No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை: தலைமுறைகளுக்கு இடையே நல்லுறவு கண்டுணரப்பட

வத்திக்கானில் பிப்ரவரி 23 ஆம் தேதி, புதன் காலை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் காத்திருந்த திருப்பயணிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ், வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் யோவேல் (2:28,29,32) இறைவார்த்தை அடிப்படையில், புதன் மறைக்கல்வியுரையை வழங்கினார்.

 மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, இறைவார்த்தையின் ஒளியில், முதிர்ந்த வயதின் அர்த்தம் மற்றும் அதன் மதிப்பு பற்றிய புதிய பகுதி ஒன்றைத் தொடங்குகிறோம். அதிகரித்து வரும் ஆயுள் காலம், நம் மத்தியில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மனித வரலாற்றில் முதியோரின் எண்ணிக்கை, இந்த அளவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, தலைமுறைகளுக்கு இடையே, உறவுகள் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. நமது புறக்கணிப்புக் கலாச்சாரம், பல நேரங்களில் இளமையை உயர்த்திப் பேசுகிறது.

மேலும், அக்கலாச்சாரம் வயது முதிர்ந்தோரை, தேவையற்ற சுமையாக அகற்றிவிடவும் செய்கிறது. ஆதலால், வாழ்வின் முதுமை நிலை, வயது முதிர்ந்தோருக்குக் கொணரும் ஆன்மீக நலன்கள் மற்றும் குழுமங்களின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக அவர்கள் அவைகளுக்கு வழங்கக்கூடிய கொடைகள் ஆகியவற்றை உணர்ந்து, மதிக்க வேண்டியது முக்கியம். இந்த ஒரு நிலையில், நம் மனிதக் குடும்பத்தின் வருங்காலத்தைக் கண்முன் கொண்டு, திருவிவிலியத்திலிருந்து தூண்டுதல் பெற்றவர்களாய், தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஓர் இணக்க நிலையை, ஒரு நல்லுறவை, ஓர் உடன்படிக்கையை நாம் கண்டுணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதியோர் கனவுகளையும், இளைஞர்கள் காட்சிகளையும் காண்கின்ற காலம் பற்றி இறைவாக்கினர் யோவேல் (காண்க.யோவே 2:28) பேசியுள்ளார்.

இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில், இளையோர் வருங்காலத்தை நோக்குகையில், அவர்களுக்கு ஞானமுள்ள வழிகாட்டல், நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை வழங்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது! இத்தகைய சிந்தனைகளைத் தொடங்கியிருக்கும் நாம், நீதியும் உடன்பிறப்பு உணர்வும் கொண்ட ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு, வயது முதிர்ந்தோர் ஆற்றும் மிகப்பெரும் பங்களிப்பை நாம் புரிந்துகொள்ளவும், அதனைப் போற்றவும் நமக்கு உதவுமாறு தூய ஆவியாரிடம் வேண்டுவோம்என்றார்.

பின்னர் திருப்பயணிகள் அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் பொழியப்படுமாறு செபித்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார்.

Comment