No icon

இந்தியத் தலைநகரான டெல்லியில் போராட்டம்

சர்னா மதத்தை அங்கீகரிக்க வேண்டும்

இந்திய கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர்கள், ஆதிவாசிகள் அல்லது மலைவாழ் மக்களின் சமயமான சர்னா ஒரு தனி சமயமாக அல்லது மதமாக கருதப்பட வேண்டுமென்றும், அதற்கு நாடு முழுவதும் இருக்கின்ற மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தி வருகின்றனர். சர்னா சமயத்தை பின்பற்றும் இந்த மக்கள் பெரும்பாலும் இயற்கையை தெய்வமாக நினைத்து வணங்கி வருகிறார்கள். பல ஆண்டுகளாக தங்களது மதத்தை ஒரு தனி மதமாக அங்கீகரிக்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள்.

இதை முன்னிட்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி இந்தியத் தலைநகரான டெல்லியில் போராட்டத்தையும் நடத்தினார்கள.

பெரும்பாலும் ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் இது போன்ற மாநிலங்களில் அதிக அளவில் பழங்குடி மக்களும், ஆதிவாசிகளும் வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை இந்திய நாட்டில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம் மற்றும் ஜெயின் இவை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மதங்களாக இருக்கின்றன. ஏதாவது ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் இந்த ஆறு மதங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இம்மதங்களைச் சாராதவர்கள், பிறமதம் என்றோ அல்லது இம்மதத்தைச் சாராதவர்கள் என்றோதான் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.

எனவே தங்களின் சர்னா சமயத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள். ஆதிவாசி செஞ்சல் அபியான் என்ற குழுவானது ஏறக்குறைய 250 மலைவாழ் மக்கள் குழுவை கொண்டதாக இருக்கின்றது. நாட்டின் ஐம்பது மாவட்டங்களிலிருந்து மலைவாழ் மக்கள் இக்குழுவில் இருக்கிறார்கள்.

இக்குழுவின் தலைவர் செல்கான் முருமுரு, ‘எங்களுக்கு தேவையானது எல்லாம் ஒன்று தான். எங்களின் மதத்தை தனி மதமாக அங்கீகரிக்கவேண்டும். இதற்காகவே பல வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் மதத்தை மதிப்பது எங்களை மதிப்பது போன்றதுஎன்று கூறினார். CBCI யின் முன்னாள் செய்தி தொடர்பாளர் அருள்பணியாளர் பாபு ஜோசப், ‘இம்மக்களுக்கு அவர்களின் கோரிக்கை கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்தியக் கத்தோலிக்கத் திரு அவையின் முழு விருப்பம். ஆனால், இவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பல அரசியல் கட்சிகள் இவர்களிடமிருந்து இயற்கை வளங்களை பெற்றுக் கொள்வதற்காகவே இவர்களை பிரித்து வைத்திருப்பதுபோல் தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து போராடுகின்றபோது எந்த அரசாங்கமும் இவர்களுக்கு எதிராக, இவர்களின் கோரிக்கைக்கு எதிராக செல்லமுடியாது. மேலும், பல பழங்குடி ஆதிவாசி மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதால் அவர்கள் இப்பட்டியலின் கீழ் இடம்பெறுவதில்லை. யார் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் ஆதிவாசிகள், பழங்குடிகள், மலைவாழ் மக்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாதுஎன்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Comment