ஒடிசாவில் பொன்விழா காணும் SSpS
தூய அர்னால்டு ஜான்சன் 1889-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஸ்டைல் எனுமிடத்தில் தூய ஆவியின் ஊழியர்கள் சகோதரிகள் சபையை (SSpS) நிறுவினார். இச்சபையைச் சார்ந்த சகோதரிகள் 1933-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் இந்தூரை வந்தடைந்தார்கள். தற்போது 3000-க்கும் மேற்பட்ட அருள்சகோதரிகளை அங்கத்தினர்களாகக் கொண்டுள்ள இச்சபையானது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அயராது இறைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் நான்கு மாகாணங்களாகப் பிரிந்து தங்கள் பணியைச் செய்து வரும் இச்சபைச் சகோதரிகள், ஒடிசாவை மையமாகக் கொண்ட மாகாணத்தில் தங்களது மறைப்பணியில் பொன் விழாவைக் கொண்டாடுகிறார்கள். தொழுநோயாளர்களுக்காக உழைத்த ஆஸ்திரேலியாவின் கிரஹாம் ஸ்டெயின் மற்றும் அவரது இரு மகன்கள் ஈவு இரக்கமின்றி எரிக்கப்பட்ட ஒடிசாவில், அருள்பணியாளர் அருள்தாஸ் அவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஒடிசாவில், தூய ஆவியின் ஊழியர்கள் சகோதரிகள் சபை (SSpS) பொன்விழாவைக் கொண்டாடுவது உண்மையாகவே இறைப்பணியில் அவர்கள் கொண்டிருக்கும் தாகத்தை, ஆர்வத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து இவர்களின் பணி சிறக்க நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டி, இவர்களை வாழ்த்துவோம்!
Comment