பித்யா தேவி பண்டாரி
நேபாள விமான விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 19 Jan, 2023
நேபாளத்தின் போக்ஹாராவிற்கு (POKHARA) அருகில் எட்டி (YETI) விமானம் விபத்துக்கு உள்ளாகி ஏறக்குறைய 70பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபித்து இரங்கல் தந்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
சனவரி 16 திங்கள்கிழமை திருப்பீடத்தூதர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுத் திருத்தந்தையின் சார்பில் அனுப்பிய இரங்கல் தந்தியானது, நேபாளத்தின் அரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், எல்லாம் வல்ல இறைவனின் இரக்கம் துன்புறும் மக்களுக்கு, குணமளிக்கும் மற்றும் அமைதி தரும் ஆசீர்களைத் தரவும், மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இறைவனின் ஆற்றல் கிடைக்கப்பெற திருத்தந்தை செபிப்பதாகவும் அவ்விரங்கல் தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை காலை, காத்மாண்டுவில் இருந்து எட்டி (YETI) ஏர்லைன்ஸ் ATR 72 விமானம் வடக்கு நேபாளத்தில் உள்ள சுற்றுலா நகரமான போக்ஹாரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
கடந்த முப்பது ஆண்டுகளில் இமாலய நாட்டின் மிக மோசமான விமான விபத்துக்களுள் ஒன்றாகக் கருதப்படும் இவ்விபத்தில் நான்கு விமானப்பணியாளர்கள் ஐந்து இந்தியர்கள், நான்கு இரஷ்யர்கள், இரண்டு தென் கொரியர்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சார்ந்த ஒருவர் வீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
300 மீட்டர் பள்ளத்தாக்கில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகளில், இறந்துவிட்டதாகக் கருதப்படும் மூன்று பேரை மீட்புப் படையினர் இன்னும் தேடி வருகின்றனர் என்றும், பயணிகள் விமானத்தின் கறுப்புபெட்டி மற்றும் விமானி அறை குரல் பதிவுகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் 14 உயரமான மலைகளில் எட்டு மலைகள் நேபாளத்தில் உள்ளன என்பதும், மலைப்பாதையில் பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமானது போக்ஹாரா நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comment