ஞாயிறு
ஜூலை 3 இல் கொண்டாடப்பட்ட ‘இந்தியக் கிறிஸ்தவர் தினம்’
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 12 Jul, 2022
கி.பி 52 இல் திருத்தூதர் தோமாவால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மற்றும் அவரது நற்செய்தியைக் கொண்டாடும் நாளே ‘இந்தியக் கிறிஸ்தவர் தினம்’ என்று கர்தினாலாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஹைதராபாத்தின் பேராயர் அந்தோணி பூலா கூறியுள்ளார்.
ஜூலை 3 ஆம் தேதி, ஞாயிறு, புனித தோமையின் பெருவிழாவன்று கொண்டாடப்பட்ட இந்தியக் கிறிஸ்தவ தினத்தை முன்னிட்டு இவ்வாறு கூறியுள்ள பேராயர் அந்தோணி பூலா அவர்கள், இந்நாள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டியதன் கடமையை கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இந்தியத் துணைக்கண்டத்திற்கு நற்செய்தியை முதன்முதலில் கொண்டுவந்த புனித தோமாவின் 1950 ஆம் ஆண்டு நினைவு நாள் என்றும், இந்தூர் ஆயர் சாக்கோ தொட்டி மேரிக்கல் அவர்களும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியக் கிறிஸ்தவ தினம் என்பது, நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களின் ஒற்றுமை மற்றும் இந்தியத்தன்மையைக் கொண்டாடுவதையும், அவர்களின் மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கும், அதனை வெளிப்படுத்துவதற்குமான உரிமையைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்களும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கிறிஸ்தவ தினத்தைக் கொண்டாடுவது என்பது, இந்தியாவில் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தோமை, கி.பி. 52 இல் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்து, தென்கிழக்கு கடற்கரையான இன்றைய தமிழ்நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். ஜூலை 3 ஆம் தேதி அவரது பெருவிழா கொண்டாடப்படுகிறது.
Comment