No icon

சுதந்திர இந்தியா

வென்றதும் வெல்லவேண்டியதும்

தியாகிகள் விருட்சமாகட்டும்!

துரோகிகள் வீழ்ச்சிக் காணட்டும்!

சுதந்திர வேள்வியில் கடந்து வந்த 75 ஆண்டுகளை எண்ணிப்பார்க்கையில் இவ்வெண்ணமே மேலோங்கி நிற்கிறது. விடுதலைத் துடுப்பினைக் கையில் ஏந்தி, கம்பீரமாய் தூக்குமேடை நோக்கி நடந்து மரணத்திற்கு வெட்கம் வரச் செய்த கட்ட பொம்மனின் தீர்க்கமான வீரம் இன்று எங்கே?!

 விடுதலைப் போரை பாதியில் விட்டுச் செல்லும் சோகத்தில் தாய்மண் தேடித் தவித்த சின்ன மருதுவின் கால்கள் எங்கே?

சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம் என்கிற மனசாட்சியின் தீர்ப்பால் மனதுக்கு அமைதி நேரினும், சாகும் தருணத்திலும் தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய திப்புவின் பொறுப்புணர்வு எங்கே?

முற்றும் துறந்த முனிவராலும் துறக்க முடியாத தாயின் பாசத்தை அகவை பதினான்கில் துறந்து, காக்கிச்சட்டைகள் லத்தியால் அடித்து பெயரைக் கேட்டபோதெல்லாம் “விடுதலை! விடுதலை!” என்றே முழங்கிய ஆசாத்தின் விடுதலைப் பற்று எங்கே?

உண்மை விடுதலை எங்கே?

தியாகமே உண்மை விடுதலைக்கான மருந்து. உண்மை விடுதலையே உரிமைகள் காக்கும் மனிதநேயச் சான்று.

அருள்பணி. ஸ்டான் சுவாமி போன்று உண்மை விடுதலைக்காய் போராடும் போராளிகள் மனித நேயமற்ற விதத்தில் படுகொலை செய்யப்படும் பாசிச ஆட்சியின் பிடியில் இன்று நமத்துப்போன இதயத்தோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் முன்னோரின் விடுதலை வேட்கை இன்று எங்கோ அரசியல் பிழைத்தோரின் சிம்மாசன மொழியாகிப் போனதுதான் வெட்கக்கேடு? இதற்கு காரணம் யார்? நாம் எல்லாரும் தான்.

மண்ணின் மாணிக்கங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் இளவல்களின் போராட்டக் குணமும், விடுதலை உணர்வும் எதனால் இன்று குமிழ் நீராய், காற்றடைத்தப் பையாய் ஆகுது?

விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற இலட்சிய இளவல்களின் பெயர்கள் தான் நம் நினைவிற்கு வரும். வன்முறைகளால் வதைக்கப்பட்டு, ஆதிக்க அடக்குமுறைகளால் அழிக்கப்பட்ட தேசத்தின் ஆன்மாவை தங்களின் கழுத்திறுக்கிய தூக்கு கயிற்றால் பிழைக்க வைத்தவர்கள் இவர்கள்.

இலட்சியங்களுக்காய் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளின்  இரத்தம் இன்றைய இளவல்களின் உணர்வற்ற தன்மையைப் பார்த்து, பரிகசிக்கிறது. தனது கல்வி-தனது வேலை... இவை இரண்டுமே ஆகச்சிறந்த குறிக்கோள் என்கிற குறுகிய வட்டத்திற்குள் தூங்கிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. சிந்தனை மாற்றம் இல்லாத வலைத்தள அல்லது ஊடக எதிர்ப்பை பெரிய சாதனையாகப் பதிவு செய்வதோடு, தன்னுடைய சமூகக் கடமையை நிறைவேற்றிவிட்ட பெருமூச்சு பலருக்கு இங்கு உண்டு. போராட்டக் குணமும், சமூகப் பொறுப்புணர்வும் மிகுந்திருந்த வரலாறு  இன்று  சுயநலத்தால், கார்ப்பரேட் தனத்தால், ஒற்றைமயத்தால் சுருங்கிவிட்டது. கார்ப்பரேட் பயங்கரவாதம், பா.ஜ.க - வின் மதவாதம், மண்ணையும், மக்களையும் இடம் பெயரவைக்கும் இனவாதம், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் அராஜக போக்கு  என்று பாரதத்தின் பக்கவாத செயல்பாடுகள் தொடர்கிறது.

