மரியா: வாழ்வின் தொடக்கம்!
வேளாங்கண்ணி கீழை நாடுகளின் லூர்து: கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா!
- Author தந்தை தஞ்சை டோமி --
- Wednesday, 04 Sep, 2024
செப்டம்பர் 8 - நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும் மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னி மரியாவின் பிறந்த நாள். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திரு அவை அந்தத் தாயின் பிறந்த நாள் பெருவிழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது.
எருசலேம் நகரில் வாழ்ந்த சுவக்கீன் - அன்னா ஆகியோரின் மகளாக மரியா பிறந்தது தொடர்பான நிகழ்வுகளை இந்த விழா நினைவூட்டுகிறது. “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்” (லூக்கா 1:68,72-73) என்ற செக்கரியாவின் வார்த்தைகள், மரியாவின் பிறப்புக்கான காரணத்தை விளக்குகின்றன. முதுமை வரை குழந்தைப் பேறில்லாமல் இருந்த சுவக்கீன்-அன்னா ஆகியோரின் மன்றாட்டின் பலனாக, உலக மீட்பரின் தாய் அவர்களின் மகளாகப் பிறந்தார் என்பதை இந்த விழாவில் கொண்டாடுகிறோம்.
எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக் கொள்கைகள், எத்தனை எதிர்ப்புகள் - இவற்றிற்கு நடுவில் நிச்சயம் அன்னை கன்னி மரியாமீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.
அகில உலகத் திரு அவையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொரு நாளும் அன்னை கன்னி மரியா நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னி மரியாவுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாவின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர். இதற்கு அடித்தளமாக இருப்பது அன்னை தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற நிரந்தரமான அன்பு.
ஒரு தாயின் அன்பை நாம் குறுகிய எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. அது அனைத்தையும் கடந்தது; எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்பு கொண்டது. மரியா இயேசுவின் தாய்! அதே நேரத்தில் இறைவன் மரியாவைக் கன்னிமை குன்றாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. வல்லமை மிக்க கடவுள் மரியாவைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார்; அவரைத் தம் திருமகனின் தாயாக நியமித்தார். மரியாவும் இறைத் திட்டத்திற்கு ஏற்ப தம்மையே முழுமையாக இறைவனிடம் கையளித்தார். இவ்வாறு நமக்கு ஒரு முன்னுதாரணமானார். இயேசுவின் தாய் நம் தாயாகவும் இருக்கிறார். அதாவது, இயேசுவை நம்பி ஏற்போரை உள்ளடக்கிய சமூகமாகிய திரு அவைக்கு அன்னை அவர். மரியாவுக்குக் கடவுள் அளித்த மாட்சியையும் மகிமையையும் நமக்கும் வாக்களிக்கின்ற கடவுள் தம் திருமகன் இயேசு வழியாக நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கின்றார்.
