அமெரிக்க ஐக்கிய நாடு
இந்தியா கட்டாய மதமாற்ற தடை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Friday, 24 Mar, 2023
இந்தியாவின் 12 மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டங்களை ரத்து செய்யுமாறு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆணையமானது (USCIRF) இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து நாடுகளின் மத சுதந்திரக் கொள்கைகளை கண்காணிக்கவும், பரிந்துரைக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க நடுவண் அரசானது, மார்ச் 14 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதமாற்றத் தடை சட்டம் தன் மதத்தின் மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு அல்லது பரப்புரை செய்வதற்கான உரிமையை பறிக்கிறது. இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாகும். இந்திய மதமாற்றத் தடை சட்டங்கள் ஒருவர் தாமாக முன்வந்து மதம் மாறுவதற்கு அல்லது தான் விரும்பிய மதத்தை தழுவுவதற்கு பிறர் உதவி செய்வதற்குரிய அனைத்து உரிமைகளையும் பறிக்கின்றன. இந்திய மதமாற்ற தடை சட்டங்கள் இந்தியாவில் மதச் சுதந்திரத்தை இன்னும் மோசமடைய செய்கின்றன. மேலும் சிறுபான்மை மக்களை தாக்கவும், ஒடுக்கவும், துன்புறுத்தவும், அவர்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவுவதற்கும் இது வழி வகுக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவை சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ் இடம்பெறும் நாடாக அடையாளம் கண்டிட அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு, இவ்வாணையமானது (USCIRF) பரிந்துரை செய்துள்ளது. நாட்டு மக்களின் மத சுதந்திரத்தை காத்திட, தற்போது நடைமுறையில் இருக்கும் மதமாற்ற தடை சட்டங்களை இந்தியா திரும்ப பெற்றிட முயற்சி செய்ய வேண்டும் என்றும், மதமாற்ற தடை சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை, குற்றவாளிகளாக கருதுவதை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தடை செய்கிறது என்றும் இவ்வாணையம் வலியுறுத்தி உள்ளது. “இந்தியாவின் மதமாற்ற தடை சட்டங்கள் குறித்து அமெரிக்க குழு தனது அறிக்கையில் கூறியிருப்பது அனைத்தும், இந்தியாவில் தற்போது நிலவி வரும் எதார்த்தங்களையே பிரதிபலிக்கிறது” என்று குஜராத் மாநிலத்தை சேர்ந்த இயேசுசபை மனிதஉரிமை ஆர்வலர் அருள்பணியாளர் செட்ரிக் பிரகாஸ் கூறியுள்ளர்.
இந்தியாவின் 28 மாநிலங்களில் 12 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் இருக்கின்றன. விஷ்வ இந்து பரிக்ஷத் போன்ற இந்து அடிப்படைவாத குழுக்கள் மதமாற்ற தடைச் சட்டத்தை ஒரு தேசிய சட்டமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றன
Comment