‘உடல் நலமும் மனநலமும் நாணயத்தின் இருபக்கங்கள்’
அக்டோபர் 10: உலக மனநல நாள்
தமிழ்நாடு அரசால் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதுபெற்ற அருள்பணியாளர் M. சூசை ஆன்றணி CMF அவர்களுடனான சிறப்பு நேர்காணல்:
தந்தையே வணக்கம்! மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த முறையில் பணிபுரிந்ததற்கான ‘சமூகப் பணியாளருக்கான விருது’ தங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. ‘நம் வாழ்வு’ இதழ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் தங்களைப் பற்றி ஓர் அறிமுகம் தாருங்களேன்.
“கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை என்ற கடற்கரை கிராமத்தில் நான் பிறந்தேன். 2000-ஆம் ஆண்டு கிளரீசியன் சபையில் சேர்ந்தேன். 2012-2014 ஆண்டுகளில் சென்னை இலயோலா கல்லூரியில் மருத்துவம் மற்றும் மனஇயலில் (Medical and Psychiatric Social Work) முதுகலைப் படிப்பை முடித்து, 2015 -ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை, சென்னை அருகில் திரிசூலம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ‘மனசு’ (MANASU - Mental Health Charity Home) என்ற மனநல சுகாலயத்தில் பணியாற்றுகிறேன். சென்னை மாவட்டத்தின் மனநல மீளாய்வு மன்றத்தின் (Mental Health Review Board) உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். 2022 -ஆம் ஆண்டு SRM மருத்துவக் கல்லூரி நெறிமுறைக் குழுவில் சமூக ஆய்வாளராகவும் (social scientist on the Ethical Committee) நியமிக்கப்பட்டிருக்கிறேன். சுமார் பத்து ஆண்டுகளாக ‘மனசில்’ என்னுடைய பணி தொடர்கிறது.”
2024-இல் தமிழ்நாடு அரசால் உங்களுக்கு வழங்கப்பட்ட சமூகப் பணிக்கான விருதுக் குறித்துக் கூறுங்களேன்.
“தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து நான் இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கிறேன் என்ற செய்தி கேட்டதுமே என் கண்கள் கலங்கின. முழந்தாளிட்டுக் கடவுளுக்கு நன்றி கூறினேன். இந்த விருது குறித்துச் சொல்ல வேண்டுமெனில், கிறிஸ்தவ மக்கள் குறிப்பாக, அர்ப்பண உணர்வோடு பல ஆண்டுகளாகப் பணி செய்யும் எத்தனையோ அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் இருக்கிறார்கள். கத்தோலிக்கத் திரு அவையில் நடக்கும் சமூகப் பணிகளில் நான் ஓர் ஐஸ்பெர்க் (Iceberg). இவ்விருதை நம் திரு அவை செய்கின்ற சமூகப்பணிக்கான விருதாகப் பார்க்கிறேன். உழைப்புக்குக் கிடைத்த ஒரு பரிசு. அரசின் பார்வையில் இந்த ‘மனசு’ ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அரசு அங்கீகாரம் தந்துள்ளதாக நான் பார்க்கிறேன். இந்த விருது கிடைத்த பிறகு மக்களுடைய கவனமும் ‘மனசு’மேல் திரும்பி இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு முன்பு இங்குப் பணியாற்றிய அருள்பணி. ஆன்றணி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். என்னைவிட மிகவும் அர்ப்பணமிக்கவர்; கடின உழைப்பாளி; எளிய மனிதர். என்னுடைய கிளாரட் சபையும் இதனால் மகிழ்ச்சி அடைகிறது.
இதுபோல கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அருகில் அழகுசிறை கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான ‘மெர்சி ஹோம்’, விழுப்புரம் இருளர் இன மக்களுக்கு அரசின் உதவியோடு இல்லங்கள் கட்டிக்கொடுத்தல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறோம். இந்த விருது வழியாக நாங்கள் செய்யும் சேவைகளையும் மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். என்னைப்போல பிறரன்போடு சேவை செய்து, எந்தவோர் அங்கீகாரமும், பாராட்டும் பெறாத அனைத்துக் குருக்கள், மக்கள் குறிப்பாக, இத்தகைய பணி செய்து இறந்த அனைவருக்கும், தற்போது ‘மனசில்’ உள்ள பணியாளர்கள் மற்றும் பணியாற்றிய அருள்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.”
மிக்க மகிழ்ச்சி! தற்போது நீங்கள் பணியாற்றும், ‘மனசு’ மனநல சுகாலயத்தின் தொடக்கம் பற்றிக் கூறுங்களேன்!
