கத்தோலிக்க இணைப்புச் செயலி அறிமுகம்
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும், கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான கர்தினால் பிலிப் நேரி அவர்கள், பெங்களூரு, புனித ஜான் தேசிய சுகாதார அறிவியல் மையத்தில் 2023, செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 92-வது செயற்குழுக் கூட்டத்தில், கத்தோலிக்க இணைப்புச் செயலி எனும் புதுச் செயலியை வெள்ளோட்டத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஊடகத் துறையினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கத்தோலிக்க இணைப்பு எனும் அலைபேசி செயலியைக் கொண்டு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இருக்கும் இந்தியக் கத்தோலிக்க இறைச் சமூகத்தை ஒன்றிணைக்க முடியும். மேலும், இந்தச் செயலியை ஆன்மிக வளங்களின் தொகுப்பாக, நமக்குத் தொடர்புடைய செய்திகளை வழங்கும் ஒரு மையமாக, மேலும் மருத்துவம், கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஒரு தளமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்தச் செயலியைக் கொண்டு அருகில் இருக்கும் கத்தோலிக்க ஆலயங்களைப் பற்றியும், ஆன்மிக வழிபாடுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். அனைத்திற்கும் மேலாக இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினுடைய துறைகளில் நடைபெறும் செயல்பாடுகள், பயிற்சிப் பாசறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
‘கத்தோலிக்க இணைப்பு’ எனும் இந்த அலைபேசி செயலியின் பயன்பாடானது முதன் முதலில் பெங்களூரு உயர் மறைமாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 2024, பிப்ரவரி மாதம் ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் பயன்படுத்தும்படி வெளியிடப்படும். இந்தச் செயலியைப் பற்றி தங்கள் கருத்துகளைக் கூற விரும்புவோர் அல்லது செயலியில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்க விரும்புவோர் கீழ்க்காணும் மின்னஞ்சலையும், அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்: ccbimediaapostolate@gmail.com
Fr. Cyril Victor, Coordinator, CCBI Media Apostolate, 9886424928
Comment