No icon

ஜூலை 28: ‘தாத்தா-பாட்டியர்’ தினம்’ சிறப்புக் கட்டுரை

‘முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்’(திபா 71:9)

திருத்தந்தையின் சிந்தனைத் தாக்கம்

அகில உலகத் திரு அவை ஜூலை மாதம் 28-ஆம் நாளை தாத்தா-பாட்டியர் தினமாகக் கொண்டாட அழைப்பு விடுக்கிறது. நான்காம் ஆண்டு தாத்தா-பாட்டியர் தினத் திருத்தந்தையின் செய்தியின் அடிப்படையில் பின்வரும் சிந்தனைகள் அமைகின்றன.

தற்காலத்தில் முதுமையின் நிலைமை:

வேளாங்கண்ணி திருவிழா என்றாலே ஆண்டுதோறும் நடைபயணம் செல்கின்ற ஒரு குடும்பத் தலைவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சொந்த அம்மாவைப் பார்த்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிற உண்மைச் செய்தியை அறியும்போது நெஞ்சம் நொறுங்கிப் போகிறது.

வேலையின் நிமித்தமாக வெளி மாநிலங்கள், தூரத்து இடங்கள், வெளிநாடுகளில் வசிக்கின்ற பிள்ளைகள் தாய், தந்தையைப் பேணுவதற்காகப் பணியாளர்களை வீடுகளில் வைத்திருந்தாலும் அந்தத் தாயும், தந்தையும் தேடுவது பிள்ளைகளுடைய உடனிருப்பை என்பதை முதிர் வயதுடைய அவர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

மரணங்கள் வரும் பொழுது ஓடோடி வருகின்ற பிள்ளைகள், அவ்வப்பொழுது தாய், தந்தையை வந்து பார்த்து, அவர்களோடு தங்கியிருந்து நேரங்களைச் செலவிடுவது என்பது, ஆனந்தமான அனுபவமாக மாறும். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் பெற்றோர்கள், அவர்களைக் காணாமலே கண்மூடி விடுகின்ற சூழலையும், கொடுமையையும் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில்தான் திருத்தந்தை முதியோர் மற்றும் தாத்தா, பாட்டியர் தினச் செய்தியில் திருப்பாடலிலிருந்து (71:9) ஒரு வரியைத் தேர்வு செய்திருக்கிறார். “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்என்பதுதான் அந்தச் செய்தி.

கைவிடாத கடவுள்

எந்தச் சூழலிலும் கடவுள் தம் பிள்ளைகளைக் கைவிடுவதில்லை. முதுமை எய்தும் பொழுதும், தன்னுடைய ஆற்றலை இழக்கும் போதும், நரைமுடி தன்னில் முளைக்கும் போதும், தன்னுடைய சமூக ஈடுபாடு குறையும் போதும், தன்னால் ஒரு பயனும் இல்லை என்கிற எண்ணம் பிறருக்கு வரும் பொழுதும் முதியோர் உடைந்து போகிறார்கள். ஆனால், மனிதன் பார்ப்பதைப் போல கடவுள் மனிதனின் தோற்றத்தைப் பார்ப்பதில்லை (1சாமுவேல் 16:7). மனிதரால் உதறித் தள்ளப்பட்டாலும், கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கற்களாகவே முதியோர்கள் பார்க்கப்படுகிறார்கள் (1பேதுரு 2:4,5).  திருவிவிலியம் முழுவதுமே கடவுளின் உண்மை அன்பின் கதை. தாயின் கருவில் நம்மை உருவாக்கினவர் தம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டார் (திபா 16:10) என்னும் நிலைக்கு உள்ளது அவரின் அன்பு. இந்த அன்புள்ள கடவுள் முதிர் வயதினருக்கு நெருக்கமாகவே இருக்கிறார். முதிர்ந்த வயது இறைவனின் ஆசிராகவே பார்க்கப்படுகிறது.

முதியோர் அனுபவிக்கும் தனிமை

முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேஎன்கிற முதுமையின் குரல், சிலுவையில் தொங்கிய இயேசுவின் குரலாகவே கேட்கிறது: “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத் 27:46).  பெரும்பாலான முதியோர்கள் தனிமையை அனுபவிக்கிறார்கள். திருத்தந்தை ஆயராக இருந்த காலத்தில் முதியோர்களைச் சந்திக்கும் நேரம் பெரும்பாலும் அவர்கள் தனிமையில் இருந்ததைப் பதிவு செய்கிறார். அதோடு பல மாதங்களாகக் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையையும் அவர் சற்று நினைத்துப் பார்க்கிறார்.

அகதிகளாய் தனிமைப்படுத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. பல நேரங்களில் பிள்ளைகள் வெளிநாடுகளில் வேலைகளுக்காகச் செல்லும்பொழுது முதியோர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். நகரங்களிலும், கிராமங்களிலும் அவர்கள் ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இளமைக்கும், முதுமைக்கும் மிகப்பெரிய இடைவெளி இந்தச் சமூகத்தில் காணப்படுகிறது. சில சமூகங்களில் இளவயது மரணம் ஒரு குடும்பத்தில் ஏற்படுகிறது என்றால், அது முதியோர் உயிரோடு இருப்பதால்தான் என்கிற ஒரு மூடநம்பிக்கைக்குப் போய்விடுகிறார்கள்.

