அருள்பணியாளர் வர்கீஸ்
தாக்கப்பட்ட கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்கன்னியர்கள்
- Author குடந்தை ஞானி --
- Friday, 12 May, 2023
இந்தியாவின் மத்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்படும் ஒரு அனாதை இல்லத்தில் அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சோதனையால் அவ்வில்லத்தை நடத்தும் அருட்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உண்மையாகவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மறைமாவட்டத்தில் சம்பூரா என்கிற இடத்தில் புனித பிரான்சிஸ் அனாதை இல்லமானது கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்கன்னியர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
2023 மே 8 ஆம் தேதி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழுவும், குழந்தைகள் நல வாழ்வு குழுவும் ஒன்றிணைந்து எவ்வித முன் அறிக்கையோ அல்லது சோதனை செய்ய முறையான அனுமதியோ இல்லாமல் காவல் துறையோடும் மற்றும் சிலரோடும் அனாதை இல்லத்தில் உள்நுழைந்து அவ்வில்லத்தை நடத்தி வந்த அருட்பணியாளர்கள் நவீன் மற்றும் ஜோசி அவர்களை தாக்கிவிட்டு அருகாமையில் இருந்த அருட்சகோதரிகளின் இல்லத்தில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கொள்ளையிட்டு பின்பு, ஆலயத்தில் நுழைந்து ஆலயத்தையும் அசிங்கப்படுத்தினார்கள்.
அருட்பணியாளர் ஜோசி “இக்குழுக்களோடு வந்த காவல்துறையினர் கடுமையான தீய வார்த்தைகளால் எங்களைத் திட்டி அங்கு சூழ்ந்திருந்த அனைவரின் முன்பாகவும் எங்களை அடித்தார்கள். அருகாமையில் இருந்த அருள் சகோதரிகளின் இல்லத்திற்குள் நுழைந்து அங்கேயும் இதே போன்ள வன்முறையில் ஈடுபட்டு அவர்களின் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி தூக்கி வந்தார்கள். எங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களையும் சிசி டிவிகளையும், கேமராக்களையும் மற்ற ஆவணங்களையும் அடித்து நொறுக்கி எடுத்துச் சென்றார்கள். அனைத்திற்கும் மேலாக எங்கள் தேவாலயத்தின் உள்ளே சென்று நாங்கள் புனிதமாக கருதும் ஆலயத்தின் பலிபீடத்தின் மீது ஏறி நின்று அசிங்கப்படுத்தினார்கள். பிறகு எங்களை தரதரவென்று இழுத்துச் சென்று காவல்துறையின் வாகனத்தில் திணித்தார்கள்” என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்த வன்முறை சம்பவத்தை குறித்து அனாதை இல்லத்தினுடைய இயக்குனர் தந்தை அருள்பணியாளர் வர்கீஸ் “எங்கள் இல்லத்தின் காப்புரிமையை புதுப்பிப்பதற்காக நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்தை நாடி வருகிறோம் ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பே இத்தகைய வன்முறை நடந்தேறியிருப்பது மற்றும் அது சம்பந்தமான ஆவணங்கள் அடித்து நொறுக்கி கிழித்து எடுத்துச் சென்றிருப்பது, இது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதை காட்டுகிறது. மேலும் இந்த இல்லத்திற்கென 277 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட நாள் கனவு, இதற்காகவும் இவர்கள் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். முறையற்ற, அனுமதியில்லாத சோதனை மூலம் வன்முறையை நிகழ்த்திய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Comment