கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது காவிக்கொடி
மத்தியப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயிலானது ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட்டது. இவ்விழாவின் முத்தயாரிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி தங்கள் இல்லங்களை அழகுபடுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வைச் சேர்ந்த குழுவினர் வேண்டுமென்றே ஜாபுவா மாவட்டத்தில் உள்ள நான்கு கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது ஏறி சிலுவையில் காவிக் கொடிகளைக் கட்டினார்கள். இதைக் கிறிஸ்தவர்கள் எதிர்த்தபோது அவர்களை மிரட்டினார்கள். இது குறித்து சாலோம் திரு அவையின் துணை ஆயர் பால், “இந்த வன்முறைச் செயலைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கூறினோம். ஆனால் அவர்கள், வன்முறையாளர்களோடு சமாதானமாகச் செல்லும்படி எங்களுக்கு அறிவுறுத்தினார்கள். அவர்கள் செய்த அனைத்தையும் நாங்கள் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கிறோம். மூன்று தேவாலயங்களிலிருந்து கொடிகளை நீக்கி விட்டோம். அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் இன்னும் ஒரு தேவாலயத்திலிருந்து கொடியை நீக்க முடியவில்லை” என்று கூறினார். ஜாபுவா மறைமாவட்ட மக்கள் தொடர்புச் செய்தியாளர் அருள்பணி. ராக்கி ஷா, “சமூக அமைதியை, ஒற்றுமையைச் சீர்குலைத்த காரணத்திற்காக இவர்கள் மீது உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
Comment