பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் தொடர் அவலம்
நமது இந்தியத் திருநாட்டின் தலைநகரான புது டெல்லியில் ‘நியூஸ்லிக்’ எனப்படும் செய்தி வலைத்தளத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா என்பவரையும், அவ்வலைத்தளத்தின் மனிதவள மேலாளர் அமித் சக்ரவர்த்தியையும் டெல்லி காவல் துறை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருப்பது இந்தியத் திரு அவைத் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நியூஸ்லிக் செய்தி வலைத்தளமானது சீன நாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனுடைய கருத்துகளை இந்திய நாட்டில் பரப்பிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டின் பெயரில், இங்குப் பணிபுரியும் அலுவலக ஊழியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என 46-க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளைச் சோதனைக்குட்படுத்தி, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, சிறையிலடைத்து, இந்நிறுவனத்தை மூடி இருக்கிறது டெல்லி காவல் துறை. ஏற்கெனவே 2021-இல் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கமானது இதே குற்றச்சாட்டைக் கூறி இந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தது.
மனித உரிமை ஆர்வலர் அருள்பணியாளர் செட்ரிக் பிரகாஷ் “ஆளும் அரசாங்கம் பயத்தில் இருப்பது தெரிகிறது. இந்தப் பாசிச அரசாங்கம் விரக்தியில் இருப்பது தெரிகிறது” என்று கூறினார். டெல்லி உயர் மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பாளர் அருள்பணியாளர் சவரிமுத்து சங்கர் “ஒருவர் தனது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமை தந்திருக்கிறது. இந்த உரிமை மறுக்கப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல. இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்கிறார்கள்; ஆனால், அந்த மக்களைக் கருத்துத் தெரிவிக்க விடுவதில்லை” என்று கூறினார்.
Comment