No icon

ஆசீரால் நிறைந்த மரியா, ஆசீராக விளங்குகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஆசீரால் நிறைந்த மரியா, ஆசீராக விளங்குகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்
சனவரி 1 ஆம் தேதி  புத்தாண்டு நாளன்று கடவுளின் தாயான மரியா பெருவிழா திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு உருவாகியிருந்த நரம்பு தொடர்பான பிரச்சனையால், முன்னின்று நடத்த இயலாத நிலையில், இத்திருப்பலியை, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை எழுதியிருந்த மறையுரையை வாசித்தார்.

ஆசீர்வதித்தல், பெற்றெடுத்தல், கண்டுபிடித்தல் என்ற மூன்று வினைச்சொற்கள், இறைவனின் தாயிடம் முழுமையடைந்தன என்பதை இன்றைய திருப்பலியின் வாசகங்கள் நமக்குக் கூறுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் எழுதியிருந்த மறையுரையில் குறிப்பிட்டார்.

நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!" (எண். 6:23-24) என்று எண்ணிக்கை நூலில் நாம் கேட்கும் சொற்கள், இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆசீர்வதிக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையின் முதல் கருத்தாகக் கூறியிருந்தார்.

இதையொத்த ஓர் ஆசீரை, நாம் செபமாலை செபிக்கும் வேளையில், அன்னை மரியாவை நோக்கி கூறுகிறோம் என்பதை, தன் மறையுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஆசீரால் நிறைந்த மரியா நம் அனைவருக்கும் ஆசீராக விளங்குகிறார் என்று எடுத்துரைத்தார்.

கடவுளின் மகன் பெண்ணிடமிருந்து பிறந்தவராக இவ்வுலகிற்கு வந்தார் என்பதை, புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறியுள்ளார் என்று, தான் எழுதிய மறையுரையில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியாவின் வழியே கடவுளைச் சந்திப்பது மனிதர்களுக்கு எளிதானது என்று கூறினார்.

ஓர் உயிரை கருவில் தாங்கி, பேணி வளர்த்து, பெற்றெடுப்பதில் பெண்கள் பெரும் பொறுமையை வெளிப்படுத்துகின்றனர் என்பதை, தன் மறையுரையில் பகிர்ந்துள்ள திருத்தந்தை, பெண்கள் வழியே, இவ்வுலகம், தன் எதிர்காலத்தை பெற்றெடுக்கிறது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

இடையர்கள் "மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்" (லூக். 2:16) என்ற நற்செய்தியின் கூற்றில், இடையர்கள் மாபெரும் காட்சிகளையும், அடையாளங்களையும் காணவில்லை, மாறாக, ஓர் எளிய குடும்பத்தைக் கண்டனர் என்பதை உணர்கிறோம் என்ற கருத்தை, திருத்தந்தை தன் மறையுரையில் கூறியுள்ளார்.

இடையர்கள் தாங்கள் கண்டதை தங்கள் தனிப்பட்ட சொத்தாக வைத்துக்கொள்ளாமல், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதைப்போல், நாம் ஒவ்வொருவரும் நாம் கண்டடைந்த கடவுளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை திருத்தந்தை தன் மறையுரையின் மூன்றாம் கருத்தாக முன்வைத்தார்.

Comment