No icon

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கும் மத சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

"மிரட்டல்கள், அச்சுறுத்தல், பரிசுகள் மற்றும் பண பரிவர்த்தனை மூலம் ஏமாற்றுதல்" போன்ற மோசடியான வகைகளில், மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது கட்டாய மதமாற்றம் மிகவும் முக்கியமான பிரச்சனை என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வரும் 22ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பொதுநல வழக்கறிஞர் துஷார் மேத்தா, “பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில்தான் மதமாற்றம் அதிகமாக நடைபெறுகிறது. இங்கிருக்கும் மக்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, மோசடி செய்து, பணம் தந்து அவர்களை மதமாற்றுகிறார்கள். இது ஒரு குற்றம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்என்று கூறினார். கட்டாய மதமாற்றத்தை தடுக்க இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. 1968 இல் ஒடிசாவில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் உள்ளது. குஜராத், சட்டீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. தங்களது சுய விருப்பத்தின் பேரில் மதம் மாற விரும்புவோர் 30 நாட்களுக்கு முன்பாகவே அதற்கான காரணத்தை விளக்கி மாநில அரசிடம் உறுதி பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் சட்டம் உள்ளது.        

Comment