சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Thursday, 18 Jul, 2024
“நீட் தேர்வு விவகாரத்தில் நமது மாணவர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். நம்பிக்கையை மீட்டெடுக்க நாடாளுமன்ற விவாதம்தான் முதல் நடவடிக்கை. மாணவர்களின் நலன் கருதி இந்த விவாதத்துக்கு நீங்கள் தலைமை தாங்கினால், அது பொருத்தமாக இருக்கும். நீட் தேர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண, திடமான நடவடிக்கைக் கோரி இன்று மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தங்களின் எம்.பி.க்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது உயர் கல்விமுறை நாசமாகி விட்டதை அது காட்டியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 70 தேர்வுகளின் கேள்வித்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.”
- திரு. இராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி
“இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை அடியோடு மாற்றி வருகின்றன. ஏ.ஐ. மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும் என்று அச்சப்படாமல், அவற்றோடு இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒட்டுமொத்தப் பணிச்சூழலையே மாற்றிவிட்டது. பொறியியல் பட்டதாரிகள் ஏ.ஐ. உள்ளிட்ட புதிய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேவேளையில், இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அறநெறி மற்றும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.”
- திரு. டி.ஜி. சீதாராம், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர்
“பள்ளியில் கடுமையாகப் படித்தால் போதும்; கல்லூரியில் படிக்கத் தேவையில்லை எனும் மனநிலையில்தான் மாணவர்கள் பலர் கல்லூரிப் பருவத்தைத் தொடங்குகின்றனர். கல்லூரியில் நாம் கற்றுக்கொள்வதுதான் அனைவருடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஆகையால் மாணவர்கள் இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, பள்ளியைப் போலவே கல்லூரியிலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நல்லொழுக்கங்களும், மற்றவர்களுக்கு உதவும் குணமும்தான் ஒருவரை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்வதைச் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.”
- திரு. M.S. வெங்கடேசன், இந்திய வருமான வரித்துறைப் பணியாளர் கூட்டமைப்பின் தலைவர்
Comment