No icon

சம்யுக்த மஸ்தூர் சங்கம் எனும் தொழிற்சங்கம்

காங்கிரஸ் கட்சியின் புதியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

அக்டோபர் 17, 2022 அன்று காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதிலுமிருந்து 9835 வாக்குகள் பதிவாகின. இதில் 416 வாக்குகள்செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.

மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் 7897 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். சகப்போட்டியாளரான சசி தரூர் அவர்கள் 1072 வாக்குகள்பெற்று தோல்வியடைந்துள்ளார். 416 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. வெற்றிப்பெற்ற மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி காங்கிஸ் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் பல்கி வட்டத்தில் உள்ள வரவட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாபண்ண கார்கே - சபவ்வா தம்பதிக்கு 1942, ஜூலை 21 ஆம் தேதி மகனாகப் பிறந்தார். குல்பர்காவில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி. பட்டமும், குல்பர்காவில் உள்ள எஸ்.எஸ்.எல் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.

குல்பர்கா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வான மல்லிகார்ஜூன கார்கே, சட்டப்படிப்பு முடித்த பிறகு நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அலுவலகத்தில் ஜூனியராகப் பணியாற்றத் தொடங்கி, தொழிற்சங்க வழக்குகளில் ஆஜராகி வந்தார். 1969-ல் எம்.எஸ்.கே மில் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகச் செயல்பட்ட அவர், சம்யுக்த மஸ்தூர் சங்கம் எனும் தொழிற்சங்கத்தின் செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்தார். தொழிலாளர் உரிமைகளுக்காக இந்த சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார்.

1969-ல் தனது 27 ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, குல்பர்கா மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். 1972-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கார்கே, 1974-ல் அரசின் தோல்பொருள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், 1976-ல் பள்ளிக் கல்வித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

1978-ல் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற மல்லிகார்ஜூன

 கார்கே, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1980-ல் கர்நாடகாவின் முதல்வராக இருந்த குண்டு ராவ் அமைச்சரவையில் வருவாய்த் துறை கேபினெட் அமைச்சரானார் கார்கே. 1983-ல் குர்மித்கல் தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான கார்கே, 1985-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வானார் கார்கே.

1989-ல் 5 வது முறையாக குர்மித்கல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான மல்லிகார்ஜூன கார்கே, 1990-ல் பங்காரப்பா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சரானார். இதையடுத்து ஏற்பட்ட வீரப்ப மொய்லி அமைச்சரவையில் 1992 முதல் 1994 வரை கூட்டுறவு அமைச்சராகவும், நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்தார்.

குர்மித்கல் தொகுதியில் 6வது முறையாக 1994-ல் வெற்றி பெற்ற கார்கே, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். 1999 சட்டப்பேரவைத் தேர்தலில் 7 வது முறையாக வெற்றி பெற்றார் கார்கே. இம்முறை, மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தார். எனினும், முதல்வராக எஸ்.எம். கிருஷ்ணா பதவி ஏற்றதை அடுத்து அவரது அமைச்சரவையில், உள்துறை அமைச்சரானார்.

சந்தன கடத்தல்வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது கர்நாடகாவின் உள்துறை அமைச்சராக இருந்தவர் கார்கேதான். 2004-ல் 8 வது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார் மல்லிகார்ஜூன கார்கே. இம்முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்தார். எனினும், தரம் சிங் முதல்வரானார். இதையடுத்து, அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார் கார்கே.

2005-ல் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே, 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 9 ஆவது முறையாக வெற்றி பெற்றார். இம்முறை கர்நாடக பேரவை எதிர்க்கட்சித் தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார்.

2009-ல் குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததை அடுத்து நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார் கார்கே.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்ட கார்கே, பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியுற்றார். இதுதான் இவர் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி. எனினும், 2020 ஜூன் 12-ல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான கார்கே, அதுமுதல் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

தற்போது 80 வயதாகும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். இதற்கு முன் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.

சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆளுமை மிக்க தலைவர் என்ற பெயரா அல்லது காந்தி - நேரு குடும்பத்துக்கான பொம்மை தலைவர் என்ற பெயரா - இரண்டில் எது அவருக்கு பொருந்தப் போகிறது என்பதை இனிவரும் காலம் சொல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Comment