திரௌபதி முர்மு
சிறைகைதிகள் மீதான அக்கரைக்கு குடியரசு தலைவரை பாராட்டும் கிறிஸ்தவர்கள்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 07 Dec, 2022
இந்திய கிறிஸ்தவ தலைவர்கள் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு அவர்கள் சிறைக்கைதிகள் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கும், கருணைக்கும் அவரை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்கள். தேசிய சட்ட நாள் அன்று உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், சிறைச்சாலைகளில் நீதிக்காக பலர் காத்து கிடக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் நமது நாட்டில் இவர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் இன்னும் கூடுதல் சிறைச்சாலைகளை ஏற்படுத்தி இவர்களை பராமரிக்க வேண்டும். நீதிக்காக காத்து கிடக்கும் இவர்களுக்கு விரைவில் நீதி வழங்கவும் அதன் வழியாக மிகப்பெரும் கூட்டம் சிறைச்சாலைகளில் இருப்பதை குறைக்க அரசின் அனைத்து சட்டத்துறைகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய உள்துறை அமைச்சக கூற்றுப்படி 2016லிருந்து 2021 வரை சிறைச்சாலைகளில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும், அதே நேரத்தில் 45.8 சதவீதம் சிறைவாசிகள் தங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கிறது. இந்திய கத்தோலிக்க திரு அவையின் சிறைப்பணியின் நிர்வாகிகளில் ஒருவரான அருள்பணியாளர் பிரான்சிஸ் கொடியன் அவர்கள் UCA செய்தி நிறுவனத்திடம், “சிறைவாசிகளை குறித்து குடியரசுத் தலைவர் அவர்களே தன் கருத்தை தெரிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. பாமர சிறைவாசிகளின் மீது அவர் கொண்டுள்ள அக்கறைக்கும், கருணைக்கும் நாங்கள் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்”, என்று கூறினார்.
Comment