அருள்பணியாளர் குல்சன் ஏக்கா
ஒற்றுமை, சகோதரத்துவத்தை வளர்க்கும் தீபாவளி விழா
- Author குடந்தை ஞானி --
- Thursday, 27 Oct, 2022
ஒடிசாவில் வாழும் கிறித்துவர்கள் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி விழாவின் போது தங்களருகே வாழும் இந்துமத சகோதர சகோதரிகளோடு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை காட்டுவதற்காக தங்களால் இயன்றளவு அந்நாளை சிறப்பிக்க அவர்களுக்கு உதவி வருகிறார்கள். கடந்த 46 வருடங்களாக கட்டாக்கில் வாழும் கத்தோலிக்க வேதியர் லாசரஸ், “எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக என்னிடம் உதவி கேட்டு வந்த இந்து மத சகோதரர்களுக்கு 2000 ரூபாயை நான் மகிழ்ச்சியோடு தந்தேன்” என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார். “கந்தமால் கசப்பான நிகழ்வுக்கு பிறகும்கூட இவ்விழாவிற்கு நன்கொடை அளிப்பதை நான் நிறுத்தவில்லை. ஏனெனில் எல்லா இந்து மத சகோதரர்களும் தீயவர்கள் இல்லை. ஒரு சிலர் மட்டுமே கிறித்துவர்களை எதிரிகளாக பாவித்து பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். நல்லெண்ணத்தோடு, நல்ல இதயத்தோடு பழகக்கூடிய இந்து சகோதரர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்” என்று கந்தமால் வன்முறை சம்பவத்தில் உயிர் பிழைத்த ரஞ்சித் பிரதாப் அவர்கள் கூறினார்.
ரூர்கேலா மறைமாவட்டத்தை சேர்ந்த அருள்பணியாளர் குல்சன் ஏக்கா “தீபாவளி விழாவினை சிறப்பிப்பதற்காக இந்து சகோதரர்கள் நன்கொடைகள் பெறுவது வழக்கம். அத்தகைய நேரத்தில் இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பெரும் பங்களிப்பை நன்கொடையாக தருவதுண்டு. அதே நேரத்தில் நன்கொடைக்காக ஆலயத்தை நோக்கியும் வருவார்கள். அப்பொழுது மணமுவந்து நாங்கள் நன்கொடைகளை கொடுத்து வருகிறோம். உண்மையாகவே இந்த தீபாவளி விழா கிறித்துவர்கள் மற்றும் இந்துக்கள் தங்கள் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. தீபாவளி இருளழிந்து ஒளி பிறந்த நாள் என்று கொண்டாடுகிறார்கள். நாங்களும் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஒளியாக ஏற்றுக்கொண்டு இந்நாளை கொண்டாடி வருகிறோம்” என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Comment