மத்திய இந்திய மாநிலமான சட்டீஸ்கரில்
போராடும் சட்டீஸ்கர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 12 Jul, 2022
மத்திய இந்திய மாநிலமான சட்டீஸ்கரில், ராய்பூர் உயர்மறைமாவட்டத்தில், டோங்கர்கர் என்ற பங்கு தளத்தில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்கள் திருயாத்திரை தளமான கல்வாரி மலையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மற்றும் அன்னை மரியாளின் சுரூபங்கள் சிதைக்கப்பட்டதை எதிர்த்தும், அதைப்பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு 2022 ஜூலை 8 ஆம் தேதி காலையில், ஏறக்குறைய ஒரு மணி நேரம் நற்கருணை ஆராதனையில் ஈடுபட்டனர். அதன் பின்பு இந்த வன்முறை நிகழ்வுகளை எதிர்த்து அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ‘‘காவல்துறை உடனடியாக இந்த வன்முறை சம்பவத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இந்த கல்வாரி மலையை 2001 ஆம் ஆண்டு ராய்ப்பூர் உயர்மறைமாவட்டம் ஒரு புனித யாத்திரை தலமாக அறிவித்தது. அன்றிலிருந்து மறைமாவட்டத்திலிருந்தும், வெளியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த புனித யாத்திரை தளத்திற்கு வந்து செல்வது வழக்கம். ஜூலை 2 ஆம் தேதி நான்கு மணி வரை இறைமக்களோடு நாங்கள் இங்கு தான் இருந்தோம். அதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் 3 ஆம் தேதி காலையில் இங்கு வந்த பொழுது, இங்க இறைவனின் சுரூபமும் அவரது அன்னையின் சுரூபமும் சிதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். காவல்துறையிடம் புகார் தெரிவித்து 5 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் காவல்துறை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே காவல்துறை விரைந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறோம்,’’ என்று அப்பங்கின் பங்குத்தந்தை அருள்பணியாளர் கிஷோர் அவர்கள் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அகில பாரத் இசை சமுதாய அதிகார் சங்தான் என்ற கிறிஸ்தவர்களின் நலம் காக்கும் குழுவினுடைய தலைவர் குருவிந்தர் சிங், ‘‘காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலத்தினுடைய ஆளுநர் அவர்களையும், முதல்வர் அவர்களையும் நாங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்,’’ என்று கூறினார். மறைமாவட்டத்தின் முதன்மை குருவான பேரருட்தந்தை செபாஷ்டின் பூமட்டம், ‘‘வடமாநிலங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு போதாத காலம். இந்து அடிப்படைவாத குழுக்கள் வாழும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் வாழ்வது கடினம். மதம் மாற்றுகின்றனர் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி கிறிஸ்தவ மக்களை தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் இதை கருத்தில் கொண்டு இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,’’ என்று தெரிவித்தார்.
Comment