இளைஞர்கள் நாட்டைப் பற்றி, நாட்டை ஆளும் மூகமூடிகளைப் பற்றி, அதிகார வர்க்கங்களின் ஊழல்களைப் பற்றி, அனைத்தையும் வணிக மயமாக்கும் கார்ப்பரேட்டுகளைப் பற்றி சிந்திக்கக்கூடாது, எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் ஆளும் வர்க்கங்கள். எனவே, வளரிளம் பருவத்தினர் சுயமாகச் சிந்திப்பதை நிறுத்திட ஊடக உறவுகளுக்குள் உறங்க வைப்பதும், உணர்வுகளை கிளுகிளுப்பூட்ட சதைப்பிண்டங்களை உலவவிடுவதும், டாஸ்மாக் கடைகளை திறந்து சீரழிவுக் கலாச்சாரத்தை புகுத்துவதும் தொடர் கதையே!

எப்படி சீனாவை அடிமைப்படுத்துவதற்கு அபினை விற்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடக்கு முறை செலுத்தியதோ, அவ்வாறே இங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தும் இளவல்களை போதையில் தூங்க வைக்கிறது அரசுகள். உரிமைக்காக வெகுண்டெழும் இளவல்களை தங்களது ஆதிக்கக் கரங்களால் அடக்க முனைகிறது. அப்படியெனில் இன்னும் நாம் சுதந்திரம் அடையவில்லை என்பது தானே உண்மை.

சுதந்திர இந்தியா வென்றதும்

வெல்ல வேண்டியதும்

1. அன்றோ ‘இலக்கு’ இருந்தது

இன்றோ ‘விலக்கு’ தொடர்கிறது :

சுதந்திரம் ஒன்றே இலக்கு. அடிமைப்பட்டிருக்கும் வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து சிந்தனையளவில் செயல்பாட்டளவில் சுதந்திரம் தேவை என்ற புரிதல் பெற்றிருந்தனர். அந்நிய பொருட்களைக்கூட பயன்படுத்த மாட்டோம் என்ற வைராக்கியம் வைத்திருந்தனர். வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதைக் கண்ட வ.உ.சி தனது எதிர்ப்பை தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தை முதலில் எதிர்த்தார். சுதேசிப் பொருட்களை மக்கள் வாங்க முழங்கினார். இதுதான் உண்மையான விடுதலைக்கான இலக்கு. இன்று, இந்தியாவில் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் விலக்கு அளித்து மூடப்பட்டு வருகின்றன.

பாசிஸ்ட், ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் நவீன தாராளமய சீர்திருத்தங்களை வெறித்தனமாகப் பின்பற்றுவதாலும், கூட்டுக் களவாணி முதலாளிகளின் நலன்களை வலுப்படுத்துவதாலும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தை அந்நிய நிறுவனங்கள் நம்மிடமிருந்து சுருட்டிச் செல்கின்றன.

மதவெறி-கார்ப்பரேட் கள்ளப் பிணைப்பை அதிகரித்து இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்த்துவதன் மூலம் மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

அன்று அந்நியருக்கு அடிமைப்பட்ட நாம் இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாக வலம்வரும் சூழல் நிலவுகிறது. இங்ஙனம் மனிதர்களை அவர்களது மண்ணிலிருந்தும், மண்ணின் வளங்களிலிருந்தும், கலாச்சார பண்பாட்டிலிருந்தும் வேரறுக்க முயலும் எத்தகு கார்ப்பரேட் சக்தியாயினும் கொடியதே; வாழ்வை அழிப்பவையே! இதனை உணர்ந்து செயல்பாடுகளை முன்னெடுக்க முடியுமா?

