ஆடு மேய்க்கும் தாவீது
மன்றாடி மகிழ்ந்திடுவோம் -45
தாவீது
“என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது” (திபா 23:5).
ஈசாய்க்கு 8 ஆண் மக்கள். முதல் 7 பேரும் இராணுவத்தில் வேலை செய்பவர்கள். ஆகவே, ஆடு மேய்க்கும் 8 ஆவது மகனை பெரிதாக நினைப்பதில்லை போலும். ஆகவேதான் ஈசாயின் பதில் அவ்வாறு அமைந்திருந்தது.
ஆடு மேய்க்கும் தாவீது வந்தவுடன், ஆண்டவர் சாமுவேலிடம் பேசினார். “இவன்தான் நான் தேர்ந்து கொண்டவன் எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்”.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது (1 சாமு 16:12-13).
ஆனால், முதல் அரசன் சவுலை சாமுவேல் எப்படி திருப்பொழிவு செய்தார் என்பதையும் கவனியுங்கள். சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்தார் (1 சாமு 10:1). எண்ணெய், தூய ஆவியாருக்கு அடையாளமாக இருக்கிறது. குப்பியில் எண்ணெய் எவ்வளவுதான் இருக்கும்? ஆனால், கொம்பில் மிகுதியாக இருந்திருக்கும்.
தாவீதைப்போல் ‘என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது’ என்று சொல்லுகிற அளவுக்கு, தூய ஆவியாரின் திருப்பொழிவு நிரம்பப் பெறவேண்டும்.
“யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல், அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார் நம் இயேசு.
தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை. (யோவா 7:37, 38,39)
இயேசு எப்பொழுது மாட்சி அடைந்தார். ‘நான் பெற வேண்டிய திருமுழுக்கிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினாரே அப்பொழுதே அலகை தோற்றுப்போனான்.
அலகையின் பிடியிலுள்ள மாந்தர் யாரெல்லாம், இயேசு எனக்காகவே இரத்தம் சிந்தினார் என்று நம்பி அர்ப்பணித்து, கழுவப்பட்டார்களோ அப்பொழுது தூய ஆவியாரின் திருப்பொழிவை பாத்திரம் நிரம்பி வழியும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
உள்ளங்களைக் காண்கிற ஆண்டவர், உள்ளத்தின் உண்மைக்கேற்ப பொழியப்படுகிறார்.
இதுதான், சவுலுக்கும், தாவீதுக்கும் உள்ள வேறுபாடு.
குற்றம் செய்யாது, நன்மையே செய்த தாவீது, காடுகளில் அலைந்து கொண்டிருக்கும்போது, சவுலைக் கொன்றுபோட, இரண்டு முறை வாய்ப்புக் கிடைத்தது.
உம் எதிரியை ஆண்டவர் உம்மிடம் ஒப்படைத்த நாள் இதுவே என்று, கூட இருந்தவர்கள் தூண்டினாலும், வற்புறுத்தினாலும், “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக்கூடாது என்றார் (1 சாமு 24: 6, 26:11).
தாவீதின் மனித ஞானம் கொன்றுவிட்டால் என்ன? இனிமேலாவது நிம்மதியாக வாழலாமே என்று சொல்லியிருக்கலாம். ஆனால், முன்னொருநாள், ஆண்டவர் தன்னோடு பேசிய திருவாக்கை அவர் நினைவுகூர்ந்தார்: “நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்” (திபா 105:15).
தூய ஆவியை நிறைவாகப் பெற்றிருந்ததால், இறைஞானத்திற்கே செவிசாய்த்தார். ஆகவே, ஏற்றகாலத்தில் தாவீது அரசராக உயர்வு பெற்று, 40 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.
என் பாவங்களையெல்லாம் என் இயேசு மன்னித்துவிட்டாரே, அப்படியானால், பிறரது குற்றங்களை மன்னிக்க நான் முந்திக்கொள்ள வேண்டுமல்லவா என்பதே, ஆவிக்குரிய பிள்ளைகளின் சிந்தையாக இருக்க வேண்டும்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! என்றவர் முதலில் குறிப்பிடுவது ‘அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்’ (திபா 103:2-3).
மன்னிப்பு என்ற நன்மைக்காகத்தான் நாம் அதிகம் ஏற்க வேண்டும்.
ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறேன்; ஊழியம் செய்கிறேன்; நோன்பிருந்து மணிக்கணக்காக மன்றாடுகிறேன்; உங்களுக்காக காணிக்கை அனுப்புகிறேன் என்று, பல பணிகளைச் சொன்னாலும், சிலர் அற்ப காரியத்தில் கூட பொறுமையாயிருப்பதில்லை; பிறரது தவறுகளை சகித்துக்கொள்வதில்லை; பல வருடங்களாக மன்னிப்பதில்லை, கணவனிடம், மாமியாரிடம் கூட கோபங்கள். ஆனால், வெளி உலகத்திற்கு நீதிமான் தோற்றம்!
தூய ஆவியால் நிரப்பப்பட்டவரே, இயக்கப்பட்டவரே, கிறிஸ்தவர்; கடவுளின் பிள்ளை. அதாவது, மனத்தாங்கல், மனக்கசப்பு ஏதுமின்றி, மன்னிப்பதில் தாராள உள்ளம் கொண்டவராய் வாழ்ந்திடுவோம்.
Comment