No icon

‘நற்செய்தியை அறிவியுங்கள்’

திருத்தூதுப்பீட ஆணைமடலின் நோக்கமும் உள்ளீடும்

2022 ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று புனித யோசேப்பின் பெருவிழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமைச் செயலகத்தைக் (Roman Curia) குறித்த “நற்செய்தியை அறிவியுங்கள்” (Praedicate Evangelium) என்னும் புதிய திருத்தூதுப்பீட ஆணை மடலை உரோமை ஆட்சிப் பீடத்தில் வெளியிட்டார். திருத்தூது ஆட்சி மன்றத்தின் நிர்வாக அமைப்பில் சில முக்கிய மாற்றங்களை உருவாக்கியுள்ள இந்த மடல் ஜூன் 28, 1988 ஆம் ஆண்டு, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட “நல்ல மேய்ப்பர்” (Pastor Bonus) என்னும் திருத்தூதுப் பீட ஆணை மடலுக்கு மாற்றாக, தூய ஆவியார் பெருவிழா (ஜூன் 5, 2022) அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற திருத்தந்தை தேர்வுக்கு முந்தைய கூட்டங்களிலிருந்தும், 2013 அக்டோபர் முதல் 2022 பிப்ரவரி வரையிலான கர்தினால்கள் மன்றக் கூட்டங்களிலிருந்தும் கருத்துருக்களைப் பெற்று, திருத்தந்தை பிரான்சிஸ் வழிகாட்டுதலின்படி, உலகெங்கிலும் உள்ள தலத் திரு அவை அமைப்புகளின் பங்களிப்புகளுடன் இம்மடல் வெளி வந்துள்ளது.

உரோமைச் செயலகத்தை (Roman Curia) மறைபரப்புப் பணி நோக்கி முன்னிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படும் இம்மடல், உண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் தொடக்கத்தில் கொண்டிருந்த அனைத்துலகத் திரு அவைக்கான மறைபரப்பு மனமாற்றம் என்னும் பார்வையை நோக்கியே நகர்கின்றது. அதற்கேற்ப, “நற்செய்தி அறிவிப்பே திரு அவையின் முதன்மைப்பணி” என்னும் திருத்தந்தை புனித ஜான்பால் அவர்களின் “மீட்பரின் பணி” (Redemptoris Missio) என்னும் சுற்றுமடலின் வரிகளோடு இம்மடல் தொடங்குகின்றது. ஆட்சிமன்ற சீர்திருத்தங்களோடு, 2013 ஆம் ஆண்டு, மார்ச் 13 அன்று தாம் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்படுவதற்கு முந்தையக் கூட்டங்களில், கர்தினால் ஜோர்ஜ் மேரியோ பெர்கோலியோவாக நம் திருத்தந்தை அடிகோடிட்டுக் காட்டிய கருத்துகளை மீண்டும் பிரதிபலிப்பதாக இவ்வாணை மடல் அமைந்துள்ளது. “உலகு சார் ஆன்மீகம்” (spiritual worldliness) என்பது, திரு அவையில் ஆகப்பெரும் தீமை எனக்கூறும் இம்மடல், “திரு அவை தன்னிலையிலிருந்து வெளியேறிச் சென்று விளிம்புநிலை மக்கள் நடுவில் மறைபணியாற்றக் கடமைப்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டுகின்றது.

