மலம் கலந்த குடிநீர்
மனித மாண்பை மறுக்கும் மாபாவம் தீண்டாமை
புதுக்கோட்டை மாவட்டம், இறையூருக்கு அருகில் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மற்றும் பிற இனமக்கள் வசித்து வருகின்றனர். தலித் காலனிக்கென்று தனி தண்ணீர் தொட்டி உள்ளது. அதிலிருந்து வரும் குழாயில் தண்ணீர் அருந்திய தலித் பிள்ளைகள், பெரியோர் பல நோய்களால் தாக்கப்பட்டனர். 26.12.2022 இல், இதற்கு காரணம் தலித் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மனித மாண்பை சிதறடிக்கும் இக்கொடுமையான சம்பவம் அறிந்தவுடன் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் தலைவர் சண்முகம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார். வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு செயல்பாடுகள்
அரசு தரப்பில் மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இடத்தை பார்வையிட்டனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டது. அதே கிராமத்தில் உள்ள மூப்பனார் கோயிலில் வழிபட தலித் மக்களுக்கு தடை, ஓட்டல் கடைகளில் இரட்டைக்குவளை முறை கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தலித் மக்கள் கோவிலில் வழிபட செய்தனர். இரட்டைக்குவளை இருந்த ஓட்டல் பொறுப்பாளர்களையும், வழிபாட்டை தடுத்த பெண்ணையும் கைது செய்தனர். ஆனால், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்யவில்லை. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலித் மக்கள் சார்பாக செய்த செயல்களைப் பாராட்டுகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு, CBCID காவல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் தீண்டாமை
சாதீயம் இந்திய நாட்டின் இழிவு ஆகும். மனித மாண்பை மறுக்கும் கொடிய பாவம். இந்திய சமூகம் சாதியின் மேல் கட்டப்பட்ட சமூகம். சாதீயம் ஆரியர்களின் கற்பனைக்கதை. சமூகத்தில் தலைமையை தக்கவைப்பதற்காக ஆரியர்கள் கண்டுபிடித்த தந்திரம். வேத காலத்தின் பொய்மூட்டை. ரிக்வேதத்தில் புருஷசுக்தா என்ற கருத்தியலில் கடவுள் வர்ணத்தை படைத்தார் என்ற பொய்யான பிரச்சாரம். சாதீய வேறுபாட்டினை வேதநூல்கள், புராணங்கள் புனிதப்படுத்தின. மனு (அ) தர்ம இந்து சட்டம் சாதிவேறுபாடு தீண்டாமையை கடுமையாக்கியது. அரசர்கள் அதன்படி ஆட்சி செலுத்தினர்.
பிராமண வர்ணதர்மத்தை ஏற்காதவர் தீண்டப்படாதவர்களாக தண்டிக்கப்பட்டனர். மனித உரிமை மாண்பை எதிர்த்து, புத்தர் முதல் டாக்டர் அம்பேத்கர், திருமாவளவன் வரை தொடர்ந்து போராடி வருகின்றனர். இருப்பினும், தீண்டாமை, சாதீய வேறுபாட்டினை ஒழிக்க இயலவில்லை. சாதீயம் பல உருவகங்களில் வளர்க்கிறது. சமூகம், அரசியல், சமயம், பண்பாடு, கல்வி அனைத்திலும் ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் நாடி, நரம்பு, மரபு அணுக்களில் ஒன்றித்து உள்ளது. கிறித்தவ பொதுநிலையினர், திருநிலையினர் மத்தியிலும் நிறைந்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது. சட்டம் 17 இல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதனை எந்த வகையில் செயல்படுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை சட்டப்படி கண்டிக்கத்தக்க குற்றம் ஆகும்” என்று, சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாக்கப்பட்டது. 1989 இல், மாற்றி அமைக்கப்பட்ட SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிணையில் வரமுடியாத தண்டனையாக கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், தீண்டாமை குற்றங்களான தலித் மக்கள் மீதான தாக்குதல், பாலியல் வன்கொடுமை, சொத்துக்களை நாசப்படுத்துதல், ஆணவக்கொலைகள், கோயில் நுழைவு தடுப்பு, இரட்டைக்குவளை போன்ற வன்கொடுமைகள் தொடர்கின்றன.
தொடரும் தீண்டாமை
நேரடி களஆய்வு அறிக்கையில் தீண்டாமை விவரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி அருகே இருக்கிறது கருப்பட்டிப்பட்டி கிராமம். கிராமத்தின் மையப்பகுதியிலுள்ள விநாயகர் கோயில் குளத்தில் பட்டியல் சமூகத்தினர் யாரும் குளிக்கக்கூடாது என்ற ஊர்க்கட்டுப்பாடு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிலட்டூர், தாந்தாணி, கருக்காகுறிச்சி, கன்னியான், கொல்லை, களபம் எனப் பல கிராமங்களிலும், இன்றும் இரட்டைக்குவளை முறை உட்பட பல வகைகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும் இதே போன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவனம்பட்டு கிராமத்தில் பட்டியல் சமூகத்தவர் இறந்துவிட்டால் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல பாதையே இல்லை. ரெட்டனை கிராமத்தில் கல்யாண மண்டபங்களில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை. இதைவிடக் கொடுமையாக திண்டிவனம் திருவெண்ணெய்நல்லூர் கிராமங்களில் நியாயவிலைக் கடைகளில் சமூகத்தவர் பொருள்களை வாங்கும் தினத்தன்று பட்டியல் சமூகத்தவருக்கு அனுமதி கிடையாது.
