No icon

திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வியுரை:

உரிமை வாழ்வு, கடவுளின் அன்பில் பிறக்கிறது

அக்டோபர் 20 புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திற்கு வருகைதந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த வயதுமுதிர்ந்தோர், புதுமணத் தம்பதியர் உட்பட, ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு காலை வணக்கம் சொல்லி, தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார். கடந்த 11 வாரங்களாக புதன் மறைக்கல்வியுரைகளில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் அவர் பதிவுசெய்துள்ள முக்கிய கருத்துக்களை விளக்கிவந்த திருத்தந்தை, இப்புதனன்று அதன் 12வது பகுதியாக, உரிமை வாழ்வு, அன்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.

“அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது” (கலா.5,13-14)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கடந்த சில வாரங்களாக நம் புதன் மறைக்கல்வியுரைகளில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறியுள்ள,  நம்பிக்கையால் கிடைத்த உரிமை வாழ்வு பற்றி சிந்தித்துவருகிறோம். வீடுகளில் தன்னிச்சையாக, உரிமையோடு அணுகுகின்ற மற்றும் செயல்படுகின்ற சிறுபிள்ளைகள் பற்றி இயேசு கூறியது, இப்போது நினைவுக்கு வருகிறது. நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் (மத்.18,1-5) எனவும் இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே நம் ஆண்டவரை அணுகுவதற்கும், அவருக்குத் திறந்தமனதாய் இருப்பதற்கும் அச்சம் இருக்கக் கூடாது. அவரை உரிமையோடு அணுகுவதற்கு நமக்குப் பாடம் கற்றுத்தரும் சிறுபிள்ளைகளுக்கு நன்றி கூறுகிறேன். கிறிஸ்துவில் உரிமை வாழ்வுக்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், நம்பிக்கையில் நாம் பெறும் மிகப்பெரும் புதியவாழ்வு பற்றி படிப்படியாகக் கூறுகிறார். நம்பிக்கையில் புதியவாழ்வு என்றால் என்ன? இவ்வாறு திருத்தந்தை இப்புதன் மறைக்கல்வியுரையை முதலில் இத்தாலியத்தில் தொடங்கினார். அவ்வுரையின் சுருக்கம் இதோ...

திருமுழுக்கில் நாம் பெற்றுள்ள புதிய வாழ்வு, இறைத்தந்தையின் பிள்ளைகளாக நம்மை ஆக்குகிறது. அதோடு, பாவம் மற்றும், மரணத்தின் அடிமைத்தளையிலிருந்து நமக்கு விடுதலையளிக்கிறது. கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள உரிமை வாழ்வு, தனித்து சுவைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு அல்ல, மாறாக, அது, கிறிஸ்தவக் குழுமங்களில் “ஒருவருக்கு ஒருவர் அன்பின் பணியாளர்களாய்” இருப்பதற்காக (கலா.5,13) அளிக்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் போதிக்கிறார். ஏழைகளுக்கு மிகத்தாராளத்தோடு ஆற்றப்படும் அன்புப்பணியின் வழியாக மட்டுமே, கிறிஸ்துவில் நம் உரிமை வாழ்வு வளரும் மற்றும், கனிதரமுடியும் எனவும், புனித பவுல் நமக்குச் சொல்கிறார். இயேசு, தம் பாடுகள், மற்றும், மரணத்திற்கு முந்திய நாளில், தம் சீடர்களோடு இறுதி இரவு உணவு அருந்தியபோது, தன்னலமற்ற அன்பு வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார். அவர் அந்நிகழ்வில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அவ்வாறே நாமும் செயல்படவேண்டுமென்று அவர் போதிக்கிறார். கிறிஸ்தவ உரிமை வாழ்வு, முக்கிய சமுதாய அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. தற்போதைய பெருந்தொற்றின் பாதிப்புக்கள், உரிமை வாழ்வின், தான் என்ற தன்னலக் கருத்தியலைக் குறைத்து, ஆழமான குழும உணர்வைக் கண்டுணர அழைப்புவிடுக்கிறது. கிறிஸ்துவின் அருளின் விடுதலையளிக்கும் வல்லமைக்குச் சான்றுபகர்வதன் வழியாக, உண்மையான உரிமை வாழ்வு, கடவுளின் அன்பிலும், பிறரன்பில் நிறைவைக் காண்பதிலும் இருந்து பிறக்கின்றது என்பதை, மற்றவர் பார்ப்பதற்கு நாம் உதவுவோமாக. 

இவ்வாறு இப்புதன் மறைக்கல்வியுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நம்மை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவும், உண்மையாகவே விடுதலைபெற்றவர்களாய், இரக்கம் மற்றும் பிறரன்பின் வெளிப்படையான அடையாளங்களோடு அன்புகூரவும், நமக்கு உதவுமாறு பிறரன்பின் எடுத்துக்காட்டாகவும், அனைவருக்கும் பணியாளாகவும் இருந்த இயேசுவின் அருளை இறைஞ்சுவோம் என்று கூறினார். பின்னர் அனைவரும் ஆண்டவரின் அமைதி மற்றும், மகிழ்வால் நிரப்பப்பட செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

Comment