2. அன்றோ ‘இயக்கம்’ தொடர்ந்தது ;

இன்றோ ‘தயக்கம்’ நீடிக்கிறது :

இளையோர் இணைந்து இயக்கமாய் செயல்படுவது குறைந்து கொண்டிருப்பதற்கு கார்ப்பரேட்டுகளின் சதியே காரணம். தனிநபர் துதி பாடல்கள் கொண்டாடப்படும் அளவிற்கு இயக்கச் சாதனைகள் இடம் பெறுவது இல்லை. விடுதலைப் போராட்டத்தில் தனிநபர் முயற்சிகள் அல்ல வென்றது; மாறாக, இயக்க உணர்வுகளும், கோரிக்கை முழக்கங்களுமே ஆதிக்க வர்க்கங்களை குலைநடுங்க வைத்தது. இன்றும் மக்கள் இயக்கங்கள் அல்லது இளைஞர்கள் அணிதிரண்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இலக்கணம் மெரினா போராட்டம். தற்பொழுது போராட்டங்கள் என்றால் தயக்கம் வருகிறது. காரணம், ஆதிக்க ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகள், உரிமை மீறல்கள்.நாடாளுமன்றத்தின் 27 உறுப்பினர்கள் தற்போதைய கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் இதற்குமுன் இதுபோன்று நடந்ததே இல்லை. மனித உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் வீராங்கனையும், மதவெறிக்கு எதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடி வருபவருமான இதழியலாளருமான டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டிருக்கிறார். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இதழாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இன்னமும் கொடூரமான சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிறையிலேயே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இலட்சிய வேட்கையோடு மனித உரிமைகளுக்காக போராடும் இயக்கங்களை ஒடுக்கி, மதவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கட்டியெழுப்புவதில் பாஜக அரசு முன்னேறி வருகிறது.

இந்நிலையில் தயக்கம் தவிர்த்து இலட்சிய இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ரசிகர் மன்றங்கள், மதவாத சக்திகளின் ஒருங்கிணைப்புகள், தனிநபர் துதி பாடலுக்கும், பிரியாணி கூட்டத்திற்கும் தான் வழிவகுக்கும். இவற்றிற்குப் பின்னால் இளைய தலைமுறை வழி நடப்பதைவிட வேறு அவமானம் எதுவுமில்லை. இலட்சிய இயக்கங்கள் வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு, கருத்தியல் தெளிவுகள் பிறக்க வேண்டும். அடிமட்டத்திலே இளவல்கள் பொதுநலக் காரியங்களை முன்னிறுத்தி சாதி மதப் பாகுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும்.

3. அன்று ‘போராட்ட உணர்வு’ வளர்ந்தது

இன்று ‘மாறாட்டம்’ களைகட்டுகிறது :

வீதிக்கு வருவது குற்றமென சூளுரைக்கும் தலைமுறைகள் தற்பொழுது வளர்த்தெடுக்கப்படுகிறது. துரித நேரத்தில் கோழிகள் மட்டுமல்ல; இன்றையப் பிள்ளைகளும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். எனவேதான், பிராய்லர் கோழிகள் போன்று உடலளவில் கட்டு மீறிய வளர்ச்சி இருந்தாலும் தேவைக்கேற்ப உணர்வுகளில் வெப்பக் கொதிப்பு இல்லை. ஒருவேளை இருந்தாலும், அது காதல் சாதல் முடிவாகத்தான் இருக்கிறது. மனிதர்களுக்கே உரித்தான போராட்ட உணர்வு இன்றைய தலைமுறையிடம் குறைவே. வாடிவாசலுக்கான போராட்டத்தில் பங்கேற்க என்னுடைய பணித்தளத்திலிருந்தும் சில இளைஞர்கள் தொடர்ந்து சென்றார்கள். ஏனென்று வினவியபோது சொன்னார்கள், “காலேஜ் கட்டடிக்க ஒரு வாய்ப்பு. நேரத்திற்கு நேரம் டீ, காபி, சாப்பாடு ரொம்ப ஜாலியா இருக்கு”. இதுதான் எதார்த்தம். நோக்கம் மறந்த மாறாட்டம் எங்கும் தொடர்கிறது. இன்று போராட்டங்களில் கலந்துகொள்ளும் பலருக்கு ஏன் அந்தப் போராட்டம் நடக்கிறது என்றோ, எதற்காகத் தான் பங்கேற்றிருக்கிறேன் என்பதோ தெரியாது. தலைக்கு ஆளுக்கு நாளுக்கு என்று பேரம்பேசி வந்து சேரும் கூட்டங்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் தான். ஐயோ பாவம்!

