சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Thursday, 26 Sep, 2024
“இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இவை வெகுவாகப் பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம்தான். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடகப் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்கச் செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.”
- திரு. நா. முருகானந்தம், தலைமைச் செயலர்
“நாட்டில் கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். சீனாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதால் அங்கு கல்வி நல்ல வளர்ச்சி அடைந்து, பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இந்தியாவிலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சி அடையும். கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் குறைந்தபட்சம் பெண்களுக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும்.”
- திரு. விசுவநாதன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்
“மாணவர்கள் வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் கடும் உழைப்பின் மூலம் வெற்றிபெற வேண்டும். முழு மன உறுதி மற்றும் ஈடுபாட்டுடன், தேர்ந்தெடுத்த செயலைத் தொடர்ந்து முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.”
- திரு. பி. வீரமுத்துவேல், சந்திரயான்-3, திட்ட இயக்குநர்
Comment