No icon

பாவிகளோடு தன் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசு

பாவிகளோடு தன் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசு
இயேசுவின் திருமுழுக்கு திருவிழா சிறப்பிக்கப்பட்ட ஞாயிறன்று, அனைத்து விசுவாசிகளும் தூய ஆவியாரைப் பெற்று இறைவனின் குழந்தைகளாக மாறிய தங்கள் திருமுழுக்கு நாளை நினைவுகூர்ந்து கொண்டாடுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவான சனவரி 10 ஆம் தேதி ஞாயிறன்று, தன் நூலக அறையிலிருந்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பொது வாழ்வு துவக்கப்பட்டதைப் பற்றி விவரிக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், ஒவ்வொருவரின் திருமுழுக்கு நாளை நினைவுகூருமாறும் அழைப்புவிடுத்தார்.

மூன்று ஞானிகளின் வருகைக்குப்பின், முப்பது ஆண்டுகள் சென்று இடம்பெற்ற இயேசுவின் திருமுழுக்கு, அவரின் முப்பது ஆண்டு வாழ்வில், அவர் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவராக, குடும்பத்தில் இணைந்து வாழ்ந்து, கல்வி கற்றலிலும், பணிபுரிதலிலும் ஈடுபட்ட, ஒரு மறைந்த வாழ்வை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது என்று கூறினார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், முப்பது ஆண்டுகள் சாதாரண ஒரு வாழ்வை வாழ்ந்த இயேசு, மூன்று ஆண்டுகளே பொதுவாழ்வில் ஈடுபட்டார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம் வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மறைக்கப்பட்டதாக இருந்தாலும், அதிக முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை உணரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

பாவங்களுக்காக மன்னிப்பை வேண்டுவதுடன், மனம் திருந்துதலுக்குரிய விருப்பத்தை வெளியிட்ட யோர்தான் நதி திருமுழுக்கு, இயேசுவுக்குத் தேவையில்லையெனினும், முப்பது ஆண்டுகால மறைந்த வாழ்வுக்குப்பின், அத்திருமுழுக்குடனேயே இயேசுவின் பொதுவாழ்வு துவங்குகின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பாவிகளோடு இருக்க விரும்பி, அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல், மேலிருந்துகொண்டே நம்மை மீட்க இயேசு விரும்பவில்லை, மாறாக, பாவங்களை தன்மீது சுமந்துகொண்டு, நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் அவர் என்பதை காண்பிக்கின்றது என்றார்.

தன் தாழ்ச்சியின் வழியாக, உலகின் தீமைகளை வெற்றிகண்ட இயேசு, நாமும் நமக்கு அடுத்திருப்பவர்களை தீர்ப்பிடாமல், அவர்களுடன் இறைவனின் அன்பை பகிர்ந்து வாழவேண்டும் என விரும்புகிறார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவிகளோடு தன் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவின் மீது தூய ஆவியார் இறங்கி வந்ததும், வானகத்திலிருந்து, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என, தந்தையாம் இறைவன் கூறியதும், இறைவனின் திருமுகம் இரக்கம் என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவிகளாகிய நம் நிலைக்கு இறங்கிவந்த இயேசுவின் மீது தூயஆவியார் இறங்கி வந்தார் என மேலும் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின்போது, இயேசுவின் அன்பில் மூழ்கி எழும் அதேவேளை, தூய ஆவியாரும் நம்மீது இறங்கி வருவதுடன், இறைத்தந்தையும் நம்மை நோக்கி, ’என் அன்பார்ந்த மகன் நீயே’ என உரைக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

இறைவனின் இரக்கம் மிகப் பெரியது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குப் பெறாதவர்களும் இறை இரக்கத்தைப் பெறமுடியும், அவர்கள் திறந்த இதயம் கொண்டிருந்தால், இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு வாழமுடியும் என மேலும் கூறினார்.

Comment