No icon

PMI தன்னார்வலர்கள்

இந்திய சிறைப்பணியின் 13 வது தேசிய மாநாடு

மறுஒருங்கிணைத்தலுக்கான மறுஉருவாக்கம் என்னும் தலைப்பில் கோவாவில் நடைபெற்ற இந்திய சிறைப்பணியின் 13வது தேசிய மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது, சிறைக்கைதிகளுக்குப் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களை வாழ்த்திப் பாராட்டிய கர்தினால் ஃபெராவோ அவர்கள், சிறைக்கைதிகளை அன்பு செய்தல், அவர்கள் குரலுக்கு செவிமடுத்தல், பாராட்டுதல் போன்றவற்றின் வழியாக சுய உணர்வு, உண்மையான மீட்பு, சுதந்திரம் போன்றவற்றை  அவர்கள் அடைய அதிகமான நேரத்தைத் தன்னார்வலர்கள் செலவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

PMI தன்னார்வலர்கள்

இந்திய சிறைகளில் வாடும் 6 இலட்சம் கைதிகள் வெறும் எண்ணிக்கையல்ல, மாறாக அவர்களின் பெற்றொர் மற்றும் குடும்பத்தினரின் சமாளிக்க முடியாத வலி மற்றும் வேதனையின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார் PMI என்னும் இந்திய சிறைப்பணியின் தலைவரான ஆயர் ஆல்வின் தெ சில்வா.

மேலும், சிறைக்கைதிகளை குடிமக்களாக உலகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்களது ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்காக உழைத்து மீண்டும் அவர்களை சமூகத்தோடு    இணைக்க பல முயற்சிகளை இந்தியாவின் 1350 சிறைகளில் பணியாற்றும் 8000க்கும் மேற்பட்ட PMI   தன்னார்வலர்கள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

PMI  தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் அசௌகரியத்தில் சௌகரியத்தைக் கண்டறியவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அருள்பணி பிரான்சிஸ் கோடியன் அவர்கள், செபத்தின் வழியாக பணித் தடைகளைக் களைய வேண்டும் எனவும், ஆக்கப்பூர்வமாக, ஆற்றலுடன் பணிகளை ஆற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்தியா முழுவதிலுமிருந்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், சிறையில் இருப்பவர்களுக்குச் செய்யும் பணி கிறிஸ்துவுக்குச் செய்யும் பணி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார் கோவா மறைமாவட்டத்தின் காரித்தாஸ் இயக்குநர் அருள்பணி மவேரிக் பெர்னாண்டஸ்.

மேலும், சமத்துவம் மற்றும் உடன்பிறந்த உறவோடு சிறையிலிருப்பவர்களின் ஆன்மீகம், நலவாழ்வு மற்றும் மனித மாண்பில் அக்கறை செலுத்தும் தன்னார்வலர்களின் பணியினையும் அருள்பணி மவேரிக் பெர்னாண்டஸ் பாராட்டினார்.

Comment