திருத்தந்தை பிரான்சிசும்

முக்கிய மாற்றங்களும்

திருத்தந்தையின் நேரடித் தலைமையில் நற்செய்தி அறிவிப்பிற்கான பேராயத்தை (Dicastery for Evangelization) பேராயங்களின் பட்டியலில் முதலாவதாக உருவாக்கியதோடு, பிறரன்பு செயல்களுக்கான பேராயம் (Dicastery for the Service of Charity), கலாச்சாரம் மற்றும் கல்விக்கான பேராயம் (Dicastery for Culture and Education) மற்றும் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான பேராயத்திற்குள் (Dicastery for the Doctrine of the Faith) சிறார்களைப் பாதுகாப்பதற்கான புதிய ஒழுங்குப் பிரிவு ஆகியவற்றையும் காலத்திற்கேற்ப உருவாக்கியிருப்பது இவ்வாணை மடலின் வளர்ச்சிக்குரிய முக்கிய அம்சமாகும். இதன் மூலம் தற்போது உரோமைச் செயலகமானது (Roman Curia) 16 பேராயங்களோடு, மூன்று நீதித்துறை அமைப்புகள் (Judicial bodies), நிதி அமைப்புகள் (Financial bodies), மூன்று அலுவலகங்கள் (பாப்பிறை இல்லத் தலைமையகம், பாப்பிறை திருவழிபாட்டகம், புனிதத் திரு அவையின் பாப்பிறை நிர்வாகியின் அலுவலகம்), சட்ட அலுவலர்கள் மற்றும் பாப்பிறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பாப்பிறைச் செயலகம் (Papal Secretariat) என தற்போது பெயரிடப்பட்டுள்ள வத்திக்கான் நாட்டின் தலைமைச் செயலகம் (Secretariat of State), பொது விவகாரங்களுக்கான பிரிவு, நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான தொடர்புப் பிரிவு ஆகியவற்றுடன் புதிதாக பாப்பிறை ஆட்சிமன்ற அலுவலர்களுக்கான பிரிவையும் இணைத்துள்ளது. இவ்வாறு, உரோமைச் செயலகத்தில் (Roman Curia) இம்மடல் உருவாக்கியுள்ள சீர்திருத்தம் திருத்தந்தை பிரான்சிஸின் பணிக்காலத்தில் ஏற்பட்டுள்ள அதிமுக்கிய வளர்ச்சிகளுள் ஒன்றாகும். (1) நற்செய்தி அறிவிப்புப் பணி, (2) திரு அவையில் பொதுநிலையினரின் பங்கு மற்றும் (3) ஏழைகளுக்கான அன்பு செயல்கள் ஆகியவற்றோடு இணைந்த உரோமைச் செயலக செயல்பாடுகள் என்பது திருத்தந்தை அதிகம் வலியுறுத்தும் கரிசனையுடன் கூடிய மேய்ப்புப்பணிக்கான முன்னுரிமையாகும்.

முக்கியத்துவம் பெறும் மறைபணி

மறைபணியைத் திரு அவையின் இதயமாக மட்டுமன்றி, வத்திக்கானின் இதயமாகவும் கருதுவது இம்மடலின் அதிமுக்கிய அம்சமாகும். இம்மடல் திரு அவையின் மறைபணிச் செயல்களை நெறிப்படுத்தும் இறைமக்களுக்கான நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தையும் (Dicastery for Evangellization), கிறித்தவம் பரவலாக்கப்படாத நாடுகளில் நம்பிக்கையை விதைக்கும் புதிய நற்செய்தி அறிவிப்பிற்கான பாப்பிறைப் பணிக்குழுவையும் (Pontifical Council for Promoting Evangelization) ஒன்றிணைத்து “தலையாய பேராயத்தை” (Super-Dicastery) உருவாக்கியுள்ளது. இவ்வாறு, தன்னையே தற்காத்துக் கொள்வதல்ல; மாறாக, நற்செய்தி அறிவிப்பே திரு அவையின் அதிமுக்கியப் பணி என்னும் கருத்தை இம்மடல் வலியுறுத்துகின்றது. திருத்தந்தை பிரான்சிஸின் முதல் மடலான “நற்செய்தியின் மகிழ்ச்சி” (Evangelii Gaudium) என்னும் ஏட்டில் வலியுறுத்தப்பட்ட இக்கருத்தை உள்வாங்கியே இம்மடல் “நற்செய்தியை அறிவியுங்கள்” என்னும் வார்த்தைகளோடு தொடங்குகின்றது.

நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் அமைப்புச்சட்டத்தை உற்று நோக்கினால் இன்னும் சில பிரமிப்பூட்டும் உண்மைகள் அங்கு இழையோடுவதைக் காணலாம். பேராயங்களின் வரிசையில் (Dicastery for Doctrine of the Faith) நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான பேராயத்தை விட முதன்மையானதாக நற்செய்தி அறிவிப்பு பேராயம் (Dicastery for Evangelization) உருவாக்கப்பட்டுள்ளது. உரோமைச் செயலகத்தைக் (Roman Curia) குறித்த முந்தைய  ஏடான  “நல்ல மேய்ப்பர்” (Pastor Bonus) ஆவணம் நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான பேராயத்தைத்தான் (Dicastery for Doctrine of the Faith) முதன்மையான தாகக் கருதியது. இம்மடல் உருவாக்கியுள்ள இம்மாற்றம் “வெளியேறிச் செயலாற்றும்” (ad extra) மறைபணியே முதன்மையானது என்னும் கருத்தை முன்னிறுத்துவதாக உள்ளது. திரு அவை குறித்துத் திருத்தந்தை பிரான்சிஸின் கண்ணோட்டமும் அதுவே.

முக்கியத்துவம் பெறும் ஏழைகளுக்கான பிறரன்பு பணி

திருத்தந்தை பிரான்சிஸின் மிக முக்கிய, வியக்கத்தக்க அணுகுமுறை, திருத்தந்தையின் தனிப்பட்ட பிறரன்பு பணிகளை (Personal Charity) மறு சீரமைப்பு செய்துள்ளதாகும். இதுவரை திருத்தூதுப்பீட பிறரன்பு செயல்களுக்கான அலுவலகத்தில் திருத்தந்தையின் கரமாக ஓர் ஆயர் செயல்பட்டு வந்த நிலை, தற்போது திருத்தந்தையின் பிறரன்பு பணிக்கான பேராயம் (Dicastery for the Service of Charity of the Pope) என மாற்றம் பெற்றுள்ளது. இப்பேராயம், நற்செய்தி அறிவிப்பு பேராயம் (Dicastery for Evangelization), நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான பேராயம் (Dicastery for Doctrine of the Faith) ஆகியவற்றிற்கு அடுத்து மூன்றாவதாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்பு, இவ்வலுவலகப் பொறுப்பு பலகாலம் பணியாற்றியும், முக்கியத்துவம் பெறாத ஒரு வயதான ஆயருக்கு, அவரது ஓய்வுக்குப் பிறகு, அவரது பெயருக்குக் கிடைக்கும் கௌரவப் பதவியாக மட்டுமே இருந்து வந்தது. தற்போதோ, திருத்தந்தை  இப்பொறுப்புக்கு கர்தினால் ஒருவரை நியமித்ததோடு, அவரது பதவியையும், அலுவலக நிதி நிலையையும், உயர்த்தி திரு அவை ஆட்சி மன்றத்தின் முக்கியப் பொறுப்பாக இதனை மாற்றியுள்ளார்.

“நற்செய்தியின் மகிழ்ச்சி” (Evangelii Gaudium) ஏட்டைத் தொடர்ந்து “நற்செய்தியை அறிவியுங்கள்” (Praedicate Evangelium) என்னும் தற்போதைய ஏடும் கிறிஸ்துவின் மீட்கும் அன்பைப் பறைசாற்றும் பணியே திரு அவையின் முதன்மைப் பணி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது. இப்பறைசாற்றும் பணி நடைமுறையில் வெளிப்படும் தெளிவான இரக்கச் செயல்களோடு, இணைந்து செல்லவேண்டும். திருத்தந்தையின் கரமாக ஓர் ஆயர் செயல்பட்டு வந்த திருத்தூதுப்பீட பிறரன்பு செயல்களுக்கான அலுவலகத்தை தற்போது திருத்தந்தையின் பிறரன்பு பணிக்கான பேராயமாக திருத்தந்தை ஏன் மாற்றினார் என்ற கேள்விக்கு இதுவே பதிலாக அமைகின்றது.

