ சந்திப்புகளால் எமக்கு ஆற்றல் அளிக்கும் இனிய இயேசுவே எம்மை வலிமை பெறச்செய்யும். தூய ஆவியாரே! எம் வாழ்வில் பேரொளியைத்தாரும். இன்று நாங்கள் திரு/திருமதி ---- அவர்கள் இல்லத்தில் கூடி, எங்கள் --- அன்பியக்கூட்டத்தை வழிநடத்த இருக்கின்றோம். உமது பேரருளால் ஒன்று சேர்த்த எங்களை இக்கூட்டத்தில் பங்கேற்பதன் வழியாக  நாங்கள் எங்களது அன்றாட சந்திப்புகளை உமது ஆட்சியின் கருவிகளாக மாற்றவும்எங்கள் உடல் - ஆன்ம சிந்தனைகள் அனைத்தும் உமது அன்புப் பணிகளுக்கு உதவுபவையாக வெளிப்படவும், எங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் புத்துணர்வு பெற்றவர்களாக வாழ்வோமாக. எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் உம்மைக் கெஞ்சி கேட்கிறோம். எங்கள் நல்ல தந்தையே ஆமென்.

நற்செய்தி வாசகம்: யோவான் 4: 5-42

சிந்தனை:

* திறந்த மனத்தோடு மற்றவர்களிடம் பழக வேண்டும். படைப்பால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற நிலை கிடையாது.

* இயேசு எல்லா இடங்களிலும் குறிப்பாக சமாரியப் பெண்ணிடமும் தன்னை வெளிப்படுத்தியது போல நாமும் நம்மை வெளிப்படுத்த வேண்டும்.

* உறவும், உரையாடலும் உண்மையற்றவைகளாக அமைய வேண்டும்.

* ஒன்று கூடும் வாய்ப்பை உன்னதமாக புனித நிலையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அபூர்வ சந்திப்புகள் புதிய வரலாறு படைக்கும் புனித நிகழ்வுகளாக அமைய வேண்டும்.

* எடுத்துக்காட்டுகளாக பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் - மூன்று மனிதர்கள், கடவுள் - மோசே, கடவுள் - சாமுவேல் புதிய ஏற்பாட்டில், வானதூதர் கபிரியேல் - மரியா, மரியா - எலிசபெத்து, இயேசு - சமாரியப்பெண், கடவுள் - திருத்தூதர் பவுல் போன்று பல சிறப்புமிகு சந்திப்புகள்.

* சந்திப்பு: சந்தித்தல், அறிதல், ஏற்றல், அர்ப்பணம் மற்றும் பணியேற்றல் வரிசையில் அமைவது நல்லது.

* பிறவினத்தார்க்கு நற்செய்தி அறிவிப்பு சந்தித்தலின் சிறப்பு நிகழ்வாக இயேசு - சமாரியப்பெண் சந்திப்பு அமைந்துள்ளது.

* அன்பிய உறுப்பினர்களின் ஒவ்வொரு சந்திப்பும் குறைகள் அகற்றும் செயல்பாடுகளாகவும் நிறைவு நோக்கிய பயணமாகவும் இருக்கட்டும்.

நற்செய்தி பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு

அந்த நற்செய்திப் பணியாளர் மாபெரும் அருங்கொடை மாநாட்டில் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது. நான் கல்லூரிப் படிப்பில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவன். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் ஓர் ஆதரவு இல்லத்தில் வளர்ந்தவன். எனக்கென்று எதிர்கால இலக்கை உருவாக்கப் பலர் முனைந்தபோது, அவர்கள் ஆலோசனைகள், அறிவுரைகளை உதறித்தள்ளியவன். பலரும் என்னை வெறுக்கும் பண்பற்ற செயல்பாடுகளான மது அருந்துதல், திருடுதல் போன்றவற்றில் பொழுதைப்போக்கியவன். ஒரு நாள் மாலையில் உணவின்றி ஒரு குளத்தின் படிக்கட்டுகளில் பசியோடு படுத்திருந்தேன். அப்போது, ஓர் இரவுப் பிச்சைக்காரர் என்னை வந்து தட்டி எழுப்பி இதோ சாப்பிடு என்றார். அப்பப்பா என்ன ருசி, வயிராறச் சாப்பிட்டேன். அந்த உணவு கொடுத்த மகான் இயேசு உன்னை அன்பு செய்கிறார் என்று கூறி ஓர் இடத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள சில பணியாளர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கள் என்னை வழிநடத்தினார்கள் என்பதைவிட, அவர்கள் என்னைச் சுமந்து காத்தார்கள். ஆம், இருபது வருடங்களுக்கு முன் இதே இடத்தில்தான் அந்த நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. எனக்குப் புதுவாழ்வு வந்த சந்திப்பு நடந்த இடம் இதுதான். இதோ இந்தப் பெரியவர்தான் என்னை இவர்களிடம் அறிமுகப்படுத்திய மகான். இவர் என்றும் என் அன்பிற்குரியவர் என்று கூறி, அவரது பாதமலர்களைத் தொட்டு வணங்கினார். இன்று நான் மிகப்பெரிய போதகர் எனச் சொல்லப்படுவதற்கு இவரது சந்திப்பே தொடக்கமாக இருந்தது என்றார்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கான கருத்துகள்

1. திருஅவைப் பணியாளர்கள் சான்று வாழ்க்கையில் ஊன்றி நின்று நம்பிக்கையாளர்களை இத்தவக்காலத்தில் சிறப்பாக வழிநடத்த...

2. நாட்டுத்தலைவர்கள் நேரிய மனத்தோடு எல்லாத் தரப்பு மக்களையும் சந்தித்து சிறப்பான ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட...

3. அன்பியத்தில் அமையும் சந்திப்புகளெல்லாம் அரும்பணிகளாக அமைய...

4. இயற்கை பேரிடரால் அல்லலுறும் துருக்கி - சிரியா மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கிடைத்திட...

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்:

1. அன்பிய உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, அன்பிய இல்லங்கள் சந்திப்பை நடத்தி அவர்கள் தங்கள் உறவு வாழ்வில் மேம்பட வழிகாட்டுதல்.+

2. முதியோர், நோயாளர் இல்லங்கள் சந்திப்பில் (சிறைப்பணி) முழுக் கவனம் செலுத்துதல்.

நிறைவு வேண்டல்

சந்திப்புகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் சக்தி படைத்த ஆண்டவரே, இன்று எங்கள் அன்பியக் கூட்டத்தில் ஈடுபாட்டோடு நாங்கள் பங்கேற்க நீர் புரிந்த கொடைகளுக்கும், இக்கூட்டத்தில் எங்களது வாழ்வு எல்லா நிலையிலும் மேம்பட நீர் காட்டிய வழிகளுக்கும் இதய நன்றி கூறுகின்றோம். எங்களை சந்திப்போரை உம் தூதுவர்களாகவும், நாங்கள் சந்திப்போரை எம் விருந்தினர்களாகவும் ஏற்று வாழ அருள் தாரும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்!

(அன்பிய பாடல்)

Comment