கர்தினால் பிலிப் நேரி
இளையோருக்கான மறைக்கல்வி புத்தகம் வெளியீடு
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 34 ஆவது நிறையமர்வு கூட்டமானது 2023 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 30 ஆம் தேதி திங்கள்கிழமை வரை பெங்களூரில் உள்ள புனித ஜான் தேசிய மருத்துவர் அறிவியல் கழகத்தில் நடைபெற்றது. கத்தோலிக்க திரு அவையின் நற்செய்தி அறிவிப்பு பணிதுறையின் தலைவர் கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டேக்லே தொடங்கி வைத்த இந்த நிறையமர்வு கூட்டத்தில் “எம்மாவுஸ் அனுபவம்: இளையோருக்கான மறைக்கல்வி” எனும் புத்தகமானது, கோவா டாமன் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரியால் வெளியிடப்பட்டு, ஐதராபாத் உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி பூலா அவர்களால் பெறப்பட்டது.
இந்த புத்தகமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் மூன்று பகுதிகளுக்கும் 2023, ஜனவரி 23 ஆம் தேதி மறைந்து போன அருட்பணியாளர் ஹெர்வ் மோரிசெட் சிஎஸ்சி அவர்கள் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இந்நூலானது இளையோரின் வாழ்வில் மறைக்கல்வியின் முக்கிய பங்கை பற்றி எடுத்துரைக்கிறது. இது பொதுநிகழ்வுகள், பொது பிரச்சனைகள், இவ்வுலகில் இருக்கும் அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பற்றி எடுத்துரைக்கிறது. தங்களது நம்பிக்கையை ஆழப்படுத்த விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் இப்புத்தகமானது மிக உதவியாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக இளையோரை சிறப்பாக வழிநடத்துவதற்கு இது அருட்பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவியாக இருக்கின்றது. மூன்று பாகங்கள் மற்றும் 14 பாடத் திட்டங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. இது உண்மையாகவே ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், வேதியர் மற்றும் யாரெல்லாம் இந்த மறைக்கல்வி பணியில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவியாக இருக்கின்றது. உண்மையாகவே இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு சிறந்த பரிசாகும். இப்புத்தகத்தை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்வீர்: +91-9886730224
Comment