ஊடகச் செய்திகளைக் கேட்டு, போராட்டங்களைத் தொடங்கும் இளையோரில் பெரும்பாலானோருக்கு போராட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எனவேதான், போராட்டங்கள் சென்றடைய வேண்டிய இலக்கை அடைவதில்லை. அரசு இயந்திரங்களின் நெருக்கடி என்றதும் பின்வாங்குதல்கள் தொடர்கிறது.

நம் போராட்டங்கள் புரட்சியாளர்களை உருவாக்கவில்லை. இன்னல்களையும், இடர்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக்கொள்வதற்கு தயாராக இல்லாத சமூகத்திலிருந்து போராட்டவாதிகள், புரட்சியாளர்கள் தோன்ற வாய்ப்பில்லை.

“ஒரு புரட்சியாளர் தன் உயிரை தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடை ஏறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக்காட்டுவேன்” என்ற பகத்சிங் வார்த்தைகள் நமக்கு தூண்டுதலாகட்டும்.

4. அன்றோ ‘சமூக பொது நலன்’ மிகுந்திருந்தது;

இன்றோ ‘சுயநலம்’ எல்லை மீறுகிறது!

 எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டுமென்கிற வேட்கையில் மனித அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள், அதற்காக தங்களுடைய உடைமைகளை பகிர்ந்தவர்கள் நம் முந்தைய தலைவர்கள். அவர்களிடம் பொது நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சியே இலக்காக தொடர்ந்தது. ஆனால், இன்று குவிப்பதிலும், பதுக்குவதிலும் தேர்ந்து தெளிந்தவர்களாக உள்ளார்கள் நம் தலைவர்கள்.

டெண்டர் விடுவது துவங்கி சுடுகாடுவரை லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுகிறது. தனது குடும்பமே முன்னிலைப் பெறுகிறது. வருமான வரித்துறையின் திடீர் ரெய்டுகள் கூட குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவது என்பதைவிட, ஆளும் வர்க்கத்தின் மிரட்டல் கருவியாகவே தொடர்வது நம் கண் கூடு.

சுதந்திரம் அடைந்த 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்தத்தருணத்தில் இந்தியாவில் வீடுகட்டக்கூட நிலமில்லா நிலையில் கோடிக்கணக்கானோர் உள்ளனர். இவர்களில் கணிசமான பிரிவினர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். நீர் நிலை உள்ளிட்ட பல்வேறுவகையான புறம்போக்கு இடங்களில் குடியிருக்கிறார்கள். மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி நீதிமன்ற உத்தரவுகளைக் காட்டி நாடு முழுவதும் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளி நிர்கதியாய் தெருவில் நிற்கவைக்கும் வேலையை எப்படி சுதந்திர இந்தியாவில் ஏற்றுக்கொள்ள இயலும்?

இன்றளவும் இந்தியாவில் 80 கோடி மக்கள் தினமும் ரூ. 150 க்கும் குறைவான வருவாயில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அனுதின விலையேற்றம் அணுகுண்டைவிட, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல் - டீசல் விலை ரூ.38 லிருந்து 105-110 வரை அதாவது, இரண்டரை மடங்கு (250 சதம்) - பாஜக ஆட்சியில்தான் உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு ரூ.350 லிருந்து 1100 ஆக உயர்ந்துள்ளது. அரிசி விலை ரூ.35 லிருந்து ரூ. 55 ஆக உயர்ந்துள்ளது. பருப்பு விலை ரூ.60 லிருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. கூடவே உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது.