இம்மடலின்படி, உலகின் எந்த மூலையில் பேரழிவுகளோ, தேவையோ ஏற்பட்டாலும் பாதிக்கப்படும் ஏழைகள், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் ஆகியோருக்கு திருத்தந்தையின் பெயரால் உதவும் இப்பேராயம், கடவுளின் எல்லையற்ற இரக்கப் பெருக்கை வெளிப்படுத்தும் அமைப்பாக திகழ்கின்றது. திருத்தந்தையின் பதிலாளாக செயல்படும் பிறரன்பு செயல்களுக்கான பேராய ஆணையரின் வழிகாட்டுதலுக்கேற்ப இப்பேராயம் செயல்படும். உலகில் தேவையும், அவசரமும் ஏற்படும்போது எவ்வாறு உதவுவது என்னும் திட்டங்களைத் திருத்தந்தையே தீர்மானிப்பார். திருத்தந்தையின் நற்பணிகளுக்கான நன்கொடைகளைக் கேட்டுப்பெறுவதும், அவற்றை நிர்வகித்து, தேவையில் உழலும் ஏழைகளுக்கு வழங்குவதும் இவ்வாணையத்தின் தலையாய பணியாகும்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தமது “கடவுள் அன்பாயிருக்கிறார்” (Deus Caritas est) என்னும் முதல் சுற்றுமடலில் திரு அவை இயல்பிலேயே  (1) நற்செய்தி அறிவிப்பு, (2) கடவுளை வழிபடுதல் மற்றும் (3) பிறரன்பு செயல்கள் என்னும் முப்பெரும் பணிகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஏற்கனவே தமது மறைபணி என்னும் கருத்தாக்கத்தின் வழியாகத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பாலைப் பின்பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பிறரன்பு பணிகளை திரு அவையின் ஆட்சி மன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டையும் பின்பற்றிப் பணியாற்றி வருகின்றார்.

குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கிய அம்சமும் இதில் அடங்கியுள்ளது. பொதுவாக, ஒரு திருத்தந்தையின் மறைவினாலோ, ஓய்வினாலோ உரோமைத் திருப்பீடம் காலியாகும்போது, உரோமைச் செயலகத்தின் (Roman Curia) அனைத்து ஆளுநர்களும் தங்கள் பொறுப்பை இழந்துவிடுவர். இறைவனின் இரக்கம் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒப்புரவு அருளடையாள உள்விவகாரங்களுக்குப் (Internal Forum) பொறுப்பான கர்தினால் மட்டுமே தமது பணியைத் தொடர்ந்தாற்றுவது வழக்கமாக இருந்துவந்தது. வியப்பூட்டும் வகையில், தற்போது இந்த விலக்கு பிறரன்பு பணிகளுக்கான பேராய ஆளுநராக உள்ள கர்தினாலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இறைவனின் இரக்கத்தைப் போலவே, பிறரன்பு பணிகளும் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற கருத்து இதில் மேலோங்கி நிற்கின்றது. உரோமைத் திருப்பீடம் காலியாகும்போதுகூட, பிறரன்பு பணிகளுக்கான பேராய ஆளுநராக உள்ள கர்தினாலின் பணி தொடரும் என்ற இவ்வம்சம் திருத்தந்தை பிரான்சிஸ் ஏழைகள் மீதும், தேவையிலிருப்போர் மீதும் கொண்டிருக்கும் மேய்ப்புப்பணி கரிசனையை வெளிப்படுத்துகின்றது.

