No icon

``பிரதமர் மோடி எங்களிடம் ஆதரவு கேட்டார்"

கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா மாநிலம் வந்தார். நேற்று தினம் கொச்சியில் பா.. சார்பில் நடைபெற்ற யுவம் -2023 என்ற நிகழ்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். இளைஞர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால், பிரதமர் உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நேற்று இரவு, கொச்சி தாஜ் விவண்டா ஹோட்டலில் கிறிஸ்தவ பேராயர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். சீரோ மலபார் சபை ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க சபை கர்த்தினால் பசேலியோஸ் மார் கிலிமீஸ், ஆர்த்தோடெக்ஸ் சபையின் கர்த்தினால் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்ட 8 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பேராயர்கள் வெளிப்படையாக பேசி உள்ளனர்.

ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. வட இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை பிரதமர் கவனத்துக்கு கொண்டுசென்றோம். கிறிஸ்தவ சமூகத்தை பாதுகாப்பதாக பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார். அனைத்து மதத்தினருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பட்டியலின கிறிஸ்தவர்களின் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பின்போது விவாதித்தோம். கேரள மக்களுக்கு தேவையானவற்றையும், புதிய வளர்ச்சி திட்டங்களையும் கொண்டுவருவதாக பிரதமர் தெரிவித்தார். பாரத நாடு முழுவதையும் ஒரே சீராக பார்ப்பதாகவும், வளர்ச்சிக்கு கேரளாவும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். போப் ஆண்டவரை இந்தியாவுக்கு அழைத்துள்ளதாக பிரதமர் கூறினார். கேரளாவின் தேவைகள் குறித்து பிரதமரிடம் பேச முடிந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. திறந்த மனதுடன் பிரதமர் நரேந்திரமோடி எங்களிடம் உரையாடினார்" என்றார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட யாக்கோபாயா சபையின் பேராயர் ஜோசப் மார் கிரிகோரியோஸ் கூறுகையில், "பிரதமருடனான சந்திப்பில் பொதுவான விஷயங்களில் கிறிஸ்தவர்களின் அச்சம் குறித்து பகிர்ந்துகொண்டோம். விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்களின் பிரச்னைகளையும் எடுத்துரைத்தோம். பா.. ஆட்சியில் இல்லாத கேரளா போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

பிரதமர் மோடி அடிக்கடி கேரளாவுக்கு வரவேண்டும் எனவும் பேராயர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தோம். சர்ச்சுகள் சம்பந்தமான பிரச்னைகளை தெரிவித்தோம். அதற்கு தீர்வு ஏற்படுத்த உதவி செய்வதாக பிரதமர் தெரிவித்தார். கேரளா மாநிலத்துக்கு வழங்கவேண்டிய எல்லா நலத்திட்டங்களும் வழங்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்காது எனவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோவா உள்ளிட்ட பகுதிகள் மத்திய அரசையும். பா..-வையும் ஆதரிப்பதாகவும் கூறினார். எங்களின் பிரார்த்தனையும், ஆதரவும் வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அது உண்டு என நாங்கள் தெரிவித்தோம். பிரதமருடனான சந்திப்பு உற்சாகம் அளிக்கிறது. சபை தலைவர்கள் சொல்வதைக்கேட்டு மக்கள் ஓட்டுப்போடவேண்டும் என்பது இல்லை. அரசு எந்த வகையில் மக்களுக்காக செயல்படுகிறது என்பதை பொறுத்தே மக்கள் முடிவு செய்வார்கள். இதை நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம். மக்களின் வேதனைகளையும், அச்சம் குறித்தும் பிரதமரிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் அரசியலாக பார்க்கவில்லை" என்றார்.

 

 

Comment