செவித்திறன் அற்ற, பேச இயலாத நிலையில் குருவாக அருள்பொழிவு பெற்ற முதல் அருள்பணியாளர்
இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் திருச்சூர் உயர் மறைமாவட்டத்தில் பேச முடியாத மற்றும் கேட்க முடியாத ஒருவரைக் கத்தோலிக்கக் குருவாக அருள்பொழிவு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பேராயர் ஆன்ட்ரூஸ் தாழத் அவர்கள் மே 2-ஆம் தேதி திருச்சிலுவை சபையைச் சார்ந்த இரு திருத்தொண்டர்களைக் குருக்களாக அருள்பொழிவு செய்தார். இவர்களுள் ஜோசப் என்பவருக்கு முழுமையாகப் பேசவும், கேட்கவும் இயலாது. 38 வயது நிரம்பிய அருள்பணியாளர் ஜோசப் சைகை மொழியில் வழிபாடுகளை நிகழ்த்துகிறார். இவரது உடன்பிறந்த சகோதரருக்கும் பேசவும், கேட்கவும் இயலாது. அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதாக ஜோசப்பின் தாயார் கூறினார். இந்தியாவில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பேச முடியாத மற்றும் கேட்க முடியாத குறைபாடுகளோடு இருப்பதாகவும், அவர்களுக்காகப் பணிபுரியப் போவதாகவும் அருள்பணியாளர் ஜோசப் தெரிவித்தார். அருள்பணியாளர் ஜோசப் அவர்களைச் சேர்த்து ஆசிய அளவில் இரண்டு அருள்பணியாளர்களும், உலக அளவில் 26 அருள்பணியாளர்களும் பேச இயலாத மற்றும் கேட்க இயலாத நிலையிலும் இறைப்பணி செய்து வருகிறார்கள்.
Comment