No icon

​​​​​​​இந்தியா 75

அன்றும் இன்றும்

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றெடுத்த 75ஆம் ஆண்டின் பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

சமூக ஊடகங்களில் மயங்கி கிடக்கும் மக்களுக்கு, அலைபேசியில் சேமித்து வைத்துள்ள அனைத்து எண்களுக்கும் (நபர்கள் அல்ல எண்கள் மட்டுமே) விடுதலைப் பெருவிழா வாழ்த்துகள் அனுப்புவது, சமூக ஊடக முகப்பு பக்கங்களில் மூவர்ண கொடியை பறக்க விடுவது அல்லது விலையில்லாமல் யாராவது கொடுத்தால், மேலாடையில் மூவர்ணக் கொடியைக் குத்திக்கொள்வது போன்ற, செயல்கள் தான் இன்றைய விடுதலைப் பெருவிழா அடையாளங்கள்! பெரும்பாலோர் அவரவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்வுகளில் கூட பங்கேற்பது இல்லை.

‘ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறதே பெரிய காரியம் ... அசதியாக இருந்துச்சு ... நல்லா தூங்கிட்டேன்” என்று கூசாமல் சோம்பல் முறிப்பார்கள்.

வேறு சிலர் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை காரணம் காட்டி, எல்லாம் அயோக்கியர்கள் ... நாசமாய் போச்சு... விடுதலையை கொண்டாட என்னங்க இருக்கு இந்த நாட்டிலே? என்று குதர்க்கமாய் வீண் வம்பு பேசுவார்கள்.

பத்துத் திங்கள் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு என்னவெல்லாம் வலியும், வேதனையும் இருக்குமோ அதைவிட கொடூர வலி, வேதனை, சோதனை, இழப்புகள் என தொண்ணூறு ஆண்டுகளாக சந்தித்தும், போராடியும் பெற்றெடுத்த விடுதலையின் சாற்றை பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட்டோமோ என்ற ஐயம் எழுகிறது.

கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளை, புத்தாயிரம் வரை மற்றும் புத்தாயிரத்திற்குப் பின் என்று வகைப்படுத்தி, சீர்தூக்கிப் பார்த்தால் நாம் பொதுவாக விழாக்களை கொண்டாடும் முறை மற்றும் தாய்த்திரு நாட்டின் மீதான தனி மனித பார்வை மற்றும் உணர்வு வெளிப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள இந்த கட்டுரை உதவும் என கருதுகிறேன்.

புத்தாயிரம் ஆண்டுக்கு முந்தைய கொண்டாட்ட நினைவுகள்

என்னைப்போன்ற அறுபதுகளில் பிறந்தவர்களோ அல்லது அதற்கு அடுத்த எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பிறந்தவர்கள், புத்தாயிரம் ஆண்டு வரை எங்கள் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் நாட்களில் கொண்டாடிய விழாக்களில் பகட்டும், படாடோபமும் இருந்ததில்லை. வீட்டிற்கு வீடு, ஐந்து முதல் பத்து பிள்ளைகள் இருந்த அந்த காலகட்டத்தில், யாரும் பிறந்த நாள் கொண்டாடியதாகவும் ஞாபகம் இல்லை. புதுத்துணி பெரும்பாலும் அவரவர் சமயம் சார்ந்த விழாக்களை ஒட்டியே வாங்கப்பட்டன. அனைத்து சமய திருவிழாக்களும், ஊர்த் திருவிழாவாகவே கொண்டாடப்பட்ட பொற்காலம் அது.

அதைப்போலவே, கல்விக்கூடங்களில் கொண்டாடப்பட்ட விடுதலைப் பெருநாள், குடியரசு நாள் மற்றும் ஆண்டு விழாக்களில் மாணாக்கர்கள் மட்டுமன்றி, ஊரே திரண்டு கலந்து கொண்டனர்.

அப்போதெல்லாம் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் செல்வதென்றால் குறைந்த அளவில் இரண்டு மைல் தொலைவு நடக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிக்கு குறைந்த அளவில் ஐந்து மைல் தொலைவாவது நடக்க வேண்டும். உயர் மேல்நிலைப் பள்ளிகள் பெரும்பாலும், பெரிய நகரங்களில் மட்டும்தான் இருக்கும். எனவே, குறைந்த அளவில் பத்து மைல் தொலைவோ அல்லது அதற்கு கூடுதலான தொலைவினை மிதிவண்டி மூலமாகத்தான் சென்றடைய முடியும். மிதிவண்டி வைத்திருந்தவர்கள் செல்வந்தர்களாக கருதப்பட்ட காலம் அது. அதிலும், ‘Raleigh Humber’ வைத்திருந்தால் கூடுதல் செல்வாக்கு!