கரூர் மாவட்டம் கொக்கம்பட்டி கிராமத்திலுள்ள பட்டியலின மக்கள் மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் செருப்பணிந்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. பாகநத்தம், தாளியாப்பட்டி, ஜல்லிவாட நாயக்கனூர், வெடிக்காரன்பட்டி, பூலாம்பட்டி, மாமரத்துப்பட்டி கிராமங்களிலும் இதே நிலைதான். சின்னமநாயக்கன் பட்டியில் அரசுக்குச் சொந்தமான சமுதாயக் கூடத்தையே பட்டியலின மக்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், அந்தியூர் போன்ற தாலுகாக்களில் தீண்டாமை பெரிய அளவில் இருக்கிறது. குறிப்பாக, கிராமங்களில் டீக்கடைகள், ஹோட்டல்களில் பட்டியல் இனத்தவர்களை உட்கார விடுவதில்லை. சலூன் கடைகளிலும் அனுமதிப்பதில்லை.
தமிழகத்திலேயே அதிகம் தீண்டாமைக் கொடுமை நடக்கும் இடமாக கொங்கு மண்டலம் இருக்கிறது. ஆனால், சத்தமே வெளியில் வராது. அந்த அளவுக்குப் பட்டியலின பழங்குடி மக்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் ஏ.டி. காலனியுடன், புது காலனி என்று காலனியுடன் முடியும் பெயர்கள்தான் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளின் அடையாளமாக இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு, மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமைச்சுவர் இடிந்து விழுந்து, 17 பட்டியலின மக்கள் உயிரிழந்தது பெரும் பேசுபொருளானது.
நீலகிரி மாவட்டத்தில் சாதீயத் தீண்டாமைக் கொடுமைகள் மிக நுட்பமாக நடக்கின்றன. கோத்தகிரி அருகிலுள்ள பூபதியூர் எனும் தலித் கிராமத்துக்குச் செல்லும் நடைபாதை தடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தடுப்பை அகற்றுமாறு உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், அரசு அதிகாரிகள் இன்றளவும் மௌனம் காக்கிறார்கள்.
தீண்டாமையின் நச்சு வேர்கள் தஞ்சை மாவட்டத்தில் மிக ஆழமாக வேர்விட்டு கிளை பரப்பியிருக்கிறது. ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்களம் கிராமத்தில் இன்றுவரை டீக்கடைகளில் இரட்டைக்குவளைதான். பட்டியலின மக்களுக்கு மளிகைக்கடையில் பொருள்கள் தருவதில்லை.
சமீபத்தில் மதுரை பேரையூர் பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலைப் புதைக்கப் பெரும் போராட்டமே நடந்தது. போராடிய பெண்கள் உட்பட 34 பேரைக் கைது செய்தது காவல்துறை. மனித உரிமை ஆணையம் தலையிட்டதால் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதிலும் இருவர்மீது பொய் வழக்கு பதிவுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள். இன்றுவரை அவர்களுக்கு ஜாமீன்கூட கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி தொடங்கி, சென்னை வரை இந்தச் சாதீயக் கொடுமைகள் சிறிதும், பெரிதுமாக நீக்கமற நிறைந்திருக்கினறன. பள்ளிகளுக்குச் செல்லும் பட்டியலின பழங்குடியின குழந்தைகள் முதல் இடுகாட்டுக்குச் செல்லும் இறந்த உடல்கள் வரை கடுமையான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்கின்றன. பொதுத்தெருவில் நடக்க, தெருவில் வாகனம் ஓட்ட, செருப்பணியத்தடை, டீக்கடை, ஹோட்டல், மளிகைக்கடை, சலூன், கோயில்குளம், பேருந்து, ரேஷன் கடைகளில் அவமதிப்பும், அனுமதி மறுப்பும், பள்ளிகளில் பணியிடங்களில் பாராபட்சம் சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஊரைவிட்டு விரட்டுதல், கொலைசெய்தல், தலித் கிராமத்து ஊராட்சித் தலைவர்களை அவமதித்தல், செயல்படத் தடுத்தல், அதன் நிதிகளை மடைமாற்றுதல் எனத் தீண்டாமை குற்றங்கள் தொடர்கின்றன.
தீண்டாமை ஒழிப்பு
மலம் கலந்த தலித் மக்களின் தனி நீர்த்தொட்டியை இடித்துவிட்டு, சாதிபேதமற்ற பொது நீர்தொட்டி கட்டப்படும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அரசு உறுதி அளித்துள்ளது. அரசு அதிகாரிகள் நீதியோடு நடந்தால் தீண்டாமை ஒழிக்கப்படும். ஆனால், அதிகாரிகள், அரசியல் வாதிகள் தீண்டாமையை முற்றிலுமாக ஒழிக்க முன்வருவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தொடர்ந்து போராடுகின்றார். கட்சிகள் பல மௌனம் காக்கின்றன. பொது மக்களும், தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைக் கண்டு அமைதியாக உள்ளனர். சமூகம் மற்றும் அனைத்து சமயத்திலும் காணப்படும். ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும். 1989 ஆம் ஆண்டு, வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் தலித் மக்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரும் இணைந்து, சமத்துவ சமூகம் படைக்க அர்ப்பணத்துடன் உழைக்க வேண்டும். சமத்துவம் நீதியும் நிறைந்த இறையாட்சி சமூகம் படைப்போம். எல்லாருக்கும் நிறை வாழ்வு அளிப்போம்.
Comment