No icon

புதன் மறைக்கல்வியுரை-

ஆண்டவரே உம் வாக்கே என் காலடிக்கு விளக்கு

மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் மறைவினால் வத்திக்கான் நகரமே துன்ப மேகம் சூழப்பட்டுள்ளதாக காட்சியளிக்கின்ற நிலையில், மக்கள் திரள் திரளாக வந்து இறுதி மரியாதையைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மூன்றாம் நாளாம் சனவரி 04 புதன்கிழமை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு தெளிந்துதேர்தலின் இறுதி உரையாக ஆன்மிகத்துணை என்பதன் அடிப்படையில் மறைக்கல்வியுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் முதலில் ஆண்டவரே! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே என்றுரைக்கும் திருப்பாடல் 119லிருந்து நான்கு இறைவசனங்கள் வாசிக்கப்பட்டன. அதன்பின் அனைவருக்கும் காலை வணக்கம் கூறி தன் மறைக்கல்வியை இத்தாலியத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கினார்.

திருப்பாடல் – 119 105, 129, 130, 165

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.

அன்பான சகோதர சகோதரிகளே, வணக்கம்!

புதன் மறைக்கல்வியுரையைத் தொடங்குவதற்கு முன்பு, மறைந்த முன்னாள்   திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் அனைவரோடும் இணைந்து என் எண்ணங்களை மறைக்கல்வியின் உன்னத ஆசிரியரான அவர் பக்கம் திருப்ப விரும்புகின்றேன். அவருடைய ஆழமான மற்றும் கனிவான சிந்தனை, சுயகுறிப்பு அல்ல மாறாக திருஅவையை நோக்கமாகக் கொண்டது, ஏனென்றால் அவர் எப்போதும் இயேசுவை சந்திப்பதற்கு நம்மோடு இணைந்து நடைபோட விரும்பியவர். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தவரும், வாழும் கடவுளுமாகிய ஒரே இறைவனிடம் நம்மைக் கரம் பிடித்து வழி நடத்திச் சென்றவர் அவர். நம்பிக்கையின் மகிழ்வையும் எதிர் நோக்கின் வாழ்வையும் கிறிஸ்துவில் மீண்டும் கண்டறிய அவர் நமக்கு உதவுவாராக.

தெளிந்து தேர்தலில் ஆன்மிகத்துணை என்ற கருப்பொருளில் இன்றைய நாள் கருத்துக்களை உங்களுக்கு வழங்க விரும்புகின்றேன். சுய அறிவுக்கு மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஆன்மிகத்துணை தெளிந்து தேர்தலில் தவிர்க்க முடியாத நிபந்தனைகளுள் ஒன்றாகும். நம்மில் உள்ள கடவுளின் அருள் எப்போதும் அதன் இயல்பில் இயங்குகின்றது. மாற்கு (4:3-9) நற்செய்தியில் குறிப்பிடப்படும் விதைப்பவர் உவமையில் கடவுளின் அருளை நல்ல விதைக்கும் நமது இயல்பை நிலத்திற்கும் ஒப்பிடலாம். முதலாவதாக, நம்மைப்பற்றி நாம் மிகவும் தெரிந்து கொள்வது முக்கியம். நமது பலவீனங்கள், உணர்வுகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தயங்கக் கூடாது. பலவீனம் என்பதும் உண்மையில் செழுமையே. அதை நாம் மதிக்கவும் வரவேற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது கடவுளிடம் ஒப்படைக்கப்படும் பொழுது, நம்மை மென்மை, கருணை, மற்றும் அன்பின் திறன் கொண்டவர்களாக மாற்றுகின்றது. தூய ஆவியின் கீழ்ப்படிதல் கொண்ட ஆன்மிகத்துணை, நம்மைப்பற்றியும் இறைவனுடனான நமது உறவையும் அறிந்து, நமது தவறான புரிதல்களின் முகத்திரைகளைக் களைய உதவுகின்றது.. இயேசுவுடனான உரையாடல்களை தெளிவுபடுத்துவதற்கு நற்செய்தி பல்வேறு எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. உதாரணமாக, சமாரியப் பெண், சக்கேயு, பாவியான பெண், நிக்கொதேம், எம்மாவு சீடர்கள், போன்றவர்கள் இயேசுவை உண்மையாக சந்தித்துத் தங்கள் இதயங்களை திறந்தவர்கள். தங்கள் பலவீனங்கள் மற்றும் இயலாமையை இயேசுவின் முன் வைக்கத் தயங்காதவர்கள். அவர்களது  சுயப்பகிர்வின் வழியாக மீட்பையும் மன்னிப்பையும் இலவசமாகப் பெற்றவர்கள்.