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத அந்த நாட்களில், முகத்தில் புதுப் பொலிவுடன், கரைபுரளும் உற்சாகத்துடன், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் கல்விக்கூடங்கள் நோக்கி பாரதியார், பாரதிதாசனின் பாடல்கள் மற்றும் திரை இசையில் இடம்பிடித்த நாட்டுப்பற்று பாடல்களை பாடிக்கொண்டே, பளிச்சிடும் பள்ளிச் சீருடையில் நடைபயணமாக சென்று, பட்டொளி வீசி, பறக்கும் தாய்த்திரு நாட்டின் கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்வோம்.

பெரும்பாலும் ஐந்து காசு மதிப்பிலான ஓரிரு மிட்டாய்கள் கிடைப்பதுண்டு. அதுபோன்ற விழா நாட்களில் வீட்டுக்கு திரும்பும் வழியில் அடித்த லூட்டிகள் இந்த தலைமுறையினருக்கெல்லாம் கொடுப்பினை இல்லை. வீட்டுக்கு திரும்பும் வழியில் வண்ணத்துப் பூச்சிகளை பிடித்து, பறக்கவிடுவதும், ஓணான் வால்களில் நூல் கட்டி அதற்கு திகிலூட்டுவதும், தண்ணீர் பாம்புகளையும், வயல்களின் வரப்போர குழிகளில் இருந்து தலைகாட்டும் நண்டுகளைப் பிடித்து, அவற்றை ஜாக்சன் துரையாக உருவகப்படுத்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்களை அந்த வாய்பேச முடியாத ஊர்வனவற்றிடம் அடுக்கு மொழியில் பேசி வீரம் காட்டுவதும், நாடு முழுவதும் அசோகர் நட்டதாக நங்கள் நினைத்துக்கொண்ட சாலையோர புளியமரங்களை உலுக்கி, புளியம் பிஞ்சுகளை சுவைப்பதும், பொன்வண்டுகளை வேட்டையாடி, கண்ணாடி குடுவைக்குள் அடைத்து, வீட்டிலுள்ள தங்கச்சிகளுக்கு அழகு காண்பிக்க எடுத்துச்செல்லும் பாசக்கார அண்ணன்களாகவும் அன்றைய பொழுதுகள் இரம்மியமாக களைகட்டின!

அப்போதெல்லாம் நகரங்களில் கூட அரசுப் பள்ளிகளில் தங்கும் விடுதிகள் இருந்ததில்லை. அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், கிறித்தவ அருள்தந்தையர்கள் மற்றும் அருள்சகோதரிகள் மூலை முடுக்கில் உள்ள சிற்றூர்களில் எல்லாம் சென்று கிறித்தவர்களுக்கு ஆற்றிய சமயப் பணியோடு நின்றுவிடாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் என, உணவு மற்றும் உறைவிட வசதியுடன் கல்விக்கூடங்கள் அமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

இன்றைய தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, இந்திய நாட்டளவில் மிகவும் சிறந்து விளங்குவதற்கும், உலகளாவிய அளவில் நம் மாநிலத்தின் மாணாக்கர்கள் விரும்பப்படுவதும், முதுகெலும்பாய் திகழும் நமது கிறித்துவ கல்விக்கூடங்களின் தன்னலமற்ற தொலைநோக்கு பார்வையே என்றால் மிகையாகாது.

புத்தாயிரத்தில் விழாக் கொண்டாட்டங்கள்

கணினி மென்பொருள் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைய ஆரம்பித்த பின், கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில், தனி மனித வருமானம் பன்மடங்கு உயர்ந்தும், தகவல் தொடர்பு மற்றும் நாட்டின் கட்டமைப்பு வசதிகளில் தொடர் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. கூடவே கூட்டுக் குடும்பங்களின் சிதைவும், பெரியோருக்கு மதிப்பளிக்காத சமூகமும், நுகர்வோர் மனப்பான்மையும், கடனாளிகளும், தனிமையும், உடல்நலம் பேணாததால் ஏற்படும் புத்தம்புது நோய்களும் என இந்திய நாடு உழன்று கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் திருமண விழாக்களில், அடுத்தவர் மெச்ச வேண்டும் என்பதற்காகவே கடன் வாங்கியாவது கோடிக் கணக்கில் செலவு செய்யும், நடுத்தர வசதி படைத்த குடும்பங்களை, எல்லா பகுதிகளிலும் காணமுடிகிறது. அதைவிடக் கொடுமை குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்த நாளுக்கு சில பல இலட்சக்கணக்கில் செலவு செய்வது!

