மத்யூ சுரேஷ்
ஆயர் காணிக்கைதாஸ் வில்லியம் அவர்களை மீண்டும் பணியிலமர்த்திட போராட்டம்
- Author குடந்தை ஞானி --
- Saturday, 18 Feb, 2023
பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்களும் அருள்பணியாளர்களும் துறவிகளும் மைசூரில் ஒன்றுகூடி ஆயர் காணிக்கைதாஸ் வில்லியம் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். கடந்த மாதம் ஓய்வுப் பெற்ற பெங்களூரு பேராயர் பெர்னார்டு மோரஸ் அவர்களை அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மைசூருக்கு திருத்தந்தை நியமித்த பிறகு, உடல் நலமின்மையைக் காரணமாகக் கூறி தற்போது விடுமுறையில் ஆயர் வில்லியம் சென்று உள்ளார். இந்த நிலையில், மைசூர் மறைமாவட்ட பொதுநிலையினரின் குரல் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்யூ சுரேஷ் என்பவரின் தலைமையில் மாபெரும் பேரணி நடத்தி அப்போஸ்தலிக்க நிர்வாகியிடம் முத்திரையிடப்பட்ட புகார் மனுவை அளித்து கவன ஈர்ப்பு செய்துள்ளனர். தமிழரான ஆயருக்கு எதிராக ஒரு சில மறைமாவட்ட குருக்கள் மிகவும் கேவலமான பொய்ச் செய்திகளைப் பரப்புவதையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஓய்வுப் பெற்ற நீதிபதி மைக்கேல் சல்தானா என்பவர் ஆயருக்கு எதிரான பிரச்சாரத்தை சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையாக மேற்கொண்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு திருத்தந்தையிடம் ஆயருக்கு எதிராக 38 மறைமாவட்ட குருக்கள் உட்பட புகார் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment