புதன் மறைக்கல்வியுரை - வழித்துணையாய் வரும் திருச்சட்டம்
- Author --
- Wednesday, 08 Sep, 2021
புதன் மறைக்கல்வியுரை - வழித்துணையாய் வரும் திருச்சட்டம்
புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் குறித்து மறைக்கல்வி தொடர் ஒன்றை புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் புனித பவுல், ‘வழித்துணையாய் வரும் திருச்சட்டம்’ என்று கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து, தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். முதலில் புனித பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் மூன்றாம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுத் துவங்கியது.
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரரே, சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசத்தால், வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளாகிய நாம், மோசேயின் சட்டத்தால் கட்டுண்டவர்கள் அல்ல, மாறாக, நற்செய்தியின் விடுதலை தரும் வாழ்க்கை முறையை வாழ அழைக்கப்பட்டவர்கள் என்கிறார் புனித பவுல். சட்டம் எப்போதும் நடைமுறையில் உள்ளது. அப்படியானால், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், புனித பவுல், என்னச் சொல்லவருகிறார் என நோக்குவோம்.
சட்டத்தை ஒரு வழித்துணை என்கிறார் புனித பவுல். இந்த உருவகத்தை நன்முறையில் புரிந்துகொள்ள முயல்வோம். மீட்பின் ஆதாரமாக இருக்கும், கிறிஸ்துவில் நம் விசுவாசத்தைத் தூண்ட, இயேசுவின் இறப்பு, மற்றும் உயிர்ப்பு குறித்து போதித்தார் புனித பவுல். ஆகவே, இயேசுவின்மீது நாம் கொண்ட விசுவாசத்திற்கு முன், விசுவாசத்திற்குப் பின் என இரு வாழ்வு இருப்பதுபோல், சட்டத்தை கடைப்பிடிப்பதிலும் உள்ளது. முதல் வரலாறு, சட்டத்திற்கு கீழானதாகவும், இரண்டாவது வருவது, தூய ஆவியாரைப் பின்பற்றி வாழ்வதாகவும் உள்ளது (கலா 5:25). முதலில் அடிமைநிலையில், அதாவது பாவத்தின் அடிமையாக வாழ்ந்த நாம், காலப்போக்கில், நம் பாவங்கள் குறித்து உணர்ந்து, புதிய விசுவாச வாழ்வைத் துவக்கினோம்.
நாம் நமது ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, சட்டத்தை ஒரு வாய்ப்பாக்கிக்கொண்டு, பாவ இச்சைகள், நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின; அதனால் விளைந்த பயன் சாவு. ஆனால், இப்பொழுது, நம்மை ஒடுக்கி வைத்திருந்த சட்டத்தைப் பொருத்தமட்டில் நாம் இறந்துவிட்டதால், அச்சட்டத்தினின்று விடுதலை பெற்றோம்’ (உரோ 7:5-6) என உரோமையருக்கு எழுதிய திருமடலில் உரைக்கும் புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில், ‘பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே’ (1 கொரி 15:56) எனவும் எடுத்துரைத்துள்ளார். சட்டத்தை, வழித்துணை என்று, புனித பவுல் குறிப்பிடுவதை, இஸ்ரயேலரின் வரலாற்றில் சட்டம் எவ்விதம் பங்காற்றியது என்பதை உற்றுநோக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கூடிசயா எனப்படும் மோசேயின் இறைநீதித்தொகுதி என்பது, இறைவன் தன் மக்கள் மீது காட்டிய பெருந்தன்மையாகும். இது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், மக்களின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும், நன்னெறி வாழ்வுக்கும் உதவியுள்ளது. சட்டத்திற்கு அடிமைப்பட்டிருந்த நிலையை விளக்க, சிறுவர் நிலையை ஒப்பிட்டுக் கூறும் புனித பவுல், ‘தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை, அவர்களுக்கும், அடிமைகளுக்கும், வேறுபாடு எதுவும் இல்லை; தந்தை குறித்த நாள் வரும்வரை, அவர்கள் மேற்பார்வையாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறே, நாமும், சிறுவர்களாய் இருந்தபோது, உலகின் பஞ்சபூதங்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம் (கலா 4: 1-3), என கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்.
அனைத்துச் சட்டங்களும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருவதில்லை. ஓரளவு வயதுவந்தவுடன் அங்கு சுதந்திர முடிவெடுக்கும் உரிமை கிடைக்கிறது. அதுபோல், விசுவாசத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது, அங்கு நமக்கு அதுவரை வழித்துணையாக வந்த சட்டம் மறைந்து, புதியதொரு வழிகாட்டுதல் கிட்டுகின்றது. சட்டத்தின் மீதான மதிப்பு குறித்த கல்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில், அது சரியான முறையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, தவறானப் பாதையில் நடைபோடுவதற்கு காரணமாகிவிடக்கூடாது. நாம் இன்னும் கட்டளைகளின்படி வாழும் ஒரு நிலையில் தொடர்ந்து உள்ளோமா, அல்லது இறைக்குழந்தைகளுக்குரிய அருளைப் பெற்றவர்களாக, அன்பின் வாழ்வை நடத்துகிறோமா என்பது குறித்து சிந்திப்போம்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
Comment