முக்கியத்துவம் பெறும் பொதுநிலையினர்

உரோமைச் செயலகத்தில் (Roman Curia) எந்தத் துறையையும் பொதுநிலையினராக உள்ள எந்த ஆணோ, பெண்ணோ தலைமையேற்று வழி நடத்தலாம் என்பதன் மூலம், தற்போது திருத்தந்தை, பொதுநிலையினருக்காகத் திரு அவையின் கதவுகளைத் திறந்து வைத்துள்ளார். அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பு கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளது: “இறை மக்களில் எவரும் தங்களது ஆளுகை அதிகாரத்தின் அடிப்படையிலும் (Power of Governance), பணி மற்றும் திறமையின் அடிப்படையிலும் உரோமைச் செயலகத்தின் எந்த ஆணையகத்திற்கோ அல்லது அலுவலகத்திற்கோ தலைமையேற்கலாம்” (Praedicate Evangelium - இயல் 2, பிரிவு 5). இதன்மூலம் இரண்டாம் வத்திக்கான் சங்கம் பொதுநிலையினரின் பங்கு குறித்து கண்ட கனவைத் திருத்தந்தை நனவாக்கியுள்ளார்.

தலைமைப் பொறுப்புகளிலும், பிறவற்றிலும் பொதுநிலையினருக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திருத்தந்தையின் இவ்வுறுதியான முடிவு மிகவும் போற்றுதற்குரிய ஒன்று. இதை இம்மடலின் முன்னுரையிலேயே நினைவுகூரும் திருத்தந்தை “திரு அவையில் திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அருள் பொழிவு பெற்ற பணியாளர்கள் மட்டுமே நற்செய்திப் பணியாளர்கள் அல்ல; எனவே, செயலக சீர்திருத்தம் என்பது, நிர்வாகப் பொறுப்புகளில் பொதுநிலையினருக்கு முக்கியத்துவம் தருவதாக அமைய வேண்டும்”  எனத் தெளிவுபடுத்துகின்றார்.

அனைத்து ஆட்சி மன்ற அமைப்புகளுக்கும் “பேராயம்” என்னும் பொதுப்பெயரை வழங்குவதன் மூலம், செயல்படுத்தும் அதிகாரம் (Executive Power) கொண்ட அமைப்புகளுக்கும் (ஆணையங்கள் - Congregations), பரிந்துரை மட்டுமே வழங்கும் அமைப்புகளுக்கும் (பாப்பிறைப் பணிக்குழுக்கள் - Pontifical Councils) இடையிலான வேறுபாட்டை இம்மடல் களைகின்றது.

திருப்பணியாளர்களை நிர்வகிக்கும் ஆயர்களுக்கான பேராயம் (Dicastery for the Bishops), திருப்பணியாளர்களுக்கான பேராயம் (Dicastery for the Clergy) ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து பேராயங்களும் பொதுநிலை ஆண் அல்லது பெண் தலைமையில் இயங்க வேண்டும் என்பதே இம்மடலின் கொள்கை. உரோமைச் செயலகத்தின் (Roman Curia) அனைத்து நிறுவனங்களும் திருத்தந்தை அளித்துள்ள அதிகாரத்தின் பெயரால் இயங்குவதால், “தங்களது தனி தகுதி வரம்பு (Personal Competence) ஆளுகை அதிகாரம் (Power of Governance), குறிப்பிட்ட பணியுரிமை (Particular Function)” ஆகியவற்றால் பொதுநிலையினரும் இவ்வமைப்புகளை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாகின்றனர். பொதுநிலையினர் பற்றிய சங்கத்தின் இறையியலும் இதனையே எடுத்தியம்புகின்றது. இவ்வாறு, ஓர் ஆணையத்தின் தலைமை நிர்வாகியாகவோ, செயலராகவோ இருக்கும் ஆயர் ஒருவர், தமது ஆயருக்கான அதிகாரத்தால் அல்ல; மாறாக, திருத்தந்தை அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. இதனால் இந்நிர்வாக அதிகாரத்தைப் பெறுபவர் ஆயராக இருந்தாலும், துறவியாக இருந்தாலும், பொதுநிலை ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலும் சமமான உரிமையையே பெறுகின்றார்.

