ஜனஜாதி தர்மா சான்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச்
பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகை நீக்கப்பட வேண்டுமா?
- Author குடந்தை ஞானி --
- Saturday, 18 Feb, 2023
இந்து அடிப்படைவாத குழுக்களில் ஒன்றான ஜனஜாதி தர்மா சான்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் என்ற அமைப்பு பழங்குடியின மக்களில் கிறிஸ்தவர்களாக, முஸ்லீம்களாக மாறியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும், பழங்குடியினப் பட்டிலிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதி நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வேளையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மேகாலயாவில் 33 இலட்சம் மக்கள்தொகை கொண்ட மேகாலயாவில் 85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், அதில் எட்டரை இலட்சம் பேர் கத்தோலிக்கர்கள். உலகிலேயே பேப்டிஸ்ட் கிறிஸ்தவர்களை மிக அதிகமாகக் கொண்ட மாநிலமான நாகலாந்தில், 90 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். இரு மாநிலங்களிலும் பூர்வ பழங்குடியின மக்கள் மிகவும் அதிகம். தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை அளிக்காமல் புறக்கணிப்பது போல பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகளைப் புறக்கணிப்பது இந்துத்துவ அரசியலின் ஒரு கூறாகும். மதத்தின் பெயரால் பழங்குடியின மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வதை ஜனநாயக வாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஜனஜாதி தர்மா சான்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் என்ற இந்த அமைப்பு கிறிஸ்தவ மதமாற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Comment