வேறுபட்ட வயதுடையோர் இணைந்து வாழ்வது என்பது இந்தக் காலகட்டத்தில் அபூர்வமாகவே பார்க்கப்படுகிறதுமுதியோர்கள் பாரமாகவே பார்க்கப்படுகிறார்கள். சீக்கிரமே உயிர் போய்விட வேண்டும் என்று வேண்டுகின்ற முதியோர்கள் ஏராளம். ஏனென்றால், ‘எங்கள்என்னும் மனநிலையைவிட, ‘என்என்கிற மனநிலையே இந்த இளையத் தலைமுறையினரிடம் அதிகமாகி விட்டது. தனித்து வாழ்வதில் நிறைவு அடைகின்ற தலைமுறையாக இந்தத் தலைமுறை வாழ்கிறது. பிறரைப் புரிந்து, மதித்து, நிறைவோடு வாழ்வதில்தான் அர்த்தமுள்ள வாழ்க்கை அடங்கி இருக்கிறது.

தனிமையும், கைவிடப்பட்ட நிலையும் சமூகத்தின் தாக்கமாக மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் சகோதரத்துவத்தின் இனிமையை நாம் அனுபவிக்கத் தவறிவிடுகிறோம்’ (அனைவரும் உடன்பிறந்தோர், 33). ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். ஆனால், காக்கத் தவறுவதுதான் இந்தத் தலைமுறையினுடைய அவல நிலையாக மாறி இருக்கிறது.

ரூத்து - முன்மாதிரியான ஆளுமை

முதியோரைக் காக்கின்ற அற்புதமான திருவிவிலிய ஆளுமையாகத் திருத்தந்தை ரூத்துவை  அறிமுகப்படுத்துகிறார். நகோமி தன் மகன்களை இழந்த இரண்டு மருமக்களையும் தாய் வீட்டுக்குத் திரும்பிச் சென்று இல்வாழ்க்கையில் மீண்டும் ஈடுபட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் (ரூத் 1:6-18). இரண்டு மருமக்களுக்கும் பாரமாகிவிட்டோமோ என்கிற ஒரு நிலைக்கு நகோமி தள்ளப்பட்டார். ஒரு கைம்பெண்ணாய் கைவிடப்பட்ட நிலை இருந்தாலும், மருமக்கள் வாழ்வு பெற வேண்டும் என்று உறுதி கொண்டார் நகோமி. தன்னைப் போன்று ஓர் அவல நிலையைத் தன் மருமக்கள் சந்தித்து விடக்கூடாது என்கிற நல்மனது கொண்டிருந்தார் நகோமி. ஓர்பா என்ற மருமகள் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். ஆனால், ரூத்தோ பிரிந்து போக மறுத்துவிட்டார். “நீர் செல்லும் இடமே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்; நீர் எங்கே இறப்பீரோ, அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லறையும் இருக்கும்; சாவிலும் உம்மை விட்டு நான் பிரியேன்என்று சொல்லி பிரிய மறுத்தார். அவர் சவால்களைச் சந்திக்கத் துணிந்தார். ‘முதுமையிலும் என் மாமியை தள்ளிவிட மாட்டேன்என்கிற உறுதிப்பாட்டோடு வாழ்ந்தார்.

ரூத்து ஒரு மெசியா

இயேசு இந்த உலகத்தின் மீட்பர். அதுபோல முதியோரைக் காக்கும் மீட்பின் முன்னடையாளமாக ரூத்து நமக்கு அறிமுகமாகிறார். இம்மானுவேல் என்றால்கடவுள் நம்மோடுஎன்று அர்த்தம். இந்த இம்மானுவேல் அனுபவத்தைக் கொடுப்பவர்கள்தான் ரூத்துகளாக இந்த மண்ணில் உலா வருகிறார்கள்.

ரூத்துவின் துணிச்சலும், சுதந்திரமும் புதிய வழித்தடத்தில் நம்மைப் பயணிக்கத் தூண்டுகிறது.

தயக்கமில்லாமல் தாயைப் போல மாமி நகோமியை ரூத்து பாதுகாப்பதை நம் முன்மாதிரி வாழ்வாகக் கொள்வோம். ரூத்துவைப்போல முதியோரைப் பேணுகின்ற ஒவ்வொரு மனிதர்களையும் மாண்போடு மதித்துப் போற்று வோம்.

மாமி நகோமியை மாண்போடு பாதுகாத்த ரூத்துவை அருமையான திருமண வாழ்வாலும், நல்ல குடும்பத்தாலும், மக்கள் செல்வத்தாலும் இறைவன் ஆசீர்வதித்தார்.

எப்பொழுதும் முதியோருக்குப் பணிவிடை செய்யும்போது இறைவன் அளப்பரிய ஆசீர்வாதங்களால் நிரப்புகிறார் என்பதுதான் ரூத்துவின் வாழ்வியல் பாடமாக நாம் கற்றுக்கொள்கிறோம்.

இறுதியாக...

மென்மையான அன்பை தாத்தா, பாட்டியர் மற்றும் முதியோருக்கு நம் குடும்பங்களில் காட்டுவோம். நம் நேரங்களை அவர்களோடு செலவழிப்போம்; சுயநலம் கடந்து தனிமையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் இருப்பவர்களைத் தேடிச்சென்று அன்பு காட்டுவோம். திறந்த இதயத்தோடுஎப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் உங்களை நாங்கள் கைவிடமாட்டோம்என்கிற ஓர் உறுதிப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்தால், அதுவே மகிழ்வான வாழ்வின் பாதையைக் காட்டும் என்பதைப் புரிந்து செயல்படுவோம்.

முதுமையில் என்னைத் தள்ளி விடாதேயும்என்கிற முனகல்கள் முதியோர் வாயிலிருந்து வராமல், முண்டியடித்துக் கொண்டு முதியோரைப் பேண சபதம் ஏற்போம்.

Comment