நாட்டில் முதன்முதலாக பேக்கேஜ் செய்யப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள், தயிர், பாலாடைக் கட்டி, இறைச்சி, மீன் முதலான உணவுப் பொருள்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

சுடுகாட்டுச் செலவுகள், மருத்துவ மனைகளுக்கான அறைகள், காசோலைகள் மூலம் பணம் பெறுதல் போன்ற சேவை இனங்களுக்கும் கூட ஜிஎஸ்டி வரி விகிதங்கள்.

தத்துவஞானி லியோ டால்ஸ்டாய் சொல்வது போன்று “அவன் ஏழைகளுக்காக எதையும் செய்வான் - ஏழையின் முதுகில் இருக்கும் சுமைகளை இறக்குவதைத் தவிர”. இவைதான் சுதந்திர இந்தியாவின் நிலை.

விடுதலை வெல்லட்டும்!

இந்தியச் சுதந்திரம் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில், “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்ற வரிகள் மூலம் பரவசம் ஏற்படுத்தினார் பாரதி. நாமும் ஒரு பக்கம் வளர்ச்சி என்று பெருமை பட காரியங்கள் ஏராளம் இருந்தாலும் நம்மை மீண்டும் அடிமைப்படுத்தும் சக்திகளிலிருந்து விடுதலை பெற முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகளைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போம்,

கருத்துரையாடல்கள் மேற்கொள்வோம். நம்பிக்கையோடு மாற்றத்திற்காய் உழைப்போம்.

நம் இளவல்களிடம் சுதந்திர உணர்வு குறித்தக் கருத்தாக்கங்கள் பரவிடட்டும்! கண்டதையும் ஊடகங்களில் உலவவிடும் தன்மைகள் மறைந்து அடிமைத்தனங்களை ஆதிக்கங்களை அடையாளம் காட்டும் விதமாய் பகிரும் கருத்துக்கள் செயல்பாடுகளாய் அமையட்டும்!.

குறிப்பாக, பன்முகம் கொண்ட இந்தியாவை கூறுபோடும் ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களின் செயல்பாடுகளை, சாமானியர்களை வதைக்கும் விதமாய் கொள்கைகளைப் பிரகடனப்படுத்தும் கார்ப்பரேட்டுகளை, ஆதிக்க வர்க்கத்திற்கு தோரணம் எழுப்பும் ஊடகங்களை விமர்சிக்கவும், அவற்றிற்கு எதிராய் போராடுவதற்கான வீரத்தை பெறுவதே நம் உடனடி வேலை!

இனியாவது ‘எனக்கேன்?!’ என்று ஒதுங்கி நிற்கும் கொடிக்கம்ப சுதந்திரத்தை விட்டெழுந்து, வீதியில் மானுட நலன்களுக்காய் கரம் கோர்ப்போம். மிட்டாய்களைக் கொடுத்து அழுகைகளை அடக்கும் அவலங்களை களைந்து ஆணும், பெண்ணும் பேதமைகள் களைந்து சமத்துவத்தோடு வாழ்வதற்கான வழிவகைகளை வரையறுப்போம்.

ஆண்டொன்றிற்கு நினைவுகூறும் சாத்திரச் சுதந்திரம் தொலைத்து அனுதினமும், சாமானியரும் சம உரிமைகளோடு வாழும் சமத்துவச்சுதந்திரம் புலர உழைப்போம்.

அதுவே விடுதலைக்கான உண்மையான வழித்தடம்! சுதந்திரக் காற்றை எல்லாரும் சுவாசிப்பது எப்போது?

வேட்கையுடன்..

ஓர் இந்தியத் தமிழன்

Comment