சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Thursday, 30 May, 2024
“மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற, பட்டம் பெறுவது என்பது ஒரு படிக்கல்லாக மட்டுமே அமைகிறது. கல்வி கற்பதற்கு எல்லையே இல்லை. எனவே பட்டம் பெறுவதோடு கற்றல் என்பது முடிந்துவிடுவதில்லை. நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பதன் மூலம் அவை சமூகம் குறித்த அறிவை வழங்கும். உலகம், காலநிலை மாற்றம் மற்றும் நாடுகளிடையேயான போர்கள் போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. எனவே, இக்காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களது சுயமதிப்பை உணர்ந்து, தங்களது செயல்பாடுகளைச் சமூக அக்கறை கொண்டதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.”
- திரு. செல்வராஜ், மாநிலத் தகவல் ஆணையர்
“கொரோனா பெருந்தொற்றின்போது செவிலியர்களின் சேவை அளப்பரியது. மிகப்பெரிய சேவை புரியும் செவிலியர்களின் ஊதியம் தற்போதுவரை குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை மட்டும் வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள்கூட தினமும் ரூ. 1,000 ஊதியம் பெறுகின்றனர். எனவே, நோய்களுக்கு இடையே பணிபுரியும் முன்களப் பணியாளர்களான செவிலியர்களுக்கு ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும்.”
- திருமதி. ஏ.எஸ். குமாரி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர்
“கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் கணினி அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ளவும், வேகமாக வளர்ந்து வரும் கணினித் துறையில் உருவாகும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையிலும் இந்தியக் கணினிச் சமூக அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது கணினித் தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் விரிவடைந்து அனைத்துத் துறைகளின் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ்ந்து வருகிறது. கணினித் துறையில் சாதனைகள் அதிகரிக்க, மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும்.”
- திரு. நவீன் கருணாகரன், H.C.L டெக்னாலஜிஸ் நிறுவனத் தொழில்நுட்ப மேலாளர்
Comment