மத்திய பிரதேசத்தில், டாமோஹ் மாவட்டம்
அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண்ணின் குற்றசாட்டு
- Author குடந்தை ஞானி --
- Thursday, 24 Nov, 2022
மத்திய பிரதேசத்தில், டாமோஹ் மாவட்டத்தில், தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண் ஒருவர், தான் கிறிஸ்துவராக மாறுவதற்கு பணம் தரப்பட்டதாக 2022 நவம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தனக்கு பணத்தேவை இருந்ததாகவும், அந்நேரத்தில் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தனக்கு பணம் தருவதாக இருவர் சொன்னதாக அவர் கூறினார்.
தனது பண தேவையை பூர்த்தி செய்ய அவரும் கிறிஸ்தவராக மாறுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி தனக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் தந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் மூழ்கி திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறியதாகவும் கூறினார். மேலும் தான் கிறிஸ்தவராக மாறினாலும் தேவ ஆலயத்திற்கு செல்லவில்லை. எனவே பணம் தந்தவர்கள் அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்கள். 90 ஆயிரம் ரூபாயை கொடுத்தபின்னர் மீதி உள்ள தொகையையும் அவர்கள் தருமாறு கேட்டதால், தான் தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா அவர்களிடம் புகார் அளித்ததாக உள்ளூர் தொலைக்காட்சியிடம் கூறினார். ரேகா ஷர்மா அவர்கள், இப்பெண் சொன்ன குற்றங்கள் உண்மையா என ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு டாமோஹ் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை குறித்து டாமோஹ் மாவட்ட கிறிஸ்தவ தலைவர்கள் UCA செய்தி நிறுவனத்திடம், “மத்திய பிரதேசத்தில் சென்ற ஆண்டு 2021 இல் கடுமையான தண்டனைகளுடன் மதமாற்றத்திற்கான தடை சட்டம் இயற்றப்பட்டது. அன்றிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும், துன்பங்களும் இன்னும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதைப்பற்றி நாங்கள் தரும் புகார்களை கேட்கவோ விசாரிக்கவோ எவரும் விரும்புவதில்லை. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மதமாற்றுவதில்லை. தாங்களாகவே கிறிஸ்தவர்களாக மாற விரும்பி வருபவர்களை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களை வதைக்க வேண்டும் இன்னும் துன்புறுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே முன்வைக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத கிறிஸ்தவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியுமா என்று அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்கள்.
Comment