சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Wednesday, 28 Aug, 2024
“அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம், இயற்கைப் பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கைகளை வெளியிடுவதில் பலன் அளிக்கவில்லை. பொதுவான எச்சரிக்கைகள் தவிர, இயற்கைப் பேரிடர்களைத் துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை செய்வது காலத்தின் தேவை. பல நாடுகளில் இதற்கான அமைப்புகள் உள்ளன. நமது நாடு இத்தகைய மேம்பட்ட முறையைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.”
- திரு. பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்
“தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புத்தாக்கப் பயிற்சி, இப்போது 25,000 தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ‘தமிழை ஒரு பாடமாகப் படித்து இருந்தால்தான் கல்லூரியில் இடம்’ என்று தனியார் பல்கலைக்கழகங்கள் சொன்னால் அனைவரும் தமிழைக் கட்டாயம் படிப்பார்கள்.”
- திரு. அன்பில் மகேஸ், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
“விமான நிலையங்களைப் போல நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றிப் பணியாற்ற முடியும். சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க, நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.”
- மருத்துவர் ஆர்.வி. அசோகன், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) தலைவர்
“நிறுவனங்கள் தமது முதலீடுகளை ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தாலும், அந்தக் கணக்கு அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயரில் சென்றுவிடுகின்றன. எனவே, இதனை நிபுணர்கள் சரியான குறியீடாகக் கருதுவதில்லை. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பத்து இலட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை உறுதிசெய்து, 31 இலட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார் திராவிட நாயகன் முதலமைச்சர் அவர்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் கிரகிக்க முயற்சிக்க வேண்டும்.”
- திரு. டி.ஆர்.பி. ராஜா, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர்
Comment