திருத்தந்தை
முதியோர், இளையோருக்குச் சான்றுகளாகத் திகழவேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Friday, 19 Aug, 2022
ஆகஸ்ட் 17, புதன் கிழமை இறைவாக்கினர் தானியேல் நூலில் (தானி.7,9-10) முதுமை குறித்து பதிவுசெய்யப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து, புதன் மறைக்கல்வியுரையில் தன் சிந்தனைகளை திருத்தந்தை வழங்கினார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். நாம் இப்போது வாசிக்கக் கேட்ட தானியேலின் இறைவாக்குக் கனவு, ஒரு புதிரான, அதேநேரம் மகிமையான கடவுளைக் கண்ட காட்சியை அறிவிக்கிறது. இதே காட்சி, திருவெளிப்பாடு நூலின் தொடக்கத்தில், உயிர்த்த இயேசுவோடு தொடர்புடையதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் இறைவாக்கினருக்கு, மெசியாவாக, குருவாக, அரசராக, எல்லையில்லா ஞானம் நிறைந்தவராக, என்றென்றும் மாறாதவராகத் தெரிகிறார் (தி.வெ.1:12-15). அவர், காட்சி காண்பவர் தோள்மீது தம் கரங்களை வைத்து, “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன்” (தி.வெ.1,17-18) என்று உறுதியளிக்கிறார். இவ்வாறு, மனிதருக்கு கடவுள் பற்றி எப்போதும் இருக்கின்ற அச்சம், மற்றும், மனத்துயரின் இறுதித் தடை மறைகின்றது. வாழும் கடவுள் இதை நமக்கு உறுதிப்படுத்துகின்றார். அவரும் இறந்தார். ஆயினும் அவருக்கென்று முதலும் முடிவுமாக குறிக்கப்பட்டுள்ள இடத்தில் இப்போது இருக்கின்றார்.
அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர்விட்டன. அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது. அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது. (தி.வெ.1:12-14)
இக்காட்சியில் தெரிந்த அவரது ஆடை, அவரது கண்கள், அவரது குரல், காலடிகள் ஆகிய அனைத்தும் மாட்சியுடன் விளங்கின. வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்த தலைமுடி, வயதான மனிதரின் முடி போன்றது. அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். பொன் விளக்குத்தண்டுகள் நடுவே அவர் வீற்றிருக்கின்றார் (காண்க.தி.வெ.1:13-14) என திருவெளிப்பாட்டு நூலில் குறிப்பிடப்படுபவர், தானியேலின் இறைவாக்கில் குறிக்கப்பட்டுள்ள “தொன்மை வாய்ந்தவர்” (தானி.7,9) என்பவரோடு ஒத்திருக்கின்றார். காலத்தாலும், ஆட்சி அதிகாரத்தாலும் வணங்கப்படும் தந்தையாம் கடவுள் பற்றிய இந்த உருவகம், அனைத்தையும் கடந்த, அவரது என்றும் உள்ள தன்மையையும், இவ்வுலகையும், அதன் வரலாற்றையும் அவர் தொடர்ந்து பராமரிப்பதையும் வெளிப்படுத்துகிறது. “மானிடமகனைப் போன்ற ஒருவர்” என்ற உருவம், நம் மீட்புக்காக இறைத்தந்தையால் நம் உலகிற்கு அனுப்பப்பட்ட என்றுமுள்ள மகன் இயேசுவைப் பற்றிய இறைவாக்காகும். கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறும் என நீண்ட காலமாக காத்திருந்த இரு வயது முதிர்ந்த சிமியோனும், அன்னாவும், குழந்தை இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டபோது, அவரைக் கையிலேந்தி, அவர்கள் காத்திருந்தவரை அவரில் கண்டுகொண்டார்கள். இவ்வாறு வயதுமுதிர்ந்த தம்பதியரின் பிரசன்னம், அவர்களின் சிறப்பான அழைப்புப் பற்றி நமக்குச் சொல்கின்றது. இளையோரை இவ்வுலகத்திற்குள் வரவேற்கவும், தங்கள் வாழ்வை ஓர் ஆசிராகக் கொண்டாடவும், நமக்கென வழங்கப்பட்டுள்ள கடவுளின் மீட்புத்திட்டத்தில், பல்வேறு தலைமுறைகளுக்கு இடையே ஒன்றிப்புக்குச் சான்றுபகரவும் அவர்கள் அழைப்புப் பெற்றுள்ளனர். இளையோர், கடந்தகாலத்தோடுள்ள தொடர்பில் வேரூன்றி, “தொன்மை வாய்ந்தவரான” கடவுள், நம் அனைவருக்கு முன்பாக திறந்தவைத்துள்ள வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவுமான ஞானத்தில் பக்குவமடைய, அவர்களுக்கு உதவுவதில் வயது முதிர்ந்தோர் ஓர் இன்றியமையாத பங்கைக் கொண்டிருக்கின்றனர்.
டுவிட்டர் செய்தி
“பயன், வசதி, மற்றும், கடமை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது அன்பு; இது வியப்பைத் தோற்றுவிக்கிறது, படைப்பாற்றல் திறனையும், சுதந்திரமாக தன்னையே வழங்கும் பேரார்வத்தையும் தூண்டுகின்றது”
“மகிமையடைந்துள்ள இறைவனின் அன்னையை நோக்கும்போது, உண்மையான அதிகாரம் பணிபுரிவதில் இருக்கின்றது என்பதையும், ஆட்சிபுரிதல் என்பது, அன்புகூர்வதாகும், மற்றும், இதுவே விண்ணகம் செல்லும் பாதையாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்”
“கடவுள் நம் செபங்களுக்குப் பதிலளிக்கவில்லை, செபித்து நாம் நேரத்தை வீணாகச் செலவழிக்கின்றோம், எல்லாமே வீண் போன்ற உணர்வுகள் எழுகின்றபோதும்கூட, நாம் எப்போதும் செபிக்கவேண்டும். விண்ணகம் நமக்கு மறைவாய் இருக்கின்றது என்று உணரும்போதும்கூட கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்வதை நிறுத்திவிடக் கூடாது”
தனித்துவமிக்க, சுதந்திரமான, மற்றும் உயிர்த்துடிப்புள்ள நாம், கடவுளின் அன்புக் கதையை வாழவும், துணிச்சலும், உறுதியும்நிறைந்த தீர்மானங்களை எடுக்கவும், அன்புகூர்வதன் வியத்தகு சவாலை ஏற்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்
தங்களைப் பணக்காரர்களாகவும், வெற்றியாளர்களாகவும், பாதுகாப்பாக இருப்பவர்களாகவும் நினைப்பவர்கள், எல்லாவற்றையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக எண்ணிக்கொண்டு கடவுளிடமிருந்தும், தங்களைச் சுற்றியுள்ள சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றனர்
Comment