அருட்பணியாளர் K.K ஆண்டனி
கான்பூர் கிறிஸ்தவர்களின் கோரிக்கை
- Author குடந்தை ஞானி --
- Friday, 24 Mar, 2023
உத்தரபிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், தாங்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக தங்கள் மீது பொய்க்குற்றங்களை சுமத்தி, மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை ஆணையர் P. ஜோக்டண்டிடம் கோரிக்கை விடுத்தனர். உத்தரபிரதேசத்தின் 2021 ஆம் ஆண்டின் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் சட்டமானது, மதமாற்றம் எந்த வகையில் நிகழ்ந்தாலும் அது குற்றம் மேலும் நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாகவும், மனம் மாறவில்லை என்றால் கடவுள் அழித்து விடுவார் என்று கூறியும் பிறரை மதமாற்றுவது கடுமையான குற்றமாகும் என்று சொல்லுகிறது. ஒருவருக்கு மேல் மதமாற்றப்பட்டால் அது கூட்டம் கூட்டமாக மதம் மாற்றுவதற்கு சமமாகும். திருமணமான தம்பதியர்களை மதமாற்றுவது பெரும் கூட்டத்தை மதம் மாற்றுவதற்கு சமம் என்று நவம்பர் 27 ஆம் தேதி 2020 இல் உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கட்டாய மதமாற்ற தடை சட்டமானது கூறுகிறது.
இது குறித்து கான்பூர் பங்குதந்தை அருட்பணியாளர் K.K ஆண்டனி, “இந்த கட்டாய மதமாற்ற தடை சட்டமானது மாநிலத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்மஸ் விழா நேரத்தில் எடுக்கப்படும் கேரல்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் தவக்காலங்களில் வீடுகளில் நடத்தப்படும் செப கூட்டங்களுக்கு இடையூறு செய்வதற்கும், வன்முறை நடத்துவதற்கும் மட்டுமே இச்சட்டமானது மாநிலத்தில் மத அடிப்படைவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளோம். தற்போது நவராத்திரி விழா தொடங்கியிருக்கிறது, இஸ்லாமியர்களும் ரம்ஜான் பெருநாள் நோன்பை தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வீடுகளில் கூடி செபிப்பதற்கு தடை ஏதும் இல்லாத நேரத்தில், கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு மட்டும் இது போன்ற தடைகளை ஏற்படுத்துவது உண்மையாக வருத்தத்தை தருகிறது. எனவே கிறிஸ்துமஸ் விழாவின்போது அளித்த அதே பாதுகாப்பை இந்த தவக்காலத்திலும் எங்களுக்குத் தர வேண்டுமென்று நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறினார். இது குறித்து மாவட்ட காவல் ஆணையர், “உங்களது கோரிக்கையானது மாவட்டத்தில் உள்ள எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு வீடுகளில் நடத்தப்படும் செப கூட்டங்களுக்கு தொந்தரவு ஏதும் ஏற்படாதபடி பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.
Comment