2018 முதலே சமூகத்தொடர்புக்கான பேராயத்தின் (Dicastery for Communication) தலைமை நிர்வாகியாக திரு. பவுலோ ரூஃபினி என்னும் பொதுநிலையினர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறப்பாக, 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று, உலகளவில் ஆயர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பைக் கொண்ட பேராயத்தின் உறுப்பினர்களாக மூன்று பெண்களையும் (இரு துறவியர், ஒரு பொதுநிலையினர்) திருத்தந்தை நியமனம் செய்துள்ளார்.

நிறைவாக...

நோக்கம் செயலாக்கம் பெற்றுவிட்டது. இருப்பினும் இன்னும் நம் முன்னிருக்கும் பணி என்ன? உண்மையான சவால்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்தகு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. “நற்செய்தியை அறிவியுங்கள்” (Praedicate  Evangelium) என்னும் இந்த திருத்தூதுப்பீட ஆணை மடல் உரோமைச் செயலகத்தை (Roman Curia) சீர்திருத்த வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸின் பணிக்கால இலக்குகளுள் ஒன்றை நிறைவேற்றியிருக்கின்றது.

இம்மடலுக்கு முன்பும் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது, இம்மடலின் அறைகூவலுக்கேற்ப, மறைபணி மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணி உள்ளீடுகள் தங்களது விதிமுறைகளில் இருப்பதை உரோமைச் செயலகத்தின் அனைத்து உறுப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.

நற்செய்தி அறிவிப்புக்கான முக்கியத்துவம், பொதுநிலையினருக்கான பங்கு மற்றும் ஏழைகளுக்கான முன்னுரிமை என்னும் இக்கூறுகளே இப்புதிய திருத்தூதுப்பீட ஆணை மடலை இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைகளோடு இணைக்கின்றது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை முன்னெடுக்கும் இம்மடல், நற்செய்திப்பணி, சேவை மனநிலை, கூட்டியக்க மனப்பாங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதே உரோமைச் செயலகம் என்னும் பார்வையை இன்னும் விசாலமாக்கியுள்ளது.

திருத்தந்தையின் ஆகப்பெரும் இப்பணியை உளமார வரவேற்பதோடு, திரு அவையின் அதிகாரிகள் மட்டுமின்றி, மறை பணியாற்றும் கடமை பெற்றுள்ள சீடர்களாகிய இறைமக்கள் நாம் ஒவ்வொருவருமே “திருத்தந்தை பிரான்சிஸின் மனநிலை” கொண்டவர்களாக வாழ, பணியாற்ற முற்படுவோம். நம்முன் வைக்கப்பட்டுள்ள கடமையை மனதில் கொண்டு, நமது பொதுநிலை வாழ்விலும் மறை பணி ஆர்வத்தையும், ஏழைகள் மீதான கரிசனையையும், கூட்டியக்க மனநிலையையும் உள்வாங்குவோம். ஏனெனில், நாம் அனைவருமே மறைபணி மனநிலை கொணடவர்களாகத் திகழ்வதில் தான் அமைப்பு ரீதியான இம்மாற்றம் அடங்கியுள்ளது. உள்ளார்ந்த இந்த மாற்றம் ஏற்படாதவரை வெளியமைப்பில் ஏற்படுத்தும் எந்த மாற்றமும், சாத்தியமில்லை என்பதை உணர்ந்தவர்களாய், தன் பணி இலக்கைப் பிரதிபலிக்கும் முதல் மடலான “நற்செய்தியின் மகிழ்ச்சி”யில் திருத்தந்தை வெளிப்படுத்திய நற்செய்தி அறிவிப்புக் கனவை நனவாக்க நாமும் முன்வருவோம்.

Comment