No icon

‘மன்னிப்பா? பரம்பரைக்கே இல்லையே!’

எந்தவிதச் செலவும் இல்லாமல், கேட்காமலேயே கிடைக்கும் ஒன்று இவ்வுலகில் உண்டு என்றால், அது அறிவுரை மட்டுமே என்பர். வயதில் மூத்தோர் சிறுவர்களையும், வளரிளம் வயதினரையும், வாலிபர்களையும்  பார்க்கும்போது, அவர்கள் கேட்காமலேயே அறிவுரைகளை வழங்குவர். இப்படி இவர்கள் கூறும் அறிவுரைகள் குழந்தைப் பருவத்தினருக்குப் புரியாது. ‘ஏன்?’, ‘எதற்குஎன்று புரியாமலேயே சிலவற்றை வாழ்வாக்குவர். வளரிளம் வயதினருக்குப் புரியும்... ஆனால், எதிர்த்துப் பேசப் பயந்து வீட்டிலும், வெளியிலும் அடங்கிச் சென்றுவிடுவர்.

வயதானோரின் அறிவுரைகள் வாலிபர்களுக்குப் புரியும். ஆனால், கேட்கப் பிடிக்காததாலும், பொறுமையில்லாததாலும், ‘தனக்குத் தெரியாத எதை இவர்கள் சொல்லப் போகின்றார்கள்?’ என்ற இறுமாப்பாலும், ‘படிக்காத இவர்கள் நமக்கு அறிவுரை கூறுவதா?’ என்ற உயர்வு மனப்பான்மையாலும் அடங்கியும் போக மாட்டார்கள், அடக்கியும் வாசிக்க மாட்டார்கள். தங்களது எதிர்ப்பைச் சூழ்நிலைக்கேற்ப அறிவுரை சொல்பவர்களின் முக்கியத்துவத்திற்கும் எதிர்வினையாற்றிக் கொண்டு சென்றுவிடுவர். இது நாணயத்தின் ஒரு பக்கம். ஆனால், அறிவுரை வழங்கும் பலரும் தங்களைத் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அப்படித் தங்களையே ஆராய்ந்து பார்ப்பதாக இருந்தால், திருத்தப்பட வேண்டியவர்கள் வளரிளம், வாலிப வயதினரை விட தாங்கள்தான் என்ற கசப்பான உண்மையை உள்வாங்க முடியும். இன்றைய உலகில் வயதானோரைப் பெரும்பாலும் தாக்கியிருக்கும் நோய்களான இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், தைராய்டு, தூக்கமின்மை, சுரப்பிகளின் செயலிழப்புகள் போன்றவற்றுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உடல் நோய் அல்ல; மாறாக, மன நோய்! இந்த மனநோய்க்கு மூல காரணமாக மறைந்திருப்பது இதயத்தின் ஆழத்தில் புதைத்து வைத்து, அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப நினைவுப்படுத்திப் பார்க்கும் (Rewind) கடந்த கால கசப்பான நிகழ்வுகளும், மன்னியாமையுமே!

வயது முதிர முதிர மன்னிக்க முடியாமல் வருத்தத்தோடும், விரக்தியோடும் வாழும் மனிதர்கள் பலரையும் நாம் காண முடியும். அவர்களின் வற்றிப்போன உடலும், சுருங்கிப்போன தோலும், இடுங்கிப்போன கண்களும், சிரிக்க முடியாது இறுகிப்போன உதடுகளும் முதுமையின் காரணத்தால் உருவானவை மட்டுமல்ல; மன்னிக்க இயலாமல் பசுமையாக இருக்கும் மறக்கப்பட வேண்டிய நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளோடு தொடர்புடைய மனிதர்களுமே!

இவை உளவியலாளர் கூறும் உண்மைகள்! இவற்றைப் புரிந்து கொள்ள நாமும் உளவியல் கற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஓரளவு உள்வாங்க நம்மாலும் முடியும். ‘நன்றாக இருக்கின்றீர்களா?’ என்ற இந்தக் கேள்வியை வயதானவர்களிடம் கேட்டுப் பாருங்கள். தங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது பதில் இருக்கும்.

காலம் நகரவே இல்லை’, ‘எப்போது அழைப்பு வருமோ?’, ‘யாருக்கு வேண்டும் இந்த வாழ்க்கை?’, ‘ஏமாற்றி விட்டானே’, ‘நன்றியே இல்லையே’, ‘பணத்தைப் பறித்து விட்டானே’, ‘மகன் திரும்பிப் பார்ப்பதே இல்லையே’, ‘மறக்க முடியலையே’, ‘மன்னிக்க முடியலையே...’ என அடுக்கடுக்கான பதில்கள் வரும். எத்தனை பேர் சொன்னாலும், பக்க விளைவுகளை எடுத்துச் சொன்னாலும், மன்னிக்க முடியாமலேயே இறுதிவரை வாழ்வோர் உள்ளனர். இது நாணயத்தின் மறுபக்கம்.

மன்னிப்புஎன்ற சொல் கேட்பதற்குச் சாதாரணமாகத் தெரியும். பிறருக்காகச் சொல்லும்போது அதை விடச் சுலபமாகத் தெரியும். ஆனால், அவரவர் வாழ்க்கையில் கடைபிடிப்பது சுலபமானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லோருக்கும் ஒன்றுபோல் தெரிவதில்லை. ஒருசிலருக்குச் சாதாரண குப்பை போன்ற விசயங்கள் கூட பெரியதாகத் தெரியும். இன்னும் சிலருக்கு வேதனை தரும் செயல்கள் கூட, சாதாரணமாகத் தெரியும், எண்ணும் எண்ணங்களுக்கும், தாக்கங்களுக்கும் ஏற்ப மன இயல்பில் மாற்றங்கள் உருவாகும்.

