கர்தினால் ஆலஞ்சேரி
திருத்தந்தையின் இந்திய வருகைக்கு பிரதமர் மோடி இசைவா?
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 03 May, 2023
கேரளாவின் கத்தோலிக்கத் திருஅவை தலைவர்கள், பிற கிறிஸ்தவ சபைத்தலைவர்கள் இணைந்து இந்திய பிரதமர் மோடியை ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவின் தலைநகரான கொச்சியில் ஒரு தனியார் உணவு விடுதியில் சந்தித்திருப்பது கிறிஸ்தவர்களுடைய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு நாள் அலுவல் பயணமாக கேரளாவுக்கு வந்த பிரதமர் மோடியை கத்தோலிக்கத் திருஅவை உட்பட 8 கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் சந்தித்தனர்.
இது குறித்து கேரளாவை தளமாகக் கொண்ட கத்தோலிக்க தொலைக்காட்சியான ஷெகினா நியூஸில் வெளியிடப்பட்ட காணொளியில், கர்தினால் ஆலஞ்சேரி “இது உண்மையாகவே கிறிஸ்தவர்களுக்கான ஒரு வெற்றியின் தருணம். இந்திய பிரதமரைச் சந்தித்து, கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரவும், வட இந்திய மாநிலங்களில் பணிபுரியும் மறைப்பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும், திருவனந்தபுரத்தில் கட்டப்படும் அதானி துறைமுகத்தால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைப் பற்றியும், திருத்தந்தையின் இந்திய பயணத்தைக் குறித்தும் பேசினோம். மத வேறுபாடுகள் களைந்து ஒற்றுமையுள்ள நாட்டை உருவாக்குவதாகவும், திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திருஅவை தலைவர் ஒருவர் “உயிர்ப்பு ஞாயிறன்று டெல்லி பேராலயத்திற்கு பிரதமர் சென்றார். தற்போது கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கேரளாவில் கிறிஸ்தவ தலைவர்களைச் சந்தித்துள்ளார். இது உண்மையாகவே வரப்போகிற தேர்தலில் கிறிஸ்தவ மக்களினுடைய ஓட்டு வங்கியை குறி வைத்து நடப்பது போல் தோன்றுகிறது. முதலில் பிரதமர் மோடி சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை நிறுத்த வன்முறையாளர்களுக்கு அழைப்பு விடுக்கட்டும்” என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Comment