“ஒருமுறை எங்கள் Superior General பேரருள்பணி. மரிய அபயா அவர்கள் சென்னை வந்தபொழுது சென்னை மறைமாநிலத் தலைவர் அருள்பணி. வின்சென்ட் அனஸ்தாசியர் அவரிடம் சாலையோரம் ஆதரவின்றி வசிக்கும் சிறு குழந்தைகளின் மறுவாழ்வுக்கு ஏதாவது பணிகள் செய்யலாமே எனக் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இப்பணி தொடங்கப்பட்டு அருள்பணி. ஆன்றணி சேகருக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நானும் அவரோடு களப்பணியில் ஆய்வு செய்தேன். எங்களுடைய ஆய்வில், குழந்தைகளுக்கான இல்லங்கள் சென்னையில் அதிகம் இருக்கின்றன. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித் திரியும் ஆண்களைக் கவனிக்க யாரும் இல்லை என்பதை 2010-ஆம் ஆண்டு நாங்கள் புரிந்துகொண்டோம். இந்தப் பணி, காலத்தின் தேவையாகவும் எங்களுக்குத் தென்பட்டது. எனவே, இதைப்பற்றித் தெளிவாக ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவை எங்கள் சபையிடம் ஒப்படைத்தோம். அதன் அடிப்படையில் 2011 -ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி திரிசூலத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘மனசு’ என்ற மனநலச் சுகாலயம்.
மக்கள் இன்று அதிகமாகவே உதவி செய்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் நினைவாக மக்களும் தாராளமான பொருள் உதவி, உணவு தருகிறார்கள். மேலும், இங்கு நன்கொடை தருபவர்களுக்கு அரசு 80ரூ வரி விலக்கு கொடுத்திருப்பதையும் ஓர் அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.”
இப்பணியில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
“மனசு’ ஆரம்பித்தத் தொடக்க காலங்களில் அதிகச் சவால்களைச் சந்தித்தோம். முதலில், மனநலத்தைப் பற்றிய தவறான எண்ணங்களினால் கிராம மக்கள் சிலர் விரும்பவில்லை. இது ஒருவேளை, தங்கள் பிள்ளைகளுக்கும் தொற்றிக்கொள்ளுமோ என்ற ஒரு பயம். ஆனால், அப்போதிருந்த பஞ்சாயத்துத் தலைவர்கள், கிராம நிர்வாகிகள் மிகவும் ஆதரவு தெரிவித்தார்கள். தொடக்க காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர்களைச் சாலையிலிருந்து மீட்கும்போது, காவல்துறையிடமிருந்து அனுமதி கடிதம் வாங்குவதும் (Memo) மிகவும் சிரமமாகவே இருந்தது.
அடுத்து, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்வது மற்றொரு சவாலாக இருந்தது. காரணம், அவர்களுள் சிலர் ஓரிடத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள். எப்படியேனும் இங்கிருந்து தப்பிச்செல்ல முயல்வார்கள். மேலும், சிலர் தொடக்க நாள்களில் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும், தீவிர மனநோயாலும் செயல்படுவார்கள். எனவே, மிகவும் கவனத்தோடும் பொறுமையோடும் செய்யக்கூடிய ஒரு பணி இது.”
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலிருந்து நீங்கள் முன்னெடுக்கும் பணிகள் பற்றி...
“இந்தப் பணி ‘ஆறு-R’ களை உள்ளடக்கியது. 1. Rescue, 2. Recovery, 3. Rehabilitate, 4. Reunion, 5. Reach out, 6. Research. விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், Rescue என்பது மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரம் சுற்றித் திரியும் ஆண்களைக் காவல் கரங்கள் அல்லது காவல் அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு வருவது, அவர்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக வழங்குவது, மருத்துவப் பரிசோதனை போன்ற நடைமுறைகளை மேற்கொள்வது.
இரண்டாம் நிலை, Recovery. அதாவது, மீட்கப்பட்ட நபர்களின் உடல், மன, சமூக மற்றும் ஆன்மிக நல்வாழ்வை மீட்டெடுப்பதற்காகச் சிகிச்சை அளிப்பது. அக்கம் பக்கத்தில் வாழும் மக்களுக்கும், இங்கிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்திக்கொள்ள தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், புது ஆண்டு, சுதந்திர தினம் போன்ற பல்வேறு பண்டிகைகளுக்கு, பக்கத்தில் வாழ்வோரையும் அழைத்துக் கொண்டாடுவது. மேலும், பொழுது போக்கு இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் செல்வது.