மரியாவின் பிறப்பு விழாவானது முதன்முதலாகக் கீழைத் திரு அவையில் கொண்டாடப்பட்டது. இதன் தொடக்கம் எருசலேமில் உள்ள புனித அன்னாள் ஆலயத்தின் நேர்ந்தளிப்பிலிருந்து வந்ததாகும். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட இவ்வாலயமானது மரியா பிறந்த வீட்டின்மீது கட்டியெழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கக் கவிஞரும், கான்ஸ்டான்டிநோபிள் நகரத் திருத்தொண்டருமான உரோமானுஸ் (500) தனது பாடலில் மரியாவின் பிறப்பைப் புகழ்ந்து பாடியிருப்பது அவர் காலத்தில் இத்திருவிழா பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், இதன் பெருமையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. உரோமையில் இத்திருவிழாவானது ஏழாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டது. மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைப் போன்று இப்பிறப்பு விழாவும் திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ் என்பவரால், திருச்சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவானது செப்டம்பர் 8-ஆம் நாள், மரியாவின் பிறப்பை மையமாக வைத்துக் கொண்டாடப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கல் நாட்டு மாலுமிகள் இந்தியப் பெருங்கடலின் சீற்றத்தில் அவதியுறும்போது, மரியாவை நோக்கி அவர்கள் எழுப்பிய வேண்டுதலால், கப்பலானது வேளாங்கண்ணியில் பாதுகாப்பாகக் கரைசேர்க்கப்பட்டதும் மரியாவின் பிறப்பு விழாவான செப்டம்பர் 8-ஆம் நாள்தான். இந்நிகழ்ச்சிக்கு முன்னரே 16-ஆம் நூற்றாண்டில் இங்கு நடந்த இரண்டு புதுமைகளான பால்காரச் சிறுவனுக்கு மாதா காட்சி கொடுத்து பால் பொங்கச் செய்தது மற்றும் மோர் விற்கும் முடமான சிறுவனை நடமாடச் செய்தது ஆகிய நிகழ்ச்சிகளால் வேளாங்கண்ணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்தப் புதுமைகளால் வேளாங்கண்ணி ‘கீழை நாடுகளின் லூர்துநகர்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வேளையில், அன்னை மரியாவிடமிருந்து நான்கு மாதிரிகள் நமக்கு மூலதனமாக உள்ளன.
இறை அருள்: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5) என்று இறைவன் கருவிலேயே ஒவ்வொரு குழந்தையையும் திருநிலைப்படுத்தி, அருளுக்குரிய குழந்தையாக ஆக்குகின்றார். அன்னை மரியா கருவாக உருவானபோதே இறைவன் அவருக்குத் தனது அருளை நிறைவாக வாரி வழங்கியுள்ளார்.
தாயன்பு: அன்னை மரியாவின் பிறப்பே ஒரு மிகப்பெரிய சிறப்பு. உலக மீட்பரை ஈன்றெடுப்பதற்கென்றே கடவுளால் அன்னை மரியா படைக்கப்பட்டார். தாயின் அன்பையும், அரவணைப்பையும், ஆறுதலையும், அக்கறையையும், அர்ப்பணத்தையும், பரிந்து பேசுதலையும், பணிவிடை புரிவதையும், நிறைவு செய்வதையும் அன்னையின் பிறப்பு விழா நமக்கு உணர்த்துகின்றது.
தூய்மை: “நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெருவிழா வந்துவிட்டது. மண்ணில் தோன்றிய விண்மலர் இவர்; இவரிடமிருந்து தாள் வாள் புகழ் லீலி மலர் தோன்றியது. இவருடைய வருகையால்தான் முதல் பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தூசி படிந்த மனித இயல்பு மாற்றம் அடைந்து, மேன்மை பெற்றது. இதனால் இந்த இயல்பிற்கு ஏற்பட்ட இழுக்கு இல்லாமல் போனது. ஆகவே ஆனந்தம் அடைவோம். அக்களிப்போம்” என்றே தூய அகுஸ்தினார் மரியாவை ஏவாளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
பூரிப்பு: ஏவாள் கண்ணீர் வடித்தாள். மரியாவோ பூரிப்படைந்தார். ஏவாள் பாவியாகிய மனிதர்களை ஈன்றெடுத்தாள். மரியாயோ மாசு மருவற்ற இயேசுவை ஈன்றெடுத்தார். முதல் ஏவாள் கொண்டு வந்தது தண்டனை; மரியா கொண்டு வந்தது மனித குல மீட்பு. சாவின் தொடக்கம் ஏவாள். வாழ்வின் தொடக்கம் மரியா. இரண்டாம் ஏவாள் அருள் வாழ்வைத் தருபவர் ஆனார். ஏவாளின் கீழ்ப்படியாமை மரியின் கீழ்ப்படிதலின் மூலம் அழிக்கப்பட்டது. ‘என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது’ என்று அன்னை ஆர்ப்பரித்த நாளில் ஏவாளின் புலம்பல்கள் முடிவு அடைந்தன. மரியே வாழ்க! ஆவே மரியா!
Comment