No icon

‘பன்மை’ யைக் காப்போம்!

பொது சிவில் சட்டம் ஏற்க மாட்டோம்!

இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி, எழுபத்தி எட்டாவது சுதந்திர தினவிழாவன்று, தலைநகர் புது தில்லியில் ஆற்றிய உரையின் போது, “மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை இந்தியா ஏற்க வேண்டும்என்று அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளார். இந்தியக் கிறிஸ்தவம் இக்கோரிக்கையை ஏற்காது; ஏற்க முடியாது என்று அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறோம். ‘பன்மைஎனும் சனநாயகப் பண்பிற்கு முரணாக ஒற்றையை அல்லது ஓர்மையைத் தன் அரசியல் கொள்கையாகக் கொண்டு ஆட்சியேற்றிருக்கும் இன்றைய அரசின் இக்கோரிக்கையை நிராகரிக்கின்றோம்.

பொது சிவில் சட்டம் பன்முகச் சமூகங்களின் தனித்த அடையாளங்களுக்கு எதிரானது; இந்தியப் பன்முகக் கலாச்சார விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குவது. இந்தியாவின் பல்சமயங்கள் தமது தனித்த அடையாளங்களைப் பேணுவதால், சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு வருவதில்லை. மதச்சார்பற்ற அரசமைப்பைக் கொண்ட இந்தியா, மத வேறுபாடுகளையும், அம்மதங்களின் இருப்பையும் மதிக்கிறது. சமமாக நடத்துகிறது. மதச்சார்பற்ற நாடு மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபடுத்துவதில்லை. மதச்சார்பற்ற நாடு பொது சிவில் சட்டத்தை ஏற்காது என்பதே உண்மையாயிருக்க, மதத்தின் அடிப்படையில் மக்களைத் துருவப்படுத்தி, மதப் பெரும்பான்மையின் மூலம் பெரும்பான்மைவாத (Majoritarian) அரசை நடத்தி வரும் ஓர் அரசு, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இன்றைய ஆளும் பாரதிய சனதா கட்சி மக்களவைத் தேர்தல்களில், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லி வந்த போதும், கடந்த இரு முறையும் நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திராத நிலையில், கூட்டணித் தயவில் ஆட்சிக் கட்டிலேறியிருக்கும் மோடி அரசுமதச்சார்பற்றஎன்ற ஆடையோடு மீண்டும் பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகிறது. இந்தப் போக்கை சனநாயகத்தையும் பன்மைப் பண்பின் விழுமியங்களையும் நம்பும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினர் ஏற்க மாட்டோம் என்று உறுதியாக அறிவிக்கிறோம். இந்திய நாட்டின் மதச்சார்பற்ற அரசமைப்பை நம்பும் சனநாயகச் சக்திகள், பன்மைக் குணமிக்க சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தனித்த வழியைச் சிதைக்கும்பொதுஎன்ற பொய்ச் சொல்லை நம்பிவிடமாட்டார்கள். இச்சக்திகளோடு நீண்ட வரலாறும், செறிவான பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட கிறிஸ்தவம் இதை ஏற்காது என்பதனை அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

- மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறைமாவட்டம் தலைவர், பொதுநிலையினர் பணிக்குழு, தமிழ்நாடு ஆயர் பேரவை

Comment