இந்த இல்லம் அவர்களுடையது; எங்கு வேண்டுமானாலும் அவர்கள் போகலாம். ஆடு, நாய், கோழி, மரங்கள் என எல்லாவற்றிற்கும் பெயர் உண்டு. பெயர் சொல்லி அழைப்பது, அவற்றோடு உரையாடுவது, விளையாடுவது என மன ஆன்மிகத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம்.
மூன்றாம் நிலை, Rehabilitate. இங்கு இருப்பவர்கள் நலம் பெற்றுச் சென்றாலும் தன் உழைப்பில் சுயசார்போடு வாழ தோட்டம் பராமரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல், காகிதப் பை தயாரித்தல், திருவிவிலிய உறை தயாரிக்க உதவுதல், சமையலறை உதவி போன்ற தொழிற்பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மனித மாண்புடனும், மதிப்புடனும் திரிசூலக் கிராமத்துப் பெண்களோடு சேர்ந்து வேலை செய்யும் பழக்கத்தை ‘மனசு’ ஏற்படுத்திக் கொடுக்கிறது. ‘பாதை சிறுதொழில் குழுமம்’ வழியாக இங்குள்ள மக்கள் இங்கே சிறுதொழில் செய்து சிறிய ஊதியத்தைப் பெறவும் ‘மனசு’ வழிசெய்துள்ளது.
நான்காம் நிலை, Reunion/Reintegration. முழுமையாக நலம் பெற்றதும் அவர்களிடமே இருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் இல்லங்களில் ஒப்படைப்பதுதான் மிக முக்கியமான நிலை. சிலர் இவர்களைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு நலம்பெற்றவர்களை ஏற்றுக்கொள்வர். மற்ற சிலர் இவர்கள் முழுமையாகச் சுகம் பெற்றாலும் அவர்களைக் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளுதல் கிடையாது. காரணம், மீண்டும் பழைய நிலைமைக்குச் சென்றுவிடுவாரோ என்ற பயம். இதுவரை 17 மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து குடும்பங்களோடு சேர்ந்துள்ளனர்.
ஐந்தாம் நிலை, Reach out. பொதுமக்களுக்கும் மனநல ஆலோசனை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்த விழிப்புணர்வு, பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கும் மருத்துவ மற்றும் மனநல முகாம்கள், ஆலோசனைகள், மனநல ஆற்றுப்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய்கிழமையிலும் சாலையோரம் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு கொடுத்து வருகிறோம்.
ஆறாம் நிலை, Research. மனநலம் குறித்த குறிப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பல கருத்தமர்வுகளில் கருத்துரைகள், ஆய்வுக் கட்டுரைகள் வழியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.”
மிக்க நன்றி! இறுதியாக ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது...
“இன்று மக்களுக்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம். அதே நேரத்தில் மன ஆரோக்கியமும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தைப் போல மனத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். உடல் நலமும், மனநலமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல. இன்று குடும்பங்களில் சந்தேகம், குடும்பப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகள், உலகத்தின்மீது வெறுப்பு, இழப்புகள், இறப்புகள், விபத்து போன்றவை மனநோய்க்குக் காரணமாகின்றன. மனநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அவர்களாகவே மருத்துவரை அணுகுவது மிகவும் குறைவு. அதை அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. தொடக்க நிலையிலேயே மனநோய்க்கு மருத்துவரை அணுகினால் எளிதாக நலம் பெறலாம்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மனக்காயம் அடைந்துவிடாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்; மிகுந்த கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமானத்தோடு கூடிய ஆதரவும் அக்கறையும் காட்ட வேண்டும். குடும்பத்தில் பாசம், உறவு நன்றாகக் கிடைக்க வேண்டும். இன்றைய சமூகத்திற்கு மனநலம் குறித்த தொடர் விழிப்புணர்வை ஊடகங்கள் எப்போதும் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய வகையில் ‘நம் வாழ்வு’ வார இதழ் மருத்துவம் பேசுகிறது, உள்ளம் நலமா? மனச பக்குவமா பாத்துக்கோ... எனப் பல உளவியல் பகுதிகள் வழியாக இப்பணியை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. தற்போது, ‘அருளடையாளங்கள்’ ஓர் உளவியல் ஆன்மிகத் தொடராக வெளிவருவது உண்மையில் வரவேற்கத்தக்கது. இது காலத்தின் கட்டாயம் கூட. ‘நம் வாழ்வு’ அண்மைக் காலங்களில் புதுப் பொலிவோடு பல்சுவை விருந்தாக வெளிவருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!”
தந்தையே! உங்கள் சமூகப்பணி சிறக்கவும், ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக அன்போடு வாழ்த்துகிறேன்.
‘மனசு’ பற்றி மேலும் அறிந்துகொள்ள:
https://www.manasu.org.in/
Comment