நவஜீவன் குழந்தைகள் காப்பகம்
கால்கள் இழந்தும் முடங்காத அருள்சகோதரியின் சேவை
- Author குடந்தை ஞானி --
- Friday, 17 Feb, 2023
அருள்சகோதரி அம்பிகா, தோட்டத்து அன்னை மரியா அருள்சகோதரிகள் சபையையைச் சேர்ந்தவர். மத்திய பிரதேசத்தில் உள்ள கோண்டுவா என்னுமிடத்தில் நவஜீவன் குழந்தைகள் காப்பகத்தின் செயலராக தற்சமயம் பணியாற்றி வருகிறார். இவ்வில்லத்தில், குடும்பங்களை விட்டு ரயில்களில் ஓடிவரும் குழந்தைகள், அனாதைகள், குடிகார தந்தையர்களின் பிள்ளைகள், ஏழை கைம்பெண்களின் பிள்ளைகள் அடைக்கலம் தேடி வருவர். 2003 ஆம் ஆண்டு இவ்வில்லம் உருவாக ஏனைய அருட்சகோதரிகளுடன் இணைந்து அருட்சகோதரி அம்பிகா கடுமையாக உழைத்தார். 2003 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 4, 2017 வரை இவ்வில்லத்தில் பல்வேறு நிலைகளில் உழைத்து ஏழை மாணவ- மாணவியர் வாழ்வில் ஏற்றம் பெற உதவினார். ஜனவரி 4, 2017 அன்று மகாராஷ்டிராவில் உள்ள லொனோவாலா ரயில் நிலையத்தில் இவர் இறங்குவதற்கு தம் கால்களை நடைமேடையில் ஊன்றுவதற்கு முன்பாக ரயில் வேகமாக மீண்டும் சென்றதால், தண்டவாளத்தில் சிக்கி தம் இடது காலை பறிகொடுத்தார். நினைவில் இருக்கும்போதே கண்களுக்கு முன்பாக அவர்தம் கால் ரயில் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லபடுவதைக் கண்டார். அதன்பிறகு அங்கிருந்த மக்கள் விரைந்து அவரைக் காப்பாற்ற நடைமேடையில் இழுத்துப்போட்டனர். அதன் பிறகு மருத்துவமனையில் அவரைக் காப்பாற்றும்பொருட்டு 80 சதவீத கால் துண்டிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். வாழ்க்கையே தலைகீழானது. இருப்பினும் நீண்ட உளவியல் சிகிச்சைக்குப் பிறகு, சபைச் சகோதரிகளின் உடனிருப்பாலும் ஊக்கத்தாலும் நம்பிக்கை வளர்த்து செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு தற்சமயம் நலமாக உள்ளார். ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பணிக்கு திரும்பி தற்சமயம் நவஜீவன் காப்பகத்தின் செயலராகவும் துறவற இல்லத்தின் தலைவியாகவும் பணியாற்றி வருகிறார். நான்கு சக்கர வாகனம் முன்பு போல தற்போது ஓட்ட இயலாது என்று வருத்தப்படும் இவர், ஐந்து நிமிடம் தொடர்ந்து நிற்பதே வலி நிறைந்ததாக உள்ள நிலையில் தொண்டுள்ளத்தோடு 24 மணி நேரமும் இடது காலை இழந்த அருள்சகோதரி அம்பிகா பணியாற்றுகிறார். இதுவரை 600 இளைஞர்களுக்கு 18 வயது வரை வழிகாட்டி உதவியுள்ளார்.
கேரளாவில் ஒரு பாராம்பரியமிக்க இந்து குடும்பத்தில் பிறந்த இவர்தம் தாயார், இந்து தெய்வங்கள்மீது கடுமையான பக்தி கொண்டவர். அதற்கு வழிபாடு செய்யும்போதல்லாம் பேய் பிடித்தவர்போல நடந்து கொள்வார். ஆகையால் அவர்தம் உறவினர்களின் வழிகாட்டுதல்படி கத்தோலிக்க குருவிடம் சென்று செபித்தார். கட்டுகளிலிருந்து விடுபட்டு, கத்தோலிக்கரானார். ஒட்டுமொத்த குடும்பமும் கத்தோலிக்கத்தில் இணைந்தது. உறவினர்கள் மீண்டும் இந்துவாகும்படி வற்புறுத்தினர். அவர்கள் அனைவரும் மீண்டும் ஆலயம் செல்வதைத் தவிர்த்தனர். அம்பிகா மட்டும் ஆலயம் செல்வதை நிறுத்தவில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, தான் அருள்சகோதரியாக வேண்டும் என்று பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். அவர்தம் பெற்றோரோ நீ தொடர்ந்து படி என்று கேட்டுக்கொண்டனர். அவரும் படிக்க கல்லூரி செல்வதாக கூறி சென்றுவிட்டு ஒரு துறவற இல்லத்தில் சேர்ந்து பின்னாளில் அருள்சகோதரியாகிவிட்டார். இந்த விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு, இவர்தம் அத்தை நீ அருட்சகோதரியானதற்கு இதுதான் தண்டனை என்று பரிகசித்தார். அருட்சகோதரியோ என் வாழ்வில் அனைத்தும் கடவுளின் திட்டத்தின்படியே நடைபெறுகிறது. ஆகையால் நான் எந்த முறையீடுமின்றி அமைந்த மனத்துடன் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்.
Comment