2023 ஏப்ரல் 25
நேர்மைக்காக உயிர்விட்ட தூத்துக்குடி VAO லூர்து பிரான்சிஸ்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 03 May, 2023
லூர்து பிரான்சிஸ் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக (VAO) அலுவலராகப் பணியாற்றிவந்த நிலையில், 2023 ஏப்ரல் 13 ஆம் தேதி, கலியாவூரைச் சேர்ந்த இராமசுப்பிரமணியன் என்பவர் முறைகேடாக அப்பகுதியிலுள்ள ஆற்றங்கரை மணலை அள்ளிச் சென்றது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அப்புகாரினை அடிப்படையாக கொண்டு, இராமசுப்பிரமணியன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இந்நிலையில், லூர்து பிரான்சிஸ், 2023 ஏப்ரல் 25 ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது, இராமசுப்பிரமணியன் அவரின் நண்பர் மாரிமுத்துடன் வந்து, லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில், பலத்த காயங்கள் அடைந்த லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லூர்து பிரான்சிஸின் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர், முறப்பநாடு காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக முறப்பநாடு காவல்துறையினர் உதவியுடன்தான் ஆழிகுடி, கலியாவூர், மணக்கரை, அனந்த நம்பிக்குறிச்சி, மருதூர், செந்நெல்பட்டி, உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப் படுக்கைகளில் மணல் கொள்ளை நடந்தேறி வந்திருக்கிறது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கின்றனர். தமிழக அரசும் இக்குடும்பத்திற்கு உதவியுள்ளது.
Comment