சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Wednesday, 21 Aug, 2024
“150 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மை கிடையாது. நம்மால் 150 கோடி பேரின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் சிறப்பாகப் பங்காற்றுகின்றன. நம் நாட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை. ஒருவரின் திறமையை அடையாளம் கண்டு, அதைச் சரியான நேரத்தில் வளர்ப்பதில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதைச் சொல்வதற்காக மக்கள் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. ஆனால், இதுதான் எதார்த்தம்.”
- திரு. சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்து ஜாம்பவான்.
“அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு கால அட்டவணையைப் பின்பற்றி, ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்தரத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மாநில உயர் கல்வி கவுன்சில் அளித்துள்ள பாடத்திட்டத்தை அனைத்துக் கல்லூரிகளிலும் செயல்படுத்த வேண்டும். அதன் நிதிப்பிரச்சினை தொடர்பாகத் துணை வேந்தர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.”
- திரு. பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சர்.
“LIC-யில் பணம் போட்டவர்கள், வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள், மாதந்தோறும் PF பணம் கட்டுபவர்கள், காப்பீட்டுச் சந்தா செலுத்துபவர்கள் என எல்லாரின் பணமும் பங்குச் சந்தையில்தான் இருக்கின்றன. இந்திய மக்களின் பணம் ஐந்து இலட்சம் கோடி டாலர்கள் பங்குச்சந்தையில் இருக்கும்போது, ‘நான் பங்குச்சந்தையில் எந்த முதலீடும் செய்யவில்லை, அதனால் SEBI-யில் (இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை’ என இருக்கக் கூடாது.”
- திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், முதலீட்டு ஆலோசகர்.
Comment