தனக்குத் தீங்கு செய்தவர்கள், தனது பெயருக்குக் களங்கம் விளைவித்தவர்கள், தனது சொத்துகளை அபகரித்தவர்கள், தனது பணத்தைத் திருடியவர்களை... மன்னிக்கும் தன்மையில் மனிதர்களை மூன்று பிரிவினராக வகைப்படுத்தலாம்.

மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாதுஎன்பவர்கள். ‘மன்னித்து விட்டேன்; ஆனால், மறக்க முடியவில்லைஎன்பவர்கள் எந்த நாடாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றுபவராக வாழ்ந்தாலும்  பெரும்பான்மையான மக்கள் முதல் பிரிவுக்குள் அடங்கிவிடுவார்கள். குறைந்த அளவு மக்கள் இரண்டாம் பிரிவிலும்மிகக் குறைந்த மக்கள் மூன்றாம் நிலையிலும் இருப்பர்.

அன்றாடம் செபிக்கின்றோம், பிறருக்கு ஆலோசனை வழங்குகின்றோம் என்று எண்ணும் நாம் கூட முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலேயோ இருப்போம். மூன்றாம் நிலை கடவுள் இயல்பு. சிலுவையில் தொங்கக் காரணமானவர்களை, ஆணிகளால் அறையப்படக் காரணமானவர்களை மன்னிப்பது சுலபமானதல்ல. புனித அன்னை தெரேசாவை நாம் ஏன் பாராட்டுகின்றோம்? கையில் எச்சில் உமிழ்ந்தவனையும் மன்னித்ததால்தானே! திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பாலை நாம் ஏன் நினைவில் வைத்துள்ளோம்? தன்னைச் சுட்டவனையும் நண்பனாகப் பாவித்ததால்தானே! இது மூன்றாம் நிலையினரின் பண்பு!

இன்றைய குடும்பச் சண்டைகளுக்கும், பணியிடங்களில் நடக்கும் பூசல்களுக்கும், மக்கள் கூடும் இடங்களில் உருவாகும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் மன்னியாமையே! ‘‘மன்னிப்பா? அது எங்கள் பரம்பரைக்கே இல்லாத ஒன்றுஎன்று இறுமாப்போடு பேசுபவர் நடுவில், மன்னிப்பின் மாண்பைச் செயல் மூலம் உலகுக்கு உரக்க உரைத்த அருள்தந்தை ஒருவரின் செயலை வாசிக்கும் உங்களில் ஒருசிலர் அறிந்திருக்கலாம்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் மாலா என்ற கிராமத்தில் அருள்பணி. நவீன் குருவானவராகப் பணியாற்றி வருகிறார். அவரை விரும்பாத ஒரு சகோதரர் அவரைத் தாக்கினார். இதை அறிந்த தேவாலய கமிட்டியார் உடனடியாகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு  செய்தனர். வழக்கு நடந்து கொண்டிருந்த தருணத்தில், தான் செய்த தவற்றைப் புரிந்தவராகத் தேவாலய கமிட்டியினரை அணுகினார். வழக்கை வாபஸ் பெற வேண்டினார். ‘பொதுமக்கள் முன்னிலையில் பொது பிரார்த்தனை நேரத்தில் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்என்றனர்.

தனது தவற்றைப் புரிந்தவர் அடுத்த ஞாயிறு பொது பிரார்த்தனையின்போது அருள்பணி. நவீனிடம் மன்னிப்புக் கேட்கும் நோக்கத்தோடு ஆலயத்திற்கு வந்தார். அவர் வாசலில் நிற்பதைப் பார்த்த அருள்தந்தை அவரை தன் அருகில் அழைத்தார். அவர் ஆலயத்திற்கு வந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய அருள்தந்தை, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதை அந்த மனிதரின் கால்களில் ஊற்றிக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட் டார். இதைப் பார்த்த மக்கள் உறைந்து போயினர். ஆச்சரியப்பட்டனர்! அருள்தந்தை நவீன் அந்தச் சகோதரனைப் பார்த்து, “உண்மையாகவே செய்தது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வந்த சகோதரனே, நான் உன்னை மன்னித்துவிட்டேன். நீ என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!” என்றாராம். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தச் சகோதரன், கண்ணீரோடு, புது மனிதனாகி ஆலயத்தை விட்டு வெளியே வந்தார்.

இந்த அருள்தந்தையால் மன்னிக்க முடிந்தது என்றால், நம்மாலும் முடியும்! ‘மன்னித்து விட்டேன்என்று உதட்டளவில் சொல்லிவிட்டு, மனத்தாலும், செயலாலும், சொல்லாலும் வாய்ப்பு வரும் போதெல்லாம் ஊறு விளைவிக்கும்  மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அருள்தந்தையின் இச்செயல் பாராட்டுதற்குரியது மட்டுமல்ல, பின்பற்றுதலுக்கும் உரியது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்ந்து காட்டுவதே உண்மையான போதனை. எத்தனை பேரால் முடிகிறது? மன்னிக்க முடியவில்லையா?

என்னால் மறக்கவும் முடியாது. மறக்க முடியவில்லை. ஆனால், மன்னித்து விட்டேன்என்கிறீர்களா? அது மன்னிப்பு அல்ல! ‘மன்னித்தும் விட்டேன், மறந்தும் விட்டேன்என்று சொல்ல முடி கிறதா? அந்த நிலைதான் உண்மையான மன்னிப்புஇந்த நிலைக்கு வந்தவர்களே பிறருக்கு ஆலோசனையும், புத்திமதியும் சொல்லத் தகுதியானவர்கள்.

(தொடரும்)

Comment