No icon

பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆலயம்

மாகே அல்லது மய்யழி என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இது கேரளாவினால் சூழப்பட்டிருந்தாலும் இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. மேலும், மாகே கோழிக்கோடு மறைமாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தளமாகும். இங்கு 1736-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தூய தெரேசா ஆலயமானது, 2024-ஆம் ஆண்டு, பிப்ரவரி-24-ஆம் தேதியன்று பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காகத் திருவழிபாட்டுத் திருப்பேராயம் மற்றும் அருளடையாளங்கள் திருப்பேராயத்தால் அளிக்கப்பட்ட ஆணையைப் பேராலயத்தின் அதிபர் தந்தை முனைவர் வின்சென்ட் புளிக்கென் இலத்தீன் மொழியில் வாசிக்க, அதனுடைய மலையாள மொழிபெயர்ப்பை மறைமாவட்டத்தின் அதிபர் சஞ்சீவ் வர்கீஸ் வாசித்தார். வெராபோலி மறைமாவட்டத்தின் பேராயர் முனைவர் ஜோசப் காளத்திபரம்பில் திருப்பலியைத் தலைமையேற்று நடத்தினார். தலச்சேரி சீரோ-மலபார் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானியில் மறையுரை வழங்கினார். இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் (CCBI) முனைவர் ஸ்டீபன் அலதரா பேராலயத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார். பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comment