நமது வாழ்வையும் தேடல்களையும் இயேசுவின் முன்னும் பிறர் முன்னும் வெளிப்படுத்தும் பொழுது, நம்முள் இருக்கும் பல்வேறு எண்ணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடிகின்றது. நான் எல்லாவற்றையும் தவறாக செய்துவிட்டேன், நான் மதிப்பற்றவன், யாரும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், நான் ஒருபோதும் வெற்றியடைய மாட்டேன், தோல்வியைப் பெற விதிக்கப்பட்டவன் என்பன போன்ற பொய்யான தீமையான எண்ணங்கள் மற்றொருவருடன் பகிரப்படும் பொழுது நம்முடைய முகத்திரையை அவிழ்க்க உதவுகிறது. இதனால், நாம் இறைவனால் அன்பு செய்யப்படுகின்றோம், மதிக்கப்படுகின்றோம். நம்மால் அப்படிப்பட்டவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து, எப்பொழுதும் நம்மில் இருக்கும் நன்மையின் அடையாளங்கள், செயல்களைப்  பார்ப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டுபிடிக்கின்றோம்.

இப்படியாக ஆன்மிகத்துணை அளித்து நம்முடன் பயணிக்கும் நபர் இறைவனுக்குப் பதிலாக இருந்து நமது பணியைச் செய்வர் அல்ல, மாறாக நம்முடன் சேர்ந்து உடன்பயணிக்க, உடன் நடக்க உதவுபவராக, இதயத்தில் இறைவன் பேசுவதைக் கேட்க ஊக்கமூட்டுபவர்களாக திகழ்கின்றார்கள்இவ்வாறாக விளங்கும் ஆன்மிகத்துணை மேன்மையையும் ஆன்மிக உறவையும் அளித்து நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள்உடன்பிறந்தவர்கள் என்பதை வலியுறுத்துகின்றதுஒன்றிணைந்துப் பயணிக்கும் திருஅவை வலியுறுத்துவதும் இதுவே. கடவுளிடம் யாரும் தனியாக செல்லமுடியாது. மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்படும் முடக்குவாதமுற்றவன் நலம் பெற நம்பிக்கையுள்ள மனிதர்களின் துணை தேவைப்பட்டது. சில நேரங்களில் முடக்குவாதமுற்ற சகோதரர் நலம்பெற முடிவெடுக்கும் சூழலில் நாம் இருக்கின்றோம். ஆனால் ஒரே தந்தையின் பிள்ளைகள் உடன் பிறந்தவர்கள் என்ற அனுபவம் இன்றி எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும், தவறான புரிதல்களையும், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளையும்  அளித்து பிறரது உதவியை எதிர்பார்க்கும் செயலற்ற நிலைக்கு விட்டுச் சென்றுவிடுகின்றது. தெளிந்து தேர்தலுக்கு முன்னோடியான கன்னி மரியா அவர்கள் குறைவாக பேசி, அதிகமாக செவிமடுப்பவர். தன் உள்ளத்தில் இறைவனைப் போற்றியவர். இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்ற மிகப்பெரிய கட்டளையை நம்மிடம் ஒப்படைத்திருக்கும் மரியா, இவ்வார்த்தைகளைவாழ்க்கைச் செயல்பாடுகளாக, விருப்பங்களாக மாற்ற அழைக்கின்றார்.

தெளிந்து தேர்தல் என்பது கற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்ட ஒரு கலை. அதை நன்றாகக் கற்றுக்கொள்ளும்போது, ஆன்மீக அனுபவத்தை இன்னும் அழகாகவும் முறையாகவும் வாழ உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தெளிந்து தேர்தல் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு, இதில் தன்னிறைவு பெற்றவர்களாக, உயர்ந்தவர்களாக கருதாமல் எப்போதும் இறைவனிடம் விரும்பி கேட்கும் ஒன்றாகக் கருதவேண்டும்இறைவனின் குரல் நாம் எப்போதும் புரிந்துகொள்ளும் வகையில் தனித்துவமானது. பிரச்சனைகளை அமைதிப்படுத்தி, ஊக்கப்படுத்தி, உறுதியளிக்கும் குரல் அது. கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம், (லூக் 1:30), இயேசு பேதுருவிடம், (லூக் 5:10), உயிர்ப்பு நாள் அதிகாலையில் வானதூதர் கல்லறைக்குச் சென்ற  பெண்களிடம்  (மத் 28:5) கூறிய வார்த்தைகளான, அஞ்சாதீர்கள் என்ற வார்த்தை இன்று நம்மிடமும் கூறப்படுகிறது.   நாம் அவருடைய வார்த்தையை நம்பினால் நமது வாழ்க்கையை நன்றாக வாழ்வோம்மற்றவர்களுக்கு உதவுவோம். திருப்பாடல் கூறுவது போல அவருடைய வார்த்தை நம் காலடிக்கு விளக்காகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கின்றது. தி.பா 119, 105).

இவ்வாறு தன் புதன்மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

Comment