ஊர் கூட்டி மண்டபம் பிடித்து, பிறந்த நாள் கொண்டாடவில்லையென்றால், நீங்கள் இந்த பிரபஞ்சத்திலேயே வாழ தகுதியற்றவர்களாக கருதப்படும் காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லியும் தெரியவேண்டுமா என்ன? இன்றைய இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு சமூக ஊடகங்களில் சிக்கி, சின்னாபின்னமாகுவது அல்லது குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்களின் எலிப்பொறியில் சிக்கி கடனாளியாவது தான்!

பள்ளிகளும், கல்லூரிகளும் வசிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்தும், சென்று வர பற்பல வசதிகள் இருந்தும், இன்றைய மாணாக்கர்களில் பெரும்பாலோர் கொடியேற்பு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. கிரிக்கெட்-இல் இந்தியா வெற்றி பெற்றால், பட்டாசு கொளுத்துவதுதான் மிகப்பெரிய நாட்டுப் பற்றாகப் பார்க்கப்படுகிறது. இதைப்போலவே வேலைத்தேடி நகர்ப்புறம் வந்த இளைஞர்கள், சொந்த ஊர், உறவினர், நண்பர்கள், ஊர்த் திருவிழா என்பதையெல்லாம் மறந்துவிட்டு, செக்கு மாடாக உழைத்துக் கொண்டுள்ளனர்.

பல வருடங்கள் பழகிய நண்பர்களை, அவரவர் சார்ந்த சமயம், இனம், சாதீயம் போன்ற அடிப்படை கூறுகளால் பிரித்து பார்த்துப் பழகும் அவப்போக்கை கடந்த பதினைந்து வருடங்களில் பல முறை நாம் உணர்ந்திருப்போம். மொத்தத்தில் புத்தாயிரத்திற்குப் பின் நாம் கொண்டாடும் விழாக்கள், பெரும்பாலும் உயிரோட்டம் அற்ற சுய விளம்பர பீற்றல்களாகவும் அல்லது தன்னிலையை மட்டும் போற்றும் சுயநலக் கூண்டுகளாகவும் மாறிப்போய்விட்டது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. இதில் நாட்டுப்பற்றும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா என்ன?

எப்போது அடையலாம் விடுதலையின் பெருமையை?

யார் சிரித்தால் என்ன? இங்கு யார் அழுதால் என்ன? (நன்றி: கவிஞர் வாலி P.B. .ஸ்ரீனிவாஸ், இதயத்தில் நீ, 1963), யார் ஆண்டால் என்ன? இங்கு யார் வீழ்ந்தால் என்ன? என்னை பாதிக்காத வரையில் எனக்கென்ன கவலை? நமக்கேன் வம்பு? என்று நம்மைச்சுற்றி நடக்கும் அவலங்களையும், நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளால் நடத்தப்பெறும் கேலி கூத்துகளையும் கண்டும் காணாமல், கடந்து செல்லும் மனநோய் ஏறக்குறைய 99ரூ இந்தியர்களிடம் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. பற்பல பேரரசுகளாகவும், சிற்றரசுகளாகவும் ஆளப்பட்டு வந்த இந்திய தீபகற்பம் அண்டை நாட்டவரின் படையெடுப்பிலும், ஐரோப்பியர்களின் வணிகச் சூறையாடலிலும் சிக்கியது எப்படி என்பதை, இந்திய வரலாறு படித்தோர் அறிந்திருப்பீர். மன்னர்கள் காலத்தில் சாமானியர்களால் எந்தவொரு நாடும் வீழ்ந்ததாக வரலாறு இல்லை.

ஆனால், மக்களாட்சி நடக்கும் இந்நாட்களில், சாமானியர்கள் தங்கள் நாட்டுப்பற்றுடனான கடமைகளை புறந்தள்ளி, ஆட்சியாளர்கள் நடத்தும் கேலிக் கூத்துகளையும், அறமற்ற செயல்களையும், கண்மூடி, வாய்பொத்தி, காது அடைத்து அமைதி காத்து நின்றால், எந்தவொரு நாடும் வாய்க்கும், வயிற்றுக்கும் கூட இல்லாமல் தலைகீழாக தத்தளிக்க வேண்டியதுதான் (எ.கா. இலங்கை).

எவையெல்லாம் நடந்தேறினால் அல்லது சாதித்தால் விலைமதிப்பற்ற குருதியும், வியர்வையும் சிந்தி பெற்றெடுத்த விடுதலை நமக்கு என்றென்றும் தித்திப்பாக இருக்கும் என்பதை இங்கு உங்கள் சிந்தனைக்கு தருகிறேன்.

* தேர்ந்தெடுக்கும் உரிமையோடு தட்டிக்கேட்கும் உரிமையும், கடமையும் நமக்கு உண்டு என்பதை குடிமக்கள் உணர வேண்டும்.

* சமயம், சாதி, இனம், மொழி, குறுக்குவழி ஆகியவற்றை கையில் எடுக்காமல், சாமானிய இந்தியர்களின் பொன்னான வாக்குகளை அறுவடை செய்யும் துணிவும், நேர்மையும் அரசியல் கட்சிகளிடம் உருவாக வேண்டும்.

* பழங்குடியினர், மலைவாழ் மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் நிலங்களை பிடுங்கி, மதம் பிடித்த யானையைப் போல் துவம்சம் செய்வதும், அவர்களின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி, பிறந்த மண்ணிலேயே ஆதரவற்றவர்களாய் மாற்றுவதும், நிர்கதியான அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தொண்டர்களை, புனையப்பட்ட கொடும் வழக்குகளில் சேர்த்து, சாகும் வரை சிறையில் இடுவதும் பிறகு, உலகத்திலேயே இல்லாத உத்தமரைப் போல், அந்த ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவரை உயர்பதவிக்கு உயர்த்தி, புண்ணியம் தேடிக்கொள்வதும் போன்ற அவலங்களை நிறைவேற்ற துணியாத ஆட்சியாளர்கள் உருவாக வேண்டும்.

* பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு எல்லாம் இலவசம் என, இரத்தினக் கம்பளத்தை விரித்து, பின்னொரு நாளில் யார் மண்டைக்கும் எட்டாத காரணங்களால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்தபின், கையை பிசைந்துகொண்டு அவர்களிடம் மன்றாடி நிற்பதை தவிர்த்து, திறமையான இந்திய முதலீட்டாளர்களை வளர்த்தெடுக்க தேவையான யுக்திகளை வரையறுக்கும் தொலைநோக்கு பார்வையுடைய அரசுப் பணியாளர்களும், ஆட்சியாளர்களும் உருவாக வேண்டும்.

* சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்; உழந்தும் உழவே துணை - என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழவுத்தொழில்தான் நம் நாட்டின் இணையில்லா முதலும், மூத்த தொழிலும் என போற்றிடும் வகையில் அவர்களுக்கு தேவையான திட்டங்களான- தடையில்லா உயர் அழுத்த மின்சாரம், வட்டியில்லா அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் வேளாண் கடன் வசதி, விதை மற்றும் பயிர் பாதுகாப்புக் கொள்கை, தேவைக்கு ஏற்றவாறு பயிர் நிரப்பும் சணல் கோணி பைகள், ஒன்றியம் தோறும் குளிரூட்டப்பட்ட மற்றும் உலர் உணவுக்கிடங்குகள், விளைவித்தவருக்கு விலை நிர்ணயிக்கும் முன்னுரிமை போன்றவற்றை நிறைவேற்றும் ஆட்சியாளர்கள் வேண்டும்.

* குழந்தைகளும், பெண்டிரும் எங்கும் எப்போதும் பாதுகாப்புடன் உணரும் நன்னாள் உருவாகிட வேண்டும்.

* உயர்கல்வியும், மருத்துவமும், குடிநீரும் அனைத்து இந்தியக்குடிகளுக்கும் இலவசம் என்ற அறிவிப்பை காதுகொடுத்து கேட்கும் அந்த நாளில் கண்விழிக்க வேண்டும்.

* ஆசிரியர்களையும், பெரியோரையும் மதிப்புடன் நடத்தும் புது சமூகம் காணவேண்டும்.

* வயோதிகரை தள்ளிவிடாமல், தாங்கி நிற்கும் குடிமக்கள் எங்கெங்கும் இருக்கவேண்டும்.

* 1947 ஆம் ஆண்டிற்கு முந்தைய வருடங்களில் பிறந்த பெரியவர்கள் பலர், நம் அருகாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சிறுவர்களும், இளையோர்களும் அறவழியில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் குறித்து, அப்பெரியோர்களிடமிருந்து அறிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அண்ணல் காந்தியடிகளின் அற வழிப் போராட்டங்கள்தான் இறுதியில் நமக்கு விடுதலையைப் பெற்று தந்தது. ஆயுதம் இல்லை என்பதை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித் தரும் புதிய தலைமுறையை காணவேண்டும்.

அனைவருக்கும் நம் இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